FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...

தமிழகத்தில் பல இடத்திலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பலரும் தண்ணீர் தாகம், சிறுநீரக எரிச்சல், உடல் சோர்வு என்றெல்லாம் அவதியுறுகின்றனர்.

Updated On : 26 ஜூலை 2026, 4:15 am IST
பகிர்:

தமிழகத்தில் பல இடத்திலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பலரும் தண்ணீர் தாகம், சிறுநீரக எரிச்சல், உடல் சோர்வு என்றெல்லாம் அவதியுறுகின்றனர். உடல் குளிர்ச்சி தரும் மூலிகைகளின் கலவையினால் இப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். அந்த வகையில் உள்ள மூலிகைகளின் விவரங்களை அளிக்க முடியுமா?

- மணிகண்டன், திருப்பூர்.

இன்றைய வாழ்க்கை முறையில் அதிக வெயில், மன அழுத்தம், கார உணவுகள், குறைந்த அளவு தண்ணீர் அருந்துதல், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதைத் தொற்றுகள் போன்ற பல காரணங்களால் உடலில் பித்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடல் வெப்பம், சிறுநீர் எரிச்சல், அதிக தாகம், வாய் உலர்தல், மூக்கில் ரத்தம் வருதல், சிறுநீர் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

ஆயுர்வேதத்தில் இத்தகைய பித்த உபாதைகளைச் சமப்படுத்த பல சிறந்த மருந்துகள் உள்ளன. அவற்றில் உண்மையான ஒன்று, சந்தனாதி கஷாயம். சந்தன உசீராதி கஷாயம் என்றும் சொல்லலாம். இதில் உள்ள முக்கிய மூலிகைகளைப் பார்ப்போம்.

சந்தனம்: இயற்கையாகவே உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது. அதன் பலனாக உடல் வெப்பம் குறைக்கும்.

சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். அதிக தாகத்தைத் தீர்க்கும். மன அமைதியை அளிக்கும்.

உஷீரம் (வெட்டிவேர்): சிறந்த குளிர்ச்சி தரும் மூலிகை. உடலைக் குளிர்விக்கும். சிறுநீர் சீராக வெளியேற உதவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கோடைக்கால நோய்களைத் தடுக்கும்.

கோரைக்கிழங்கு: பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்தும். காய்ச்சலுக்குப் பிறகு உடல் பலம் தரும்.

லாஜா (நெல்பொரி): உடலை லேசாக்கும். உடல் சூட்டைக் குறைக்கும். தாகத்தைத் தணிக்கும். வயிற்றை அமைதிப்படுத்தும்.

பாசிப்பயறு: எளிதில் ஜீரணம் ஆகும். பித்தத்தைக் குறைக்கும். உடலுக்குச் சத்தளிக்கும்.

திப்பிலி: ஜீரண சக்தியை அதிகரிக்கும். மருந்தின் உறிஞ்சுதலை மேம்படுத்தும். கபத்தை நீக்கும்.

யவம் (பார்லி): சிறுநீரை அதிகப்படுத்தும். உடல் வீக்கத்தைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற தானியம்.

பலா (குறுந்தோட்டி): உடலுக்கு வலிமை தரும். நரம்புகளைப் பலப்படுத்தும். உடல் சோர்வைக் குறைக்கும்.

பொதுவாக பின்வரும் நிலைகளில் சந்தன உசீராதி கஷாயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் அதிக வெப்பம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர் குறைவாக வெளியேறுதல், சிறுநீர்ப் பாதைத் தொற்று, ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தம் வருதல், அதிக தாகம், வாய்ப்புண், கோடைக் கால வெப்ப நோய்கள், சர்க்கரை நோய்களுக்கு ஏற்படும் சிறுநீர் எரிச்சல், உடல் சோர்வு.

இந்த மருந்து எடுத்துக் கொள்ளும் காலத்தில்...

சாப்பிட வேண்டியவை: இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், பாசிப்பயறு, பார்லிக் கஞ்சி, மோர், நெல்லிக்காய்.

தவிர்க்க வேண்டியவை: அதிககாரம், மிளகாய், பொரித்த உணவுகள், மதுபானம், புகைப் பிடித்தல், அதிக தேநீர், காபி, குளிர்பானங்கள்.

விற்பனையில் உள்ள இந்த சந்தன உஷீராதி கஷாயத்தை பதினைந்து மில்லி லிட்டர் எடுத்து அறுபது மில்லி லிட்டர் சூடாறிய தண்ணீர் கலந்து, ஐந்து மில்லி லிட்டர் தேன் விட்டுக் கரைத்து, காலை - மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். வெயிலின் தாக்கம் உடலைப் பாதிக்காதவாறு பாதுகாக்கலாம். கல்லீரல் மற்றும் மண்ணீரல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments