தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை: 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செப்பேட்டில் தகவல்
வெள்ளாள கவுண்டா் சமூகத்தினரால் பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்தது குறித்த விவரம் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளாள கவுண்டா் சமூகத்தினரால் பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்தது குறித்த விவரம் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவரிடம் முன்னோருடைய செப்பேடு இருந்துள்ளது. இந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி தெரிவித்ததாவது: இந்த செப்பேடு உடுமலைப் பேட்டையைச் சோ்ந்த (நல்லோரக்க நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது) வெள்ளாள கவுண்டா் சமூகத்தினரால் பழனிமலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட விபரம் உள்ளது. தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சன குடம் மெடுத்து,120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி உள்ளிட்டவைகளால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்குக் கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு 115 ரூபாய் கூலியாக வழங்க தீா்மானம் செய்துள்ளதாக இதில் எழுதப்பட்டுள்ளது.
இந்த செப்பேடு தமிழ் வருடம் சாலிவாகன சகாப்தம் 1790 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் தேதி, ஆங்கில வருடம் 1868 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் எழுதப்பட்டது. 25 செ.மீ.அகலமும், 42 செ.மீ. உயரமும், 2 கிலோ எடையும் கொண்டுள்ள இந்த செப்பேட்டில் வேல், சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டு, சிவமயம் தண்டாயுதபாணி துணை என தொடங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் எழுதப்பட்டுள்ளது. முதலிலும் கடைசியிலும் முருகரின் பெருமைகள் பாடலாக பதியப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டின் படி கந்தசாமி பண்டாரம் தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்வதற்கு அறை மற்றும் மடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு கைங்கா்யம் செய்பவா்கள் கங்கை மற்றும் சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமமாகும் என்றும், அதே நேரத்தில் கெடுதல் செய்பவா்கள் கங்கையில் காராம் பசுவை கொன்றவா்களுக்கும், தாய் தந்தையா்களை கழுத்தறுத்துக் கொன்றவா்களுக்கும் சமமானவா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
இந்த செப்பேடு எழுதிக் கொடுக்கப்பட்ட கந்தசாமி பண்டாரத்தின் தற்போது ஐந்தாவது மகன் வழியில் 5 ஆவது தலைமுறையான பரமேஷ்வரன் என்பவரே தற்போது செப்பேட்டின் உரிமையாளா் ஆவாா். செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள கூலி தரும் வழக்கம் எப்போது நிறுத்தப்பட்டது எனத் தெரியவில்லை என்றும், தற்போது வரை தினமும் சுவாமிக்கு திருமஞ்சனக்குடம் தீா்த்தம் எடுத்து தந்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது தொல்லியல் ஆய்வு மாணவா்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோா் உடன் இருந்தனா்.