FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிராஸ்டேட்டை சமாளிக்க...

என் வயது 64. பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகி, அதிக சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் அடக்க முடியாமை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன்.

Updated On : 14 ஜூன் 2026, 4:10 am IST
பகிர்:

என் வயது 64. பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகி, அதிக சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் அடக்க முடியாமை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். இதைக் குணப்படுத்த என்ன ஆயுர்வேத மருந்து பயன்படுத்தலாம்? என்ன வகையான உணவுகள் சாப்பிடலாம்?

- கந்தசாமி, ஈரோடு.

வயது அதிகரிக்கும்போது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று பிராஸ்டேட் சுரப்பி தொடர்பான நோய்களாகும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி மெதுவாகப் பெரிதாகும் நிலை காணப்படுகிறது. இதனை 'பினைன் பிராஸ்டேட்டிக் ஹைபர் பிளாஸியா' என்று அழைக்கின்றனர்.

Advertisement

Advertisement

இது புற்றுநோய் அல்ல. ஆனால், சிறுநீர் கழிப்பதில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். சிலருக்கு அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல் மற்றும் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் கசிந்து வெளியேறுதல் போன்ற பிரச்னைகளும் காணப்படுகின்றன. இவை வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து, மன அழுத்தத்தையும் உண்டாக்குகின்றன.

இந்த நோய்க்கான காரணங்களாக வயோதிகம், பெருங்குடல், சிறுநீர்ப்பை பகுதிகளை தன் செயல் திறனால் கட்டுக்குள் வைத்திருக்கும் அபான வாயுவின் சீற்றம், இயற்கை உந்துதல்களை அடக்குதல், மலச்சிக்கல், உடற்பயிற்சி இல்லாமை, அதிக காரம், கசப்பு, துவர்ப்பு மிக்க உணவுகள், மன அழுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

'த்ருணபஞ்ச மூலாதி கஷாயம்' என்ற ஆயுர்வேத மருந்தில் அடங்கியுள்ள தர்ப்பைப்புல், நாணல் வேர், கரும்பு வேர், ஓரிலை, சிறுபீளை போன்ற மூலிகை மருந்துகளால் நீங்கள் பயன் அடையலாம்.

பதினைந்து மில்லி கஷாயத்தில் அறுபது மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் நாற்பத்தெட்டு நாள்கள் சாப்பிடலாம். தற்சமயம் இம்மருந்து விற்பனைக்கு வந்துள்ளது. 'சகஸ்ர யோகம்' எனும் ஆயுர்வேத நூலில் இதற்கான குறிப்பு உள்ளது.

நெரிஞ்சில் விதை, மூக்கரட்டை வேர், மா விலங்கம் பட்டை போன்ற மூலிகை மருந்துகள் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்கு நன்கு பயன்படும். பதினைந்து கிராம் நெரிஞ்சில் விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக அருந்துவது இப்போதும் கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது.

விற்பனையில் உள்ள சந்திரப்ரபாவடி, புனர் நவாதி கஷாயம், கோஷீராதி குக்குலு மாத்திரை போன்றவை நல்ல பலன் தரக்கூடியவை. வாத நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாகக் கருதப்படும் 'வஸ்தி' எனும் எனிமா முறை வைத்தியம், அபான வாயுவின் சீற்றத்தை அடக்கி, அதன் செயல் திறனை சீராக்க உதவும். மூலிகை நெய் மருந்துகளாகிய சுகுமாரம் க்ருதம், வஸ்தி ஆமயாந்தகம் க்ருதம் ஆகியவற்றை பத்து மில்லி லிட்டர் காலை, மாலை உணவுக்கு முன் மற்றும் பின் சாப்பிடுவதும் நல்லதே.

மருத்துவர் ஆலோசனையுடன் ஏதேனும் ஒரு மருந்தை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. ஹிங்குத்ரிகுண தைலம், மஹாநாராயண தைலம் போன்றவற்றில் ஒன்றை அடிவயிற்றில் இளம் சூடாகத் தேய்த்து, அரை மணி நேரம் ஊறிய பிறகு வெந்நீர் விட்டு கழுவி விடுவதன் மூலம் அடிவயிற்றில் வாய்வின் சீற்றத்தை அடக்கலாம். அதனால் குணமும் பெறலாம்.

உணவில் சாப்பிட வேண்டியவை: பார்லி, கொள்ளு, சுரைக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, இளநீர், நெல்லிக்காய், முருங்கைக்கீரை.

குறைக்க வேண்டியவை: அதிக கார உணவுகள், பொரித்த வகை உணவுகள், மது, புகையிலை, அதிக தேநீர், காபி, இரவு நேர அதிக உணவு.

வாழ்க்கை முறை வழிகாட்டல்கள்: தினமும் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி, மலச்சிக்கல் தவிர்த்தல், சிறுநீர்த்தடை ஏற்படுத்தலை நிறுத்துதல், உடல் எடைக் கட்டுப்பாடு, இரவு உறக்கத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பாக தண்ணீர் குடிப்பதை வெகுவாகக் குறைத்தல், மன அழுத்தம் விலக தியானம், பிராணாயாமம் செய்தல், இடுப்புத் தசைப் பயிற்சிகள் - சிறுநீரை நிறுத்தும் தசைகளை இறுக்குதல், ஐந்து விநாடிகள் பிடித்து வைத்தல், பின்னர் தளர்த்துதல் மூன்று சுற்றுகள் செய்யலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments