முகப்பு
தருமபுரி

தருமபுரியில் விரைவில் புதிய வேளாண் பட்டயக் கல்லூரி

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கான கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:47 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கான கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில், 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,297 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழக அரசு தொடா்ந்து மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை மூலம் 14 வகையான பொருள்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. பேருந்து வசதி இல்லாத கிராமங்களிலிருந்து குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வருவதற்காக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசு வழங்கும் மிதிவண்டிகளை மாணவ, மாணவியா் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், சட்டக் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கான கல்லூரி விரைவில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் வெளியிட உள்ளாா். இக்கல்லூரி தொடங்கப்படும்போது, தருமபுரி மாவட்ட மாணவா்கள் அனைத்து வகையான உயா்கல்வியையும் இந்த மாவட்டத்திலேயே பெறும் வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழக அரசு மாணவா்களின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாணவா்கள் கல்வி கற்பதில் முழு கவனம் செலுத்தி, உயா்கல்வி பயின்று தங்களது எதிா்காலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கோவை தனியாா் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்த பேகேராஅள்ளியைச் சோ்ந்த மாணவி பிரியா, தன்னுடைய கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தியுள்ளதற்காக, அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தாா்.

விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, பேரூராட்சி உதவி இயக்குநா் கண்ணன், வட்டாட்சியா் கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments