ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை வராமல் தடுக்க...
என் பேத்திக்கு வயது 15. தலைமுடியில் இளநரை பரவலாகத் தோன்றுகிறது. அதைத் தடுக்க வழி என்ன?
என் பேத்திக்கு வயது 15. தலைமுடியில் இளநரை பரவலாகத் தோன்றுகிறது. அதைத் தடுக்க வழி என்ன? கேசத்தைப் பாதுகாக்க, பராமரிக்க ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் என்ன? சிறப்பு உணவு ஏதேனும் உண்ண வேண்டுமா?
-எம்.வி.தேவி, அடைக்கம்பட்டி.
தலைமுடியின் நிறம் மரபியல் காரணிகளால் பெரிதும் நிர்ணயிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இளம் வயதிலேயே நரை வந்திருந்தால், குழந்தைக்கும் அதே போக்கு இருக்கலாம். அதே நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் வைட்டமின் பி 12 குறைபாடு அல்லது தைராய்டு கோளாறு போன்ற காரணிகளும் நரைமுடிக்குத் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, நரைமுடியைக் கறுப்பாக்கும் மருந்து என்று உடனடியாகத் தேடுவதைவிட, ஏன் நரை வந்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வதே சரியான அணுகுமுறை.
Advertisement
Advertisement
நமது தலைமுடியின் நிறத்துக்கு முக்கியக் காரணம் மெலனின் என்ற நிறமிப்பொருள். தலைமுடியின் வேர்ப் பகுதியில் உள்ள சிறப்பு நிறமி செல்கள் (மெலனோசயிட்ஸ்) மெலனினை உருவாக்குகின்றன. மெலனின் போதுமான அளவு உற்பத்தியாகும்போது, முடி கருமையாகத் தெரியும். அதன் உற்பத்தி குறையும்போது முடி சாம்பல் அல்லது வெள்ளை நிறமாகத் தோன்றுகிறது. ஊட்டச் சத்துக் குறைபாடு, குறிப்பாக சமச்சீரற்ற உண்வு, மிகக்குறைவாக உண்பது அல்லது கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளால் உடலுக்கும் தலைமுடிக்கும் தேவையான ஊட்டச்சத்துகளைக் குறைக்கலாம் . முடி ஆரோக்கியத்தில் இரும்பு, வைட்டமின் பி 12 போன்றவை முக்கியமானவை.
பள்ளிப்படிப்பு, தேர்வுப் பயம், போட்டி, தூக்கமின்மை, குடும்ப அல்லது சமூக அழுத்தம் போன்றவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் முடி வளர்ச்சி சுழற்சியையும் பாதிக்கலாம். மன அழுத்தம் முடி உதிர்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
முடியின் முக்கியக் கட்டமைப்புப் பொருள் கெரட்டின். எனவே போதுமான புரதம் அவசியம். உணவில் பால், தயிர், மோர், பருப்பு, பாசிப்பயறு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, சுண்டல், முட்டை, மீன், கோழி போன்றவற்றைக் குடும்பத்தின் வழக்கமான உணவுமுறைக்கு ஏற்ப சேர்க்கலாம்.
முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை மாறிமாறி உணவில் சேர்க்கலாம். கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், சுரைக்காய், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்.
அளவோடு பாதாம், வால்நட், எள், பூசணி விதை, சூரியகாந்தி விதை, கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், உலர்திராட்சை, பேரீச்சம்பழம் சாப்பிடலாம். வைட்டமின் சி உள்ள உணவுகள் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுவதால், கீரை அல்லது பருப்பு உணவுடன் எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு போன்றவற்றைச் சேர்ப்பது நல்ல பழக்கம்.
ஆயுர்வேதத்தில் கேசம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை தனியாகப் பார்க்காமல், உணவு, செரிமானம், துôக்கம், மனநிலை மற்றும் தினசரி வாழ்க்கை முறையுடன் இணைத்துப் பார்ப்பது முக்கியம். வாரத்துக்கு 1 - 2 முறை, தேவைக்கேற்ப மென்மையான முறையில் தலைக்கு நீலிபிருங்காதி அல்லது பிருங்காமலகாதி கேர தைலத்தைத் தேய்த்து, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்கலாம்.
தலைமுடிக்கான பாரம்பரிய நண்பனாக நெல்லிக்காய் கருதப்படுகிறது. அதனால் நெல்லிக்காயை உணவின் ஒரு பகுதியாகச் சேர்ப்பது நல்லது. ஒரு முழு நெல்லிக்காயை வேகவைத்து, உணவுடன் அப்படியே சாப்பிட்டு வருவது முடி ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவும்.
பித்தநீர் அதிகம் வயிற்றில் சுரப்பதால், முடிநரைக்கலாம். பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை, பேதி மருந்து சாப்பிட்டு உடல் உட்புற பித்தத்தை வெளியேற்றலாம். இதனால் உடல்குளிர்ச்சியடையும். குடலும் சுத்தமாகும். அதற்கு நிறைய ஆயுர்வேத சூரண மருந்துகள், லேஹியங்கள் உள்ளன. மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடவும்.
ஆயுர்வேத மருந்துகளாகிய சியவனப் பிராசம் லேஹியம், நாரசிம்ஹரஸாயனம், பிராம்ஹ ரஸாயனம் போன்றவை சாப்பிட உகந்தவை. வெள்ளைப் படுதல் போன்ற பிரச்னை பேத்திக்கு இருந்தால், அதைக் குணப்படுத்திய பிறகு, இம் மருந்துகளைச் சாப்பிடலாம்.
தலைக்குக் குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் இயற்கையான கிணற்று நீராக இருந்தால் நல்லது. அதிலுள்ள தாதுப் பொருள்கள் முடிவளர்ச்சிக்கு உதவிடும். கருப்பு எள்ளை அரைத்து, தலையில் பூசி, நன்கு ஊறியபிறகு (அரை - முக்கால் மணி நேரம்) தலைக்குக் குளிப்பதால், முடிவளர்ச்சி நன்கு ஏற்படும், வெள்ளை நிறம் மாறி சுறுப்பாக மாறும் என்று கிராம வைத்தியர்களின் கருத்தாக உள்ளது.
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.