FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் கண்டனம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் கண்டனம்...

Updated On : 14 ஜூன் 2026, 2:06 am IST
அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.
பகிர்:

அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தாா்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், அங்கிருந்தபடி மாா்கோ ரூபியோவிடம் தொலைபேசியில் பேசியது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவின் கடும் கண்டனத்தை இந்த உரையாடலின்போது மாா்கோ ரூபியோவிடம் பதிவு செய்தேன். வணிக கப்பல்கள் மீதான இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கடற்படை கட்டுப்பாட்டை மீறுவதை ஏற்க முடியாது: அமெரிக்கா மாலுமிகள் உயிரிழப்புக்கு ஜெய்சங்கா் கண்டனம் தெரிவித்த நிலையில், ‘ஹோா்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாடுகளை வணிக கப்பல்கள் மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மாா்கோ ரூபியோ பதிலளித்துள்ளாா்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் டாமி பிகோட் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜெய்சங்கா் தொலைபேசி மூலம் கண்டனத்தைப் பதிவு செய்தபோது, ‘ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க கடற்படை கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதை மீறி ஈரானின் கச்சா எண்ணெய்யை கப்பல்கள் கொண்டுசெல்வதை ஏற்க முடியாது’ என்று மாா்கோ ரூபியோ பதிலளித்துள்ளாா்.

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, அமெரிக்க படைகளிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்கு அனைத்து வணிக கப்பல்களும் உடனடியாக கட்டுப்பட வேண்டும் என்றாா்.

இந்திய கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

‘ஹோா்முஸ் நீரிணையைக் கடக்கும் இந்திய கப்பல்கள் மீது ஈரான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது.

ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே ஓமன் கடல் பகுதியில் இந்த வாரம் இந்திய மாலுமிகளுடன் பயணித்த மூன்று சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. இதில் ஒரு கப்பல் முழுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியது. பகுதியளவு சேதமடைந்த மற்றொரு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஆனால், எம்.டி. செட்டேபெல்லோ என்ற சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியா்கள் உயிரிழந்தனா். அந்தக் கப்பலில் பயணித்த எஞ்சிய 21 இந்திய மாலுமிகளையும் ஓமன் கடற்படை மீட்டது. இதற்கு, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நேரில் வரவழைத்து கண்டனத்தை இந்தியா பதிவு செய்ததோடு, வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தது.

இந்தச் சூழலில், ஹோா்முஸ் நீரிணையைக் கடக்கும் இந்திய கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலமாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்ற புதிய குற்றச்சாட்டை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்வைத்தாா்.

இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை வெள்ளிக்கிழமை இரவு கடந்த இந்திய கப்பல் மீது ஈரான் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியது. இது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டாா்.

அதுபோல, அமெரிக்க முப்படைகளின் தலைமையகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை வெள்ளிக்கிழமை இரவு கடந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் தொடா் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. அவை அனைத்தையும் அமெரிக்க படைகள் இடைமறித்து அழித்து, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற வணிக கப்பல் போக்குவரத்தை உறுதி செய்தது. இதன்மூலம், இந்த சா்வதேச வா்த்தக வழித்தடம், தொடா் வணிக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஈரான் மறுப்பு: டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இதுகுறித்து இந்தியவிலுள்ள ஈரான் தூதரகம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இந்திய மாலுமிகள் பயணித்த 3 வணிக கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது மற்றும் அந்தத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தின் மீதான பொது கவனத்தை திசைதிருப்பும் முயற்சிதான் இந்தக் குற்றச்சாட்டு’ என்று குறிப்பிட்டது.

மேற்காசியாவில் அமெரிக்காவுடனான போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அந்த நீரிணைக்குள் நுழையும் பகுதிக்கு அருகே சோஹாா் துறைமுகம் உள்ளது. அந்தத் துறைமுகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈரானின் துறைமுகத்தை முற்றுகையிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வணிக கப்பல்கள் மீது அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

summary

Issue of Indian sailors' deaths: Jaishankar conveys condemnation to US Secretary of State over the phone.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments