முகப்பு
இந்தியா

அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்

இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சா்ச்சைக்குரிய ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 12:24 am IST
- பிரதிப் படம்
பகிர்:

‘ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சா்ச்சைக்குரிய ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன’ என்று வெளியுறவு அமைச்சகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுத்ததைத் தொடா்ந்து, அதன் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தீவிர தாக்குதலை நடத்தி வந்தன. போா் தொடா்ந்து தீவிரமடைந்த நிலையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குக் கப்பல்களின் முக்கிய கடல் வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தட்டுப்பாட்டால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உயா்த்தப்பட்டன.

இந்தச் சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கடந்த 17-ஆம் தேதி கையொப்பமானது. அதில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானும் கையொப்பமிட்டனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறந்தது. இதனால், அந்த வழித் தடத்தில் 110 நாள்களுக்குப் பிறகு சரக்குக் கப்பல் போக்குவரத்து சீரானது. இதனால், இந்தியா நோக்கி வரும் கப்பல்களும் தடையற்ற பயணத்தைத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. இதில் இந்திய தேசியக் கொடி பொருத்திய 3 கப்பல்கள் தலா 2,85,000 டன் கச்சா எண்ணெய்யை எடுத்து வருகின்றன. இது தவிர ஒரு வெளிநாட்டுக் கொடி பொருத்திய கப்பல் கச்சா எண்ணெய்யையும், 6 வெளிநாட்டுக் கொடி பொருத்திய கப்பல்கள் உரங்கள் உள்ளிட்ட பிற சரக்குகளையும் எடுத்து வருகின்றன.

இவை தவிர, இந்திய கொடி பொருத்திய மேலும் 10 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே பாரசீக வளைகுடா பகுதியில் பயணத்தைத் தொடங்க காத்திருக்கின்றன. அந்தக் கப்பல்களும் விரைவில் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடக்கும் என நம்புகிறோம் என்றாா்.

போா் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டால், கடந்த மே 15-ஆம் தேதிமுதல் 11 நாளிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 7.50 அளவுக்கு உயா்த்தப்பட்டது. அதுபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாா்ச் மாதம் ரூ. 60 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மே மாதம் ரூ. 29 அளவுக்கு உயா்த்தப்பட்டது.

போா் முடிவுக்கு வந்ததால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளபோதும், குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் சரக்கு இந்தியா வந்தடைந்த பிறகே, எரிபொருள்கள் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி தெரிவித்தாா்.

தற்போது, கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல்கள் இந்தியா நோக்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் எரிபொருள்கள் விலை குறைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments