தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!
வெகுமக்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் அமைந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளாமல் இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சி.
திருவிழா கூட்டத்தில் குழந்தை காணாமல் போய்விட்டதைப் போல, தேர்தல் ஜனநாயகத்தில் குடிமக்கள் காணாமல் போய் விட்டார்கள். இதை கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், இங்கு மக்கள் இருக்கிறார்கள்; ஆனால், குடிமக்கள் இல்லை. வெகுமக்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் அமைந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளாமல் இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சி.
அரசமைப்பின் முகவுரை "இந்திய மக்களாகிய நாம்...' என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. குடிமக்கள்தான் இறையாண்மையின் இறுதி அதிகாரம் படைத்தவர்கள் என்பது இதன் உட்பொருள். நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் தாங்கள் என்று பிம்பப்படுத்திக் காட்டக் கூடிய எந்த ஒரு தனி நபர் அல்லது அமைப்பு ஆகிய எவரும் உயர் அதிகாரங்களை கொண்டவர்கள் இல்லை என்பது இதன் ஆழ்ந்த பொருள். பெரும்பான்மை மக்களுக்கு இதன் பொருள் புரியாமலேயே 75 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. 1950 }இல் குடியரசு நாடு என்று இந்தியா அறிவிக்கப்பட்டது.
எந்தவொரு குடியாட்சியும் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் வெகுமக்கள் ஒவ்வொருவரையும் குடிமக்களாக மாற்றிக் காட்ட வேண்டும். இதுதான் வலிமை கொண்ட குடியாட்சி. இதற்கு வெகுமக்களிடமிருந்துதான் அதிகாரங்கள் அனைத்தும் பிறப்பெடுக்கின்றன என்பதில் சரியான புரிதல் வேண்டும். ஆனால், இன்றைய சுயநலம் மிகுந்த அமைப்புமுறை இவர்களை வெறும் வாக்காளர்கள் என்று மாற்றி கையில் வைத்திருக்கிறது. இது மட்டுமல்லாது குடிமக்கள், வாக்காளர்கள் என்று தரம் தாழ்த்தப்பட்டு, இன்று பயனாளிகள் என்று குடிமக்கள் என்னும் அதிகாரம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.
Advertisement
கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை குடிமக்களாகப் பார்க்காமல் வெறும் பயனாளிகளாகவே பார்ப்பது இன்றைய ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகவே தோன்றுகிறது. தங்கள் கட்டுமானத்தில் மக்களை முற்றாகப் புறந்தள்ளிய ஓர் ஆட்சிமுறை, எப்படி உண்மையான குடியாட்சியை உருவாக்க முடியும்? குடிமக்கள் அனைவரும் பயனாளிகளா?, மாற்றி பின்னர் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பங்கேற்பு ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
இதன்மூலம் அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கிய எந்த உரிமையும், இன்று அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது. அவர்கள் மையத்திலிருந்து விளிம்பின் ஓரத்துக்கு தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தை யார் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் என்பது, அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் கொள்கை அரசியல் புறக்கணிக்கப்பட்டு, பயனாளி அரசியல் மறைமுக ஆட்சி முறையாக மாறியிருக்கிறது.
மக்களாட்சியில் கட்சிகளின் பங்கு மிகவும் ஆராய்ந்து பார்க்கத்தக்கது. அவை மக்களின் பிரதிநிதிகள் மட்டுமே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அமைப்பாக இருந்தாலும் அதில் ஜனநாயகம் இல்லை என்றால் அங்கு சர்வதிகாரம் குடியேறி விடும். இன்றைய கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகத்துக்குப் பதிலாக வழிபாட்டு முறைகள்தான் காணப்படுகின்றன. இதில் கொள்கை}லட்சியம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
குடிமக்கள் பார்வையிலிருந்து மறைந்து வெகு தொலைவுக்கு கட்சிகள் சென்று விட்டன . அங்கு என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியவில்லை. சமூக நீதி, மனித உரிமை, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை தேர்தல் அரசியலில் அடிப்படை பிரச்னைகள். சமூக கட்டுமானத்தில் முக்கியப் பொறுப்பை ஏற்றிருக்கின்றன. இது குறித்த மக்களின் தேவையை தேர்தல் அரசியல் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பெயரளவில் பேசிவிட்டு தந்திரத்துடன் நகர்ந்து விடுகிறது.
மலிவான நடைமுறைகள் மட்டுமே மக்களுக்கும் கட்சிக்குமான நடைமுறையாக மாறிப் போனது. அவை ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் பயன்படாத நடைமுறைகள். இதில் வேடிக்கை என்னவென்றால் அரசியல் கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியவர்கள் மக்களே ஆவர். ஆனால்,
மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து என்ன வேண்டுமென்றாலும் அரசியல் கட்சிகளால் செய்து கொள்ள முடிகிறது. குடிமக்கள் அதிகாரம் மட்டுமே அரசியல் கட்சிகளை ஒழுங்கமைக்கும் சிறந்த சாதனம். இது ஒருவித சீரழிவு என்றால் ஊடகங்களின் சீரழிவு வேறொன்றாக மாறியிருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள, மக்கள் ஓரிடத்தில் கூடி தங்கள் எழுச்சியைப் பகிர்ந்து கொள்ளும் உரிமை இன்று காணாமல் போய்விட்டது. சென்னை மெரீனா கடற்கரை பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து வந்தது. இன்று கூட்டம் போடுவதற்கு இடம் இல்லை; எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்துவதற்கு இடம் இல்லை.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இதை எப்படி மாற்றி அமைப்பது என்பதுதான் இன்றைய பிரச்னை? இதில், எதையும் மாற்ற முடியாது என்று அவநம்பிக்கை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நம்பிக்கை வெளிச்சம், ஏன் முடியாது என்கிறது. முயன்றால் அரசும் அரசியல் கட்சிகளும் நம்மால் நிறுத்திவைத்து விசாரிக்க முடியும் என்கிறது.
இன்று ஒரு புதிய சக்தி ஒரு புதிய சாதனையைப் படைக்க நமக்காக காத்திருக்கிறது. அதுதான் எண்ம உலகம். சமுதாயத்தில் கூட்டம் கூட்டமாக வாழும் மக்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை இது கற்றுத் தருகிறது. "எந்தத் தகவல் உங்களுக்கு வேண்டும்; நான் தருகிறேன்' என்கிறது. கூர்ந்து கவனித்தால் இன்று உலகில் நிகழ்ந்து வரும் பல மாற்றங்களை வான்வெளியில் நின்றே இது ஒருங்கிணைத்து விடுகிறது. இதன்மூலம் கண்மூடி கண் திறப்பதற்குள் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
நமக்கென்று திறந்து வைக்கப்பட்ட இந்தப் பாதையை இன்னமும் நாம் தெரிந்துகொள்ளவில்லை. ஆதிக்க சக்திகளோ கொள்ளை லாப வெறிக்காக இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெகுமக்களுக்கு வேடிக்கை விளையாட்டாகவும் மாறி விட்டது. இயக்கங்கள் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள கடந்த காலங்களில் இது போன்ற ஒரு சாதனம் மக்களுக்கு இருந்ததில்லை. தில்லி விவசாயிகள் போராட்டம் முதல் பல நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களுக்கு இதுவே அடிப்படைக் காரணியாக அமைந்துள்ளது. அண்மைக்காலத்தில், யுத்தத்துக்கு எதிரான உலக ஒருங்கிணைப்பை இது உருவாக்கி, ஆதிக்க சக்திகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
இங்கு இரண்டு சட்டங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம். மற்றொன்று சமூகத் தணிக்கை. இவை இரண்டும் மக்களாட்சியில் நமக்குக் கிடைத்துள்ள மகத்தான கருவிகள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசுப் பணத்தில் நடக்கும் ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் அதிகாரத்தை இது நமக்கு வழங்கியுள்ளது. இதைப்போல், ஆட்சிமுறையின் சீர்கேடுகளைக் கண்காணிக்க நமக்கு கிடைத்துள்ள மற்றொரு கருவிதான் சமூகத் தணிக்கை முறையாகும்.
இதைப் போன்றே வெகுமக்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு ஆயுதம் பொதுநல வழக்குகள். இதன் மூலம் வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகள் மக்களுக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளன. ஆணையங்களும், தீர்ப்பாயங்களும் வெகுமக்களின் கவனத்துக்கு வராமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புகளை மக்களாட்சியை மேலும் வலிமையாக்க நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆயுதங்கள் இருந்தால் மட்டும் போதாது; அதைப் பயன்படுத்தத் தெரியவும் வேண்டும். இதற்கு விரிந்த களமும் பயிற்சியும் தேவைப்படுகிறது. இதை ஒருங்கிணைப்பது இன்றைய காலம் நமக்கு பிறப்பித்திருக்கும் கட்டளை. விழிப்புணர்வு கொண்ட இளைய தலைமுறையால்தான் இந்தக் கடமையை சிறப்புறச் செய்து முடிக்க முடியும்.
உலகில் பல நாடுகளில் குடிமக்கள் செயல்பாட்டு மையங்கள் தங்களைச் சிறந்த ஆளுமை மையங்களாக மாற்றிக் கொண்டுள்ளன. அண்மையில் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை ஒருங்கிணைத்ததில் இடதுசாரி கட்சி ஒன்றுக்கு தலைமைப் பொறுப்பு உண்டென்றாலும், அதில் பங்கேற்றவர்கள் பல்வேறு சிவில் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இன்றைய இலங்கையின் பிரதமர் தில்லி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்; ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்தவர்; கட்சி அரசியலைச் சார்ந்தவர் அல்ல.
தேர்தல் என்பது ஒருநாள் ஒருபொழுதில் வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகவும் உயர்ந்த நடவடிக்கை. இதை நாம் பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும. இதைப் போலவே தேர்தல் முடிந்தவுடன் குடிமக்களின் பொறுப்பும் முடிந்துவிடுவதில்லை. காலமெல்லாம் ஜனநாயகத்தைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. சூழ்ச்சியிலும் ஏமாற்றுவதிலும் மட்டும் வளர்ந்தவர்களைக் கண்காணிப்பது எளிதல்ல. இதற்கான காலத்துக்கு ஏற்ற கருவிகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை ஒளியில்தான் தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன, இந்திய குடிமக்களை நாம் கண்டறிய முடியும்!