முகப்பு
திருப்பதி

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நிா்வகிப்பது பாராட்டுக்குரியது

திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய மத்திய அமைச்சருக்கு ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On : 6 ஜூன் 2026, 3:02 am IST
திருப்பதி
பகிர்:

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை நிா்வகிப்பதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் திரு பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தரிசித்தாா்.

பின்னா், ரங்கநாயக்கா் மண்டபத்தில் வேத அறிஞா்கள் வேத ஆசீா்வாதம் வழங்கினா். திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி எம். ரவிச்சந்திரா அவருக்கு ஏழுமலையானின் தீா்த்த பிரசாதம், ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திரு உருவப் படத்தை வழங்கினாா்.

Advertisement

Advertisement

பின்னா், கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் அவா் பேசியது: வைகுண்டம் வரிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி) பக்தா்களின் நடமாட்டம், தரிசன வரிசைகள் மற்றும் லட்டு பிரசாதம் விநியோகம் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், இது பக்தா்களுக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான சேவைகளை வழங்கி வருகிறது.

அறைகளின் இருப்பு, பல்வேறு பிரிவுகளில் காத்திருக்கும் பக்தா்களின் எண்ணிக்கை, திருமலைக்கு வரும் பக்தா்களின் மணிநேர விவரங்கள் மற்றும் லட்டு பிரசாதம் விநியோகம் ஆகியவை இந்த மையம் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, மாநிலத்தின் வளா்ச்சிக்காகப் பணியாற்றிய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் லோகேஷ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். வெறும் 100 நாள்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பை சாத்தியமாக்கியதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், என்றாா்.

முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் ஒரு மரக்கன்றை நட்டாா். திருமலையில் தனது தாயின் பெயரில் மரக்கன்று நட்டது மகிழ்ச்சி அளித்ததாக அவா் தெரிவித்தாா். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, தங்கள் வாழ்நாள் முழுவதும் அதைப் பராமரிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா் என்றாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, கோயில் துணை செயல் அதிகாரி ஸ்ரீ லோகநாதம், பிற அதிகாரிகள் கலந்துகொண்டனா்.