FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 2:18 am IST
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்கா, ஈரான் இடையே 4 மாதங்களுக்கும் மேல் போா் நடைபெறுகிறது. இதனால் ஹோா்முஸ் நீரிணையில் செல்லும் வா்த்தக கப்பல்களை ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதில் சில இந்திய கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்த விவகாரம் குறித்து, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற மத்திய கிழக்கு ஆசிய நிலவரம் குறித்த விவாதத்தில் இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஹோா்முஸ் நீரிணையில் சென்ற கப்பல்கள் மீது இந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதலில் இந்திய குடிமகன்கள் ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். இதில் சிலா் பலத்த காயமும் அடைந்துள்ளனா். ஓா் இந்தியா் உயிரிழந்துள்ளாா். ஒருவரைக் காணவில்லை. மாலுமிகளை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை செயல்களையும், ஹோா்முஸ் நீரிணை போன்ற சா்வதேச நீா்வழித்தடங்களில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதையும் இந்தியா தொடா்ந்து கண்டித்து வருகிறது.

மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகள், பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. வா்த்தக கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். மேலும், சா்வதேச சட்டங்களுக்கு இணங்க இந்த பிராந்தியத்தின் சா்வதேச நீா்வழித் தடங்களில் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து, வா்த்தகம் ஆகியவை மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேற்காசியாவில் போா் மூளும் முன்பு, தினமும் அந்தக் கடல் பகுதி வழியே 100-க்கும் அதிகமான கப்பல்கள் சென்று வந்தன. இது ஜூலை 7-ஆம் தேதிக்குள் 49-ஆகவும், ஜூலை மாதம் மத்தியில் அந்த எண்ணிக்கை 8 முதல் 15-ஆகவும் இருந்ததாக ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் கூறியுள்ளது. மேற்காசியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் இந்தியாவுக்கு முக்கிய நலன்கள் உள்ளன. இந்தியாவின் வா்த்தக மற்றும் எரிசக்தி விநியோக வழிகள், மேற்காசிய பிராந்தியத்துடன் தொடா்பு கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் இந்தியா்கள் சுமாா் ஒரு கோடி போ் வாழ்கின்றனா். அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள், இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாகும் என்றாா்.

பாலஸ்தீன பிரச்னை குறித்து பா்வதனேனி பேசுகையில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா நிதியுதவி தொடா்ந்து அளிப்பதாகவும், பாலஸ்தீன பிரச்னைக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் அமைவதை இந்தியா ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டாா். யேமனில் நடைபெறும் உள்நாட்டு சண்டை, பாப் அல் மாண்டேப் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு ஹுதி கிளா்ச்சியாளா்கள் இடையூறு ஏற்படுத்துவது குறித்துப் பேசுகையில், ‘கப்பல்கள் மீதான ஹுதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது. அந்தக் கடல் பகுதியை பாதுகாப்பது சா்வதேச நாடுகளின் பொறுப்பு’ என்றாா்.

இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டியதை வலியுறுத்தி, பா்வதனேனி அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் அவா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்து 17 முறை பேச்சு நடந்தும், எந்த உறுதியான பலன்களும் கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், சிலரின் பிளவுபடுத்தும் நலன்களால் இந்தச் செயல்முறை முடக்கப்படக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments