முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

இதயம் காப்போம்...!

மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறையால் நேரிடும் மாரடைப்பை பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 4:07 am IST
இதயம் காப்போம்...!
பகிர்:

நேற்று வரை நம் கண் முன்னால் ஆரோக்கியமாக இருந்தவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது சமுதாயத்தில் மிகப் பெரிய அதிர்வலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நவீன உலகில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்வது கடும் மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற மோசமான வாழ்வியல் மாற்றங்களால் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, இதயத் தசைகளுக்கான ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அதேசமயம் இதயத் தகுதியை அறியாமல் உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் தவறான தீவிர உடற்பயிற்சி முறைகளும் மாரடைப்புக்குக் காரணமாக அறியப்படுகிறது.

இந்த உலகளாவிய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், வருமுன் காக்கவும் நாம் சில அவசியமான வாழ்வியல் நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். தினசரி 30 முதல் 45 நிமிஷங்கள் எளிய நடைப்பயிற்சி அல்லது யோகா செய்தல், உணவில் உப்பைக் குறைத்து, நார்ச்சத்துமிக்க காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் பழகுதல் மற்றும் தடையற்ற 7 முதல் 8 மணி நேரத் தூக்கத்தை உறுதிசெய்தல் போன்றவை இதயத்தைப் பாதுகாக்கும் முதல்நிலை கேடயங்கள் ஆகும்.

Advertisement

Advertisement

35 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்வதுடன், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் மாரடைப்பு வராமல் 80 சதவீதம் வரை தடுக்க முடியும். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைகளின்படி, இந்தியா முழுவதும் திடீர் மாரடைப்பால் ஏற்படும் அகால மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு 10 முதல் 12 சதவீதம் வரை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட தரவுகளின்படி, ஒரு லட்சம் பேருக்கு 360 முதல் 430 பேர் வரை இதய நோய்களால் உயிரிழக்கிறார்கள். அதேபோல, மாநில அளவில் நிகழும் மொத்த மரணங்களில் சுமார் 30 சதவீத மரணங்களுக்கு மாரடைப்பே முதன்மைக் காரணமாக உள்ளது. சர்க்கரை நோயின் தலைநகராக மாறிவரும் தமிழகம், தற்போது மாரடைப்பு மரணங்களிலும் மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களுக்கு இணையாக உச்சத்தைத் தொட்டு வருவது ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு போற்றத்தக்க மருத்துவத் திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரமான "கோல்டன் ஹவர்' அவசர சிகிச்சையை உறுதிசெய்ய, 2023-இல் தொடங்கப்பட்ட அரசின் "இதயம் காப்போம்' திட்டம் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள 9,400-க்கும் மேற்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் அவசரகால "லோடிங் டோஸ்' மாத்திரைகளான ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரல் மற்றும் அடோர்வாஸ்டாடின் போன்ற மருந்துகள் முற்றிலும் இலவசமாக வைக்கப்பட்டுள்ளன.

நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு உடனடியாக ஈசிஜி எடுக்கப்பட்டு, லோடிங் டோஸ் வழங்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் 2025 அக்டோபர் வரையிலான தரவுகளின்படி 40,000 க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு மரணங்களில் இருந்து உயிர்பிழைத்துள்ளனர்.

தற்போது அரசு பொதுவான ரத்தப் பரிசோதனை சேவைகளை வழங்கி வந்தாலும், இதயம் சார்ந்த சிறப்பு பரிசோதனைகளை இன்னும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. 35 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ எக்கோ, ட்ரெட்மில் பரிசோதனை மற்றும் கொழுப்புச் சத்து உள்ளிட்ட பரிசோதனை சேவைகளை வழங்கும் "நடமாடும் இதயப் பரிசோதனை மையங்கள்' ஒவ்வொரு வட்டார அளவிலும் அரசு அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் ஈசிஜி முடிவுகளை உடனுக்குடன் படித்துத் துல்லியமான மாரடைப்பு பாதிப்பைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய எண்ம ஈசிஜி கருவிகளை பஞ்சாயத்து அளவில் நிறுவுவது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் பின்பற்றுவதைப் போல மக்கள் அதிகம் கூடும் மால்கள், திரையரங்குகள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தானியங்கி இதயத் துடிப்பு மீட்புக் கருவிகளான ஏ.இ.டி. எனப்படும் புதிய மருத்துவக் கருவிகளைப் பொருத்துவதை அரசு சட்டமாக்க வேண்டும். அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவிப் பயிற்சிகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை அரசு உடனடியாக வகுக்க வேண்டும்.

அதேபோல பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலேயே அவசரகால முதலுதவி முறைகளை ஒரு பாடமாக இணைத்து பயிற்சி அளிக்க வேண்டியது உடல்நலன் சார்ந்த எதிர்கால தேவையாகும். இருப்பினும், இறுதிப் பாதுகாப்பு என்பது நமது சுய விழிப்புணர்வில்தான் உள்ளது.

தவறான வாழ்வியல் முறைகளை மாற்றி சீரமைப்பதுடன் இதயத்தின் ஒடுங்கலாக வெளிப்படும் மாரடைப்பு போன்ற அபாயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய அவசரகால முதலுதவிகளை துல்லியமாக கையாண்டால் மரணத்தின் பிடியிலிருந்து உயிர்களை மீட்டெடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments