முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆழ்கடல் விபத்துகள்!

மழை, சூறாவளி, சுட்டெரிக்கும் வெயில், நடுங்கச் செய்யும் குளிர் என அனைத்தையும் சமாளித்து ஆழ்கடலையே வீடாகக் கொண்டு சுமார் 45 நாள்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கேற்ற மரியாதையும், பாதுகாப்பும் எப்போதுதான் கிடைக்கப் போகிறது?

Updated On : 26 ஜூன் 2026, 6:11 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் சரக்குகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல்கள், இப்போது உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீனவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் "கடல் கொள்ளையர் தடுப்பு மசோதா' நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சந்திக்கும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

முன்பைவிட சமீப ஆண்டுகளில் கப்பல்-படகு மோதல் என்பது பெரிதும் விவாதிக்கப்படும் விஷயமாகி உள்ளது. கேரளக் கடல் பகுதிகளில் கப்பல்களும் படகுகளும் மோதும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது விஷயத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக}கேரள மீனவர்களுக்கு நியாயமான மற்றும் முறையான இழப்பீடு வழங்கப்படாவிட்டால், அது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

கடந்த மே 26-ஆம் தேதி மீன்பிடித்துவிட்டு, கேரளத்தின் காசர்கோடு கடலில் வந்து கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியது. இதில் படகிலிருந்த மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும், படகிலிருந்த விலையுயர்ந்த கருவிகள் உள்ளிட்டவை கடலில் மூழ்கி சேதமடைந்தன. இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

விபத்தில் மீனவர்களுக்கும் படகுக்கும் என்ன நேர்ந்தது? என்பது குறித்து சிறிதும் கவலைப்படாமல், கப்பல்கள் அங்கிருந்து சென்று விடுகின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் சமூக சேவை அமைப்புகளும் இந்தக் கப்பல்களைக் கண்டறியவும், நிவாரணங்கள் கிடைக்கவும் எவ்வளவுதான் முயன்றாலும், அவை கிடைக்கும் வரை பல ஆண்டுகளாக மீனவர்கள் கண்ணீருடன் காத்திருக்க வேண்டியுள்ளது.

கேரளத்தின் வேப்பூர் கடலில் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 11}ஆம் தேதி படகு மீது அடையாளம் தெரியாத கப்பல் மோதியது. இதில் திருவனந்தபுரம், கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மாயமாயினர். இதுகுறித்து அப்போதைய கேரள மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையினரும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் முறையிட்டனர்.

கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி கேரள கடலில் இத்தாலி வணிக கப்பலான "என்ரிகா லெக்ஸி'-யிலிருந்த இரண்டு மாலுமிகள் சுட்டதில் இந்திய மீனவர்கள் வாலண்டின் ஜெலஸ்டின், அஜீஷ் பிங்க் ஆகியோர் உயிரிழந்தனர். அப்போதைய கேரள அரசின் தலையீட்டால், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைத்தது.

மீனவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் இது போன்ற கடற் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தொலைதூர அடையாள கண்காணிப்பு மற்றும் தொலைதூர ரேடார் ஆகியவற்றின் உதவியுடன், மோதி விட்டு சாதாரணமாக தப்பிச் செல்லும் கப்பல்களின் இருப்பிடத்தையும் நடமாட்டத்தையும் எளிதாகக் கண்டறிய முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய கப்பல்களைக் கண்டறிய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

கடலில் கப்பல்கள் மீன்பிடிப் படகுகளைக் கடந்துசெல்லும் போது, கப்பல் நிறுவனங்கள் இந்திய கடல்சார் அமைப்புகளின் விதிகளைப் பின்பற்றும்படி செய்ய வேண்டும். துறைமுகங்களில் முறையான கண்காணிப்பும், இந்தியக் கடல் எல்லையைக் கடக்கும் கப்பல்களுக்கான கடல்வழிப் பாதைகளைக் கண்காணிப்பதும் அவசியமாகும்.

சர்வதேச கடல்சார் அமைப்பின் நடத்தை விதிகளைக் கப்பல்கள் பின்பற்றாததே இந்த இழப்புகளுக்கு முக்கியக் காரணம். 2020-இல் கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநர், கப்பல்களுக்காக 50 கி.மீ. மேற்கு நோக்கிய வழித்தடத்தை நிர்ணயித்திருந்த போதிலும், பெரும்பாலான கப்பல்கள் அதை மீறிச் செல்வதாக தெரியவருகிறது. அத்தகைய கப்பல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வணிகக் கப்பல்கள் கரைக்கு மிக அருகில் செல்வதாலும், அதன்மூலம் பாதுகாப்பான கடல் வழித்தடங்களை மீறுவதாலும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூழ்குபவை படகுகள் மட்டுமல்ல, மீனவர்களின் வாழ்வாதாரமும்தான். வாழ்வதற்கான உரிமையின் விழுமியங்களை நிலைநிறுத்துவதும், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளில்தான் உள்ளது.

புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் மீனவர்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், இது போன்று படகுகள் மீது மோதும் கப்பல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மறுபுறம். மேலும், படகுகள் சேதம், உடைமைகள் இழப்பு உள்ளிட்டவற்றால் மீனவர்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மழை, சூறாவளி, சுட்டெரிக்கும் வெயில், நடுங்கச் செய்யும் குளிர் என அனைத்தையும் சமாளித்து ஆழ்கடலையே வீடாகக் கொண்டு சுமார் 45 நாள்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கேற்ற மரியாதையும், பாதுகாப்பும் எப்போதுதான் கிடைக்கப் போகிறது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments