முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!
பல்வேறு புதிய மாறுதல்களுடன் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியானது 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய மாறுதல்களுடன் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியானது 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான 16-ஆவது கணக்கெடுப்பாகும். அதேபோன்று சுதந்திரத்துக்குப் பின்பான 8-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
வளர்ந்துவரும் அறிவியல் யுகத்திலும், பொருளாதார வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்கள், மக்கள் நலன் போன்றவற்றைக் கணக்கிடுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டில் மிகுந்த அவசியமாக உள்ளது.
உலகின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியோவில் கி.மு. 3800-இல் தொடங்கப் பெற்றது. தொடர்ந்து, ஸ்வீடன் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1872-இல் மேயோ பிரபு காலத்தில் தொடங்கப்பட்டது. என்றாலும், கி.பி. 1881-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில்தான் இது முறையாகப் பின்பற்றப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறவில்லை.
Advertisement
Advertisement
இம்முறை மக்கள்தொகை கணக்கெடுப்பானது இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் கேள்விகளின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்படும்; இரண்டாம் கட்டத்தில் தனிநபர் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு 1.03.2027 அன்று கணக்கெடுப்புப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரகதி மற்றும் விகாஸ் ஆகிய சின்னங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக அதற்கென நியமனம் செய்யப்பட்ட இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலுள்ள 7,092 மாவட்டங்கள், 5,128 நகரங்கள், 6,39,902 கிராமங்கள் உள்பட 36 மாநிலங்களிலும் இந்தப் பணி நடைபெற உள்ளது. இதை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் 18,600 தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சுமார் 550 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 147.6 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா 140 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. 147 கோடி மக்களின் அனைத்துவித அடிப்படை தேவைகள், வளர்ச்சி, கல்வி, வாழ்விடம் அனைத்தையும் பேணிக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் வாயிலாக நீதி ஆயோக் திட்டங்கள், உலக வங்கி, ஆசிய வங்கி மேம்பாட்டு கடன்களை நாம் பெறவும், இதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவும் இப்பணி முக்கியமானதாகும்.
இந்தப் பணிக்காக மத்திய அரசு ரூ. 11,178 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இம்முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எண்ம (டிஜிட்டல்) முறையில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு குடிமகனும் தங்கள் குறித்தான சுய தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் முறையும் இதில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்த எண்ம முறை கணக்கெடுப்பு செயலி வாயிலாக சுமார் 82 லட்சம் மக்கள் தங்கள் சுய தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை தெரிவிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த ஜாதிவாரி கணக்கெடுப்பும் இதில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணி இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் மேற்கொள்ளப்படுவது சிறப்பு.
எண்ம முறையில் மேற்கொள்ளும் இந்தக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த 33 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட 1872-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 17 வினாக்கள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து 1881-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 12 வினாக்களும், 1891-இல்14 வினாக்களும்,1941-இல் 22 வினாக்களும், 1951-இல் 14 வினாக்களும், 2011-இல் 29 வினாக்களும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொருவரின் ஜாதி குறித்தான விவரம் கோருவது இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சென்சஸ் சட்டம் 1948 பிரிவு 246-இன் கீழ் நடத்தப்படும் சட்டபூர்வமான நடவடிக்கையாகும். இந்தப் பணிக்காக நியமனம் செய்யப்படும் ஊழியர்கள் பணியின்போது சுதந்திரமாகச் செயல்பட உரிமை உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் வாயிலாக சேகரிக்கப்படும் தரவுகள் சென்சஸ் சட்டம் பிரிவு 15-இன் கீழ் மிக ரகசியமானவை. இந்தத் தரவுகளை நீதிமன்ற ஆதாரத்துக்கோ, வேறு தேவைகளுக்கோ ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் கடமை தவறினாலோ அல்லது மெத்தனப்போக்கு காட்டினாலோ தொடர்புடைய அலுவலர் மீது அபராதம் விதிக்க முடியும்.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு வரும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி அவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி சரியான பதில்களைத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பதில்களே தனி மனித வாழ்க்கையின் கல்வி, மற்றும் சமூக முன்னேற்ற நலன்களை உயர வைப்பதற்கு ஏணியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.