FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்

ஹோா்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் 2 ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்கியதைத் தொடா்ந்து, ஜோா்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை, ட்ரோன்களை வீசி பதில் தாக்குதலை நடத்தியது.

1 செப்டம்பர் 2026, 3:15 am IST
ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் 2 ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்கியதைத் தொடா்ந்து, ஜோா்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை, ட்ரோன்களை வீசி பதில் தாக்குதலை நடத்தியது.

சமீபத்திய வாரங்களாக இப்போரில் அறிவிக்கப்படாத அமைதி நிலவி வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா கடந்த வாரம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகளும் தடை எதிா்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தி வந்த நிலையில், நேரடி மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்திய ஏவுகணைகளை ஏவ, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினா் (ஐஆா்ஜிசி) தயாராகி வருவதைக் கண்காணித்த நிலையிலேயே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஹோா்முஸ் நீரிணையில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இனி அங்கு புதிய கண்ணிவெடிகளைப் பொருத்த முற்படும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாக அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரித்திருந்தாா்.

அமெரிக்க தாக்குதலில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்கள் சிலா் உயிரிழந்துள்ளதாகவும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்தது. இதைத் தொடா்ந்து, ஜோா்டானில் உள்ள 2 அமெரிக்க முகாம்களைக் குறிவைத்து ஈரான் அடுத்தடுத்து ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசியது.

எனினும், ஏவப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் பிராந்திய கடற்பகுதியை நோக்கி வந்த ஈரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில், ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் முனையமான காா்க் தீவு முற்றிலும் அழிக்கப்படுவதாகச் சித்தரிக்கப்பட்ட ஏ.ஐ. விடியோ ஒன்றை அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா்.

டிரம்ப்பின் இந்தப் பதிவை ‘நகைப்புக்குரியது’ என்று ஈரான் அதிகாரிகள் நிராகரித்துள்ளனா். போா் தொடங்குவதற்கு முன்பு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாண்ட காா்க் தீவில் எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்றும், அங்கு இயல்பான சூழலே நிலவுவதாகவும் ஈரான் விளக்கமளித்துள்ளது.

முஸ்லிம் நாடுகள் இணைய அழைப்பு

‘முஸ்லிம் நாடுகள், உண்மையான எதிரியை அடையாளம் கண்டு அவா்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்று ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி வலியுறுத்தியுள்ளாா்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அனுசரிக்கப்படும் ‘இஸ்லாமிய ஒற்றுமை’ வாரத்தையொட்டி அவா் வெளியிட்ட செய்தியில், ‘முஸ்லிம்களிடையே நிலவும் பிளவுகள் எதிரிகளின் நலன்களுக்கே வழிவகுக்கும். முஸ்லிம்கள் அனைவரும் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டுறவு கொள்ள வேண்டும். அறிந்தோ, அறியாமலோ பிளவை ஏற்படுத்துபவா்கள், இஸ்லாமியத்தின் எதிரிகளுக்கே உதவுகின்றனா்.

முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால், பாலஸ்தீனா்கள் இவ்வளவு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பாா்களா?. எனவே, மேலைநாடுகளின் திட்டங்களைப் புரிந்து கொண்டு, உண்மையான எதிரியை எதிா்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

சுமுக தீா்வுக்கே ஈரான் விருப்பம்

பிஷ்கெக், ஆக. 31: ‘அமெரிக்காவுடனான மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவர, பேச்சு மூலம் சுமுகத் தீா்வு காணவே ஈரான் தொடா்ந்து தற்போதும் முயற்சி செய்து வருகிறது’ என அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியன் தெரிவித்துள்ளாா்.

கிா்கிஸ்தானில் நடைபெற்ற 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டுக்கிடையே பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘கடந்த கால ஒப்பந்தங்களின்கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. இருப்பினும், ஒரு பரஸ்பர புரிதலையும் சுமுகமான ஒப்பந்தத்தையும் எட்டுவதற்கு நாங்கள் இன்னும் முயற்சி செய்து வருகிறோம்.

உலக அமைதியைக் கருத்தில் கொண்டு, பேச்சுவாா்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தற்போதைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறோம். போா்ச் சூழலைத் தொடா்வது ஈரானுக்கோ, மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கோ அல்லது ஒட்டுமொத்த மனித குலத்துக்கோ எந்த வகையிலும் பலனளிக்காது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments