எதிர்பார்த்தபடியே கர்நாடக முடிவு...
கார்நாடக மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும், அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்தே ஆட்சி அமைக்கும்'' என்று 2 மாதங்களுக்கு முன்னதாகவே கணித்தேன்...
கார்நாடக மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும், அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்தே ஆட்சி அமைக்கும்'' என்று 2 மாதங்களுக்கு முன்னதாகவே கணித்தேன்; அந்த மாநில அரசியலையும் உள்ளாட்சி மன்றங்களுக்கு நடந்த தேர்தலுக்குப் பிறகு கிடைத்த முடிவுகளையும் அலசி ஆராய்ந்தே அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். அப்போது பல வாரப் பத்திரிகைகளும் செய்தி சேனல்களை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களும் என்னுடைய கருத்துக்கு மாறான கருத்துகளை உறுதிபடத் தெரிவித்தன. இப்போதோ தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு மாற்றிக்கொண்டுள்ளன.
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள் நடந்த சண்டைகளும், பதவிகள் மாறிமாறி ஏலம் விடப்பட்டதும், நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துக் கிடந்ததும், ஆட்சி நிலைக்குமா கவிழுமா என்ற நிச்சயம் இல்லாமல் எடியூரப்பா அடிக்கடி மிரட்டிக் கொண்டிருந்ததும், மாநிலக் கட்சி விவகாரங்களில் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சீர்செய்யும் துணிவு கட்சியின் தேசியத் தலைமைக்கு இல்லாததும் தோல்விக்குக் காரணங்களாகும். அது மட்டும் அல்ல, ஏகப்பட்ட கட்சிகள் இருந்தாலும் வலுவான ஏதாவது ஒரு கட்சிக்கே வாக்களிப்பதுதான் மாநில நிர்வாகத்துக்கு நல்லது என்றே வாக்காளர்கள் எல்லா மாநிலங்களிலும் முடிவு செய்கின்றனர்.
இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய சமீபத்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.
Advertisement
Advertisement
இடதுசாரி கட்சிகளைத் தவிர எல்லா தேசிய, மாநில அரசியல் கட்சிகளிலும் ஊழல் கிருமி புகுந்து வளர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்தும் திறன் கட்சிகளின் தேசிய, மாநிலத் தலைமைகளுக்குக் கிடையாது. அரசியல் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் பணத்தை யார் கையாள்கிறார்களோ அவர்களே கட்சிக்குள் பெரிய அதிகார மையங்களாக உருவெடுத்துவிடுகிறார்கள். கர்நாடகத்தில் சுரங்கத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ரெட்டி சகோதரர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி பாரதிய ஜனதாவின் தலைமையிடம் இல்லை. ஆந்திரத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதே நிலை ஏற்பட்டது. இதன் விளைவு - பலமான தேர்தல் தோல்விகள்.
அரசியல் விமர்சனத்தில் ஈடுபடும் பத்திரிகைகளும் அரசியல் விமர்சகர்களும் தாங்கள் எப்போதுமே தவறாக கணிக்கமாட்டோம் என்ற நினைப்பிலேயே எழுதுகின்றனர், பேசுகின்றனர். எனவே கர்நாடகத்தில் என்ன நடக்கும் என்று முன்னரே கணிக்கத் தவறினாலும் தேர்தல் முடிவுகள் வரவர அரை மணி நேரத்துக்கொருமுறை தங்களுடைய நிலையை மாற்றிக்கொண்டே இருந்தனர்.
பாரதிய ஜனதாவும் கர்நாடக ஜனதா கட்சியும் தேர்தலில் கடுமையாக இழப்பைச் சந்திக்கப் போகின்றன, அதன் பலனை காங்கிரஸýம் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பகிர்ந்துகொள்ளப் போகின்றன என்ற உண்மைகளை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
கடலோரக் கர்நாடக மாவட்டங்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அவர் சென்ற இடங்களில் ஓரிடமும் கிடைக்கவில்லை. அவர் பிரசாரத்துக்குப் போகாத ஒரே தொகுதியில்தான் பாஜக வெற்றி பெற்றது.
""மோடியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், அவருக்கு ஈர்ப்பு இருக்கிறது'' என்பதெல்லாம் புஸ்வாணமாகப் போய்விட்டது. இமாசலத்திலும் அவர் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். அப்படியும் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
மக்களவை பொதுத் தேர்தலின்போது கர்நாடகத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் நிச்சயம் என்பது என்னுடைய இப்போதைய கணிப்பு. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் பாரதிய ஜனதாவிடமிருந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குப் போய்விட்டது. அதுவே மக்களவை பொதுத் தேர்தலின்போது மேலும் குறைந்து காங்கிரஸýக்கே சாதகமாகிவிடும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் ராகுல் காந்திதான். அவர்தான் வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். 9 மாவட்டங்களில் நேரடியாக, தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பாரதிய ஜனதா கட்சி தோற்றும்கூட பணிவைக் கற்கவில்லை. தோல்விக்கு தங்களைத் தவிர ஏனைய விஷயங்கள்தான் காரணம் என்று இப்போதும் ஏதேதோ பேசிவருகிறது. கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நடந்தபோது அழைப்பு இல்லாமலேயே உள்ளே புக முயன்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் ஜேட்மலானியின் செய்கை அதற்கொரு உதாரணம்.
கர்நாடகத் தேர்தல் முடிவுகளை நாட்டின் அனைத்து மாநிலக் கட்சிகளும் பார்த்துக்கொண்டிருந்தன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய கருத்து என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை வலுவாகவும் தெளிவாகவும் இருப்பதை உணர்ந்துள்ளன. பாரதிய ஜனதாவில் கடும் குழப்பம் நிலவுவதைப் புரிந்துகொண்டுள்ளன.
வலுவான, நம்பகத்தன்மையுள்ள தலைவர்களைப் பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மிகவும் மெüனமாக இருக்கின்றன. தங்களுடைய நிலை என்ன என்பதை இவ்விரு கட்சிகளும் மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கும்போதுதான் அறிவிக்கும். பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளுக்கும் உள்ளூர மகிழ்ச்சி. நரேந்திர மோடிக்கென்று செல்வாக்கு எதுவும் இல்லை என்பதால் ஆனந்தப்படும் இன்னொரு கட்சி ஐக்கிய ஜனதா தளம். இனி பிகாரில் அந்தக் கட்சிதான் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி சிக்கலில் சிக்கியிருக்கிறார். அங்கு அரசியல் நிலைமை தெளிவாக இல்லை.
இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இப்போதே கூட நாம் தேர்தல் முடிவுகளை கணிக்க முற்படலாம். நான் எப்போதுமே கூறி வருவதைப்போல, குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டக்கூடாது.
******
அரசியலில் எதைச் செய்தாலும் உரிய காலத்தில் செய்யவேண்டும். காலம் கடந்த செய்கையால் யாருக்கும் பலன் ஏற்படாது. ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் குடும்பத்தாருக்குள்ள தொழில்துறை தொடர்புகள் பற்றி பகீர் பகீரென பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சி.பி.ஐ. துருவித்துருவி விசாரிக்க மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வரலாம். விழிப்போடு இருப்பதாகக் கருதப்படும் செய்தி ஊடகங்கள் இதையெல்லாம் முன்கூட்டியே அம்பலப்படுத்தத் தவறிவிட்டன.
எல்லா அரசியல் கட்சிகளுமே தங்களுடைய கட்சியின் நன்மை கருதியாவது, தங்கள் கட்சிகளுக்குள் இருக்கும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளின் சொத்து மதிப்பென்ன, தொழில் என்ன, யாருடன் கூட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலைத் திரட்டி ஆண்டுதோறும் அக தணிக்கைச் செய்துகொள்வது மிகவும் நல்லது.
ரயில்வே துறையே ஊழலால் முடைநாற்றமெடுத்துக் கிடக்கிறது. சாம் பித்ரோடா போன்ற நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரயில்வே துறையின் நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். சி.பி.ஐ. தனக்கிட்ட பணியைக் கச்சிதமாகச் செய்து வருகிறது.
******
குடங்குளம் அணுமின் நிலையத்தில் சில நிபந்தனைகளுக்குட்பட்டு மின்சார உற்பத்தியைத் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலைய விபத்தால் நம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி பாராட்டத்தக்கது. அதே சமயம் அம்மாதிரி நேராமல் தடுக்க நிபுணர்களின் உதவிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
******
இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு' என்று பதற்றம் ஏற்படுத்தப்பட்டது. நல்ல வேளையாக இருதரப்பும் பேசியே அதை சுமுகமாகத் தீர்த்துக்கொண்டுவிட்டன. இந்த விவகாரம் குறித்து எனக்கு அதிகத் தகவல்கள் தெரியும் என்றாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைப் பகிரங்கமாக விவாதிக்கக்கூடாது என்பதால் ஏதும் சொல்லாமல்விடுகிறேன். நம்முடைய ராணுவத்துக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு அவசியம் என்று மட்டும் கூறிட விழைகிறேன்.
கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.