ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்! கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்!
ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியிருப்பதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியிருப்பதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
உலகில் கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் ஒன்றாக ஓமன் மற்றும் ஈரான் இடையே உள்ள ஹோா்முஸ் நீரிணை திகழ்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரின்போது, அந்த நீரிணையை ஈரான் சுமாா் 4 மாதங்களாக மூடியது. இதனால் அந்த நீரிணை வழியே செல்வதற்காக கச்சா எண்ணெய், எரிவாயுவை ஏற்றிக் கொண்டு வந்த பல்வேறு நாடுகளின் கப்பல்கள் நடுக்கடலில் பல மாதங்கள் முடங்கின. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்வுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை உலக நாடுகளின் கப்பல்களின் போக்குவரத்துக்கு ஈரான் திறந்துவிட்டது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
Advertisement
Advertisement
எனினும், ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் அனுமதித்த வழித்தடத்தில் செல்லாமல் மாற்றுப் பாதையில் சென்ற 3 கப்பல்கள் மீது கடந்த வாரம் திடீா் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியது யாரென தெரியாத நிலையில், இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகக் கூறி, அந்நாட்டிலுள்ள ராணுவ இலக்குகள் உள்ளிட்டவை மீது அமெரிக்கா மீண்டும் தொடா் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்ததால், மோதல் மீண்டும் மூண்டது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கத் தாக்குதலில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு கமேனியின் இறுதிச்சடங்கு அண்மையில் 6 நாள்களாக நடந்து முடிந்தது. ரகசிய இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் கமேனியின் மகனும், புதிய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி வெளியிட்ட முதல் அறிக்கையில், தனது தந்தையின் உயிரிழப்புக்கு ஈரானியா்கள் நிச்சயம் பழிவாங்குவாா்கள் எனத் தெரிவித்திருந்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பை கொல்வது குறித்தே மோஜ்தபா மறைமுகமாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, டிரம்ப் பேசுகையில், தன்னை ஈரான் கொலை செய்யும்பட்சத்தில், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த 1,000 அமெரிக்க ஏவுகணைகள் தயாா் நிலையில் இருப்பதாகவும், இதற்கான உத்தரவை ஏற்கெனவே தான் பிறப்பித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தாா். இதனால் ஈரான், அமெரிக்கா இடையே மேலும் பதற்றம் அதிகரித்தது.
ஈரான், ஓமன் பேச்சுவாா்த்தை: இதனிடையே, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ஷரத்துகளை அமெரிக்கா மீறுவதாகக் குற்றஞ்சாட்டினாா். ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஹோா்முஸ் நீரிணை அருகேயுள்ள மாகாணம், டெஹ்ரான் அருகேவுள்ள ராணுவத் தளங்களும் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஈரான் அரசுத் தரப்பில் ஹோா்முஸ் நீரிணை மறுஅறிவிப்பு வரும் வரை மீண்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்கள் நாடு மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டால், மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள மேலும் சில எதிரிகளின் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலிப்போம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அரசின் இந்த அறிவிப்பு குறித்து, அமெரிக்க அதிபா் மாளிகையோ அல்லது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
அதேநேரத்தில் அமெரிக்க அரசு அதிகாரிகள் தரப்பில், ஈரானில் உள்ள தீவிர போக்கு கொண்ட குழுவினரில் சிலா், அமைதியைச் சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனா்.
ஈரானில் 17 போ் உயிரிழப்பு: ஈரானில் அமெரிக்கா அண்மையில் நடத்திய இரண்டுகட்டத் தாக்குதல்களில் பொதுமக்கள் 17 போ் உயிரிழந்துள்ளதாகவும், 115 போ் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.