செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
எஸ். கிருஷ்ணன் ஐஏஎஸ்
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், அடையாளம், கட்டணச் சேவைகள், நிர்வாகம் மற்றும் நிதிச் சேவைகளை மிகப் பெரிய அளவில் இணைக்கும் மிகப்பெரிய எண்ம பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) சூழலமைப்பை இந்தியா உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆதார், ஒருங்கிணைந்த கட்டண வசதி (யுபிஐ), நேரடிப் பயன்கள் பணப் பரிமாற்றம் (டிபிடி), ஜிஎஸ்டிஎன், கணக்கு ஒருங்கிணைப்பாளர் (அக்கவுன்ட் அக்ரிகேட்டர்) மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கடன் வழங்கும் வசதி (யுஎல்ஐ) போன்ற தளங்கள், மக்கள் நிதி அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அவற்றின் அடிப்படையிலேயே மாற்றியுள்ளன.
நேரடிப் பயன் பரிமாற்ற அமைப்புகள் எண்ம (டிஜிட்டல்) வழிகள் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 51 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பணப் பரிமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அதேவேளையில், கசிவுகள் குறைக்கப்பட்டதாலும், பயனாளிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டதாலும் ஏற்பட்ட சேமிப்பு ரூ. 4.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இந்த மாற்றத்தின் அடுத்தகட்டம் இப்போது உருவாகி வருகிறது. இந்த உள்கட்டமைப்பின் முன்பலமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது; இதன்மூலம் புத்திசாலித்தனமான, சூழலுக்கு ஏற்ப மாறும் மற்றும் நிகழ்நேரத் தரவுகளின் அடிப்படையில் இயங்கும் நிதி அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
ஏஐ, டிபிஐ ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைப்பு, இந்திய நிதித் துறையின் கட்டமைப்பை அதன் அடிப்படை நிலையிலேயே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் எண்ம நிதிக் கட்டமைப்பு உலக அளவில் தனித்துவமானது.
ஏனெனில், அது பொது எண்ம உள்கட்டமைப்பை மிகப் பெரிய அளவிலான புத்தாக்கத்துடன் இணைக்கிறது. நமது நிதிசார் தொழில்நுட்பம் வளர்ந்த பல நாடுகளைப் போல தனியார் தளங்களை நம்பியிருக்கவில்லை. இந்தியா மிகப்பெரிய அளவில் செயல்படக்கூடிய மற்றும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்கக்கூடிய பொது கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதே இதற்குக் காரணம்.
இந்தியாவின் மிகவும் புரட்சிகரமான எண்ம அமைப்புகளில், யுபிஐ ஒரு மையமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தளம் நாடு முழுவதும் பணம் செலுத்தும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருநகர வணிகங்கள் முதல் கிராமப்புறங்களில் உள்ள சிறு விற்பனையாளர்கள் வரை, எண்மப் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகி விட்டன. ஒவ்வொரு மாதமும் பல நூறு கோடிக்கணக்கான நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகள் யுபிஐ வழியே நடைபெறுகின்றன. 2025 -ஆம் ஆண்டு நிலவரப்படி, இது உலகளாவிய நிகழ்நேர எண்ம பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளில் 49% ஆகும்.
பணம் செலுத்தும் அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் ஒரு முக்கியப் பயன்பாடு மோசடியைக் கண்டறிவதாகும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் பரிவர்த்தனை நடத்தையைப் பகுப்பாய்வு செய்யவும், அசாதாரண வடிவங்களைக் கண்டறியவும், சில விநாடிகளுக்குள் முரண்பாடுகளைக் கண்டறியவும் முடியும். அசாதாரண பணப் பரிமாற்ற நடத்தை, கணக்கு அபகரிப்புகள் அல்லது செயற்கைப் பரிவர்த்தனை வடிவங்கள் போன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை, வழக்கமான முறைகளைவிட மிக விரைவாகக் கண்டறிய முடியும்.
மற்றொரு முக்கிய வளர்ச்சி, உரையாடல் மற்றும் மாநில மொழி நிதி வசதிகளின் எழுச்சியாகும். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குரல் வசதி, பன்மொழி அமைப்புகள் மற்றும் உரையாடல் வழி பணம் செலுத்தும் கருவிகள் போன்றவை மாநில மொழிகளில் எண்ம நிதிப் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன. ஒரு சிறு தொழில்முனைவோர், வீதியோர வியாபாரி அல்லது மூத்த குடிமக்கள் போன்றோர், வழக்கமான எண்ம தளங்களைவிட, குரல் வழி இயங்கும் வசதியைப் பயன்படுத்துவதை மிகவும் இயல்பாகக் காணலாம்.
செலவு குறித்த நுண்ணறிவுகள், சேமிப்புப் பரிந்துரைகள், நினைவூட்டல்கள் மற்றும் பரிவர்த்தனைப் பகுப்பாய்வுகளை வழங்குவதன் மூலம், தனிநபர்கள் தங்கள் நிதியைச் சிறப்பாக நிர்வகிக்கவும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உதவ முடியும்.
எண்ம நிதித் துறை விரிவடைவதால், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பணப் பரிவர்த்தனைச் சூழலமைப்புகள், இந்தியா முழுவதும் உள்ள சாதாரணப் பயனர்களுக்கு மேலும் தடையற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான நிதியைப் பெறுவது பெரும்பாலும் விரிவான ஆவணங்கள், பிணையங்கள் மற்றும் வழக்கமான கடன் வரலாறைச் சார்ந்திருந்தது. எனவே, இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் பெரும் பகுதிகள் நிறுவன நிதி அமைப்புகளுக்கு வெளியே இருந்தன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த கடன் வழங்கும் முறைகள், இப்போது இந்தச் செயல்
முறையை கணிசமாக மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது சிறு வணிகங்கள், விவசாயிகள், பகுதி நேரப் பணியாளர்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்குப் பெரும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்த முடியும். கடன் செயலாக்க காலக்கெடு கணிசமாகக் குறையக்கூடும். இடர் மதிப்பீட்டு அமைப்புகள் மேலும் துரிதமாகச் செயல்பட முடியும். அறிவார்ந்த தானியக்க வசதி மூலம் நிர்வாகச் சுமைகள் குறையக்கூடும். இது நிறுவனங்கள் அதிக மக்களுக்கு மிகவும் திறம்படச் சேவை செய்ய வழிவகுக்கும். மலிவு விலைக் கடனைப் பெறுவது ஒரு பெரிய வளர்ச்சிச் சவாலாக இந்தியாவுக்கு உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் பொருளாதார ரீதியாக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிதி அமைப்புகளுக்கு ஆதரவான வலுவான வாதங்களில் ஒன்று, அவை நிதி உள்ளடக்கத்தை ஆழப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகும். நிதி உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தேசியக் குறிகாட்டிகளில் பெருகிய முறையில் காணப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி உள்ளடக்கக் குறியீடு, மார்ச் 2021-இல் 53.9-இல் இருந்து மார்ச் 2025-இல் 67.0 ஆக உயர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் நிதிச் சேவைகளுக்கான அணுகல், பயன்பாடு மற்றும் தரத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளைப் பிரதிபலிக்கிறது.
சைபர் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஒரு முக்கியப் பங்காற்ற முடியும். முறைகேடுகளை அடையாளம் காணவும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளைக் கண்டறியவும், புதிதாக உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாகப் பதிலளிக்கவும் நுண்ணறிவு கண்காணிப்புக் கருவிகள் உதவுகின்றன. அதே நேரத்தில், இணையக் குற்றவாளிகளும் தானியங்கி மோசடி அமைப்புகள், செயற்கை அடையாளங்கள், டீப்ஃபேக் குரல்கள் மற்றும் மிகவும் நுட்பமான ஃபிஷிங் தாக்குதல்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இது, பாதுகாப்பு அமைப்புக்கும், தீங்கிழைக்கும் சக்திகளுக்கும் இடையே ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பப் போட்டியை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தியாவின் வளர்ந்து வரும் எண்ம நிதிச் சூழல் அமைப்பானது, ஒரு நம்பகமான சூழல் அமைப்புக்குள் புதுமைகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக, மேம்பட்ட இணையப் பாதுகாப்பு அமைப்புகள், நிறுவனத் தயார்நிலை மற்றும் மீள்திறன் கொண்ட எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடுகளைச் செய்யத் தூண்டுகிறது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிதி மாற்றம், அசாதாரணமான அளவில் நிகழ்ந்து வருகிறது. இது மகத்தான வாய்ப்புகளை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு, மோசடி கண்டறிதலை மேம்படுத்தவும், கடன் அணுகலை விரிவுபடுத்தவும், நிர்வாகத் திறனை வலுப்படுத்தவும், நிதி உள்ளடக்கத்தை ஆழப்படுத்தவும் முடியும். அறிவார்ந்த அமைப்புகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் குடிமக்களின் தேவைகளுக்கு அரசாங்கங்களும் நிறுவனங்களும் மிகவும் ஆற்றல்மிக்க முறையில் பதிலளிக்க உதவும்.
இந்த மாற்றத்தின் நீண்டகால வெற்றி, பொதுமக்களின் நம்பிக்கையைச் சார்ந்திருக்கும் - அதாவது, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் பயன்படுத்த எளிதான அமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்குவதைப் பொருத்தது. எனவே, இந்தியாவின் அடுத்தகட்ட எண்ம மாற்றத்துக்கு தொழில்நுட்பப் புத்தாக்கம் மட்டுமல்லாமல், எண்ம கல்வியறிவு, மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகை ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடும் தேவைப்படும்.
நிதியை எண்மமயமாக்குவதற்கு மட்டுமல்லாமல், மக்கள் அளவில் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் இந்தியா நிரூபித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் நிதி அமைப்புகள், சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், பொருளாதாரப் பங்கேற்பை மேம்படுத்துவதற்கும், மேலும் பல கோடிக்கணக்கான மக்கள் முறைசார் பொருளாதாரத்துடன் முழுமையாக ஈடுபட உதவுவதற்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிதித் துறையின் கட்டமைப்பை மாற்றியமைக்கக்கூடும்; ஆனால் அதன் மிகப் பெரிய பங்களிப்பு என்பது இந்தியா முழுவதும் உள்ள சாதாரண மக்களுக்கு நிதி பெறும் வசதியை மேலும் உகந்ததாக்குவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அதிகாரம் அளிப்பதாகவும் மாற்றுவதில்தான் அடங்கியிருக்கிறது.
கட்டுரையாளர்:
செயலாளர் - மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்