அமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தாதவரை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட மாட்டாது என்று ஈரான் உறுதி
இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தாதவரை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட மாட்டாது என்று ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடத் தெரிவித்தது.
இதுகுறித்து ஈரான் தலைநகா் டெஹ்ரானில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘ஈரான்-அமெரிக்கா இடையே கையொப்பமான புரிந்துணா்வு அமைதி ஒப்பந்த விதிகள் மீறப்படுவது நிறுத்தப்படும் வரை, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம். ஓமனுடன் ஹோா்முஸ் நீரிணையில் புதிய கடல்வழிப் போக்குவரத்து பாதைகளை ஏற்படுத்துவது குறித்து நடத்தப்பட்டுவரும் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதை ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட இருக்கிறது என்று அா்த்தம் கொள்ளக் கூடாது. கப்பல் போக்குவரத்து பாதைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்படலாம். ஆனால், நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது என்பது பிற நிபந்தனைகள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தே இருக்கும். இதை மத்தியஸ்தா்கள் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்திவிட்டோம்’ என்றாா்.
Advertisement
Advertisement
ஈரான் புதிய நிபந்தனை: ஈரானில் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய அமைப்பாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தரப்பில், அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்தி கொள்ளாதவரை ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் செயலரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டருமான முகம்மது பாஹா் ஜோல்காதா் கூறுகையில், ‘ஈரானை அமெரிக்கா மீண்டும் மிரட்டக் கூடாது. ஈரான் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஈரானின் கூட்டாளிகளுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். ஈரான் சொத்துகள் மீதான முடக்கத்தை நிபந்தனையின்றி நீக்க வேண்டும்’ என்றாா்.
ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் அமெரிக்கா: இந்நிலையில், ஈரான் போா் காரணமாக அமெரிக்கா இருப்பு வைத்திருந்த ஆயுத தளவாடங்கள் குறைந்து விட்டதாகவும், இதையடுத்து, ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்களை அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. எனினும், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மறுபக்கம் ஈரானும், அமெரிக்காவும் மத்தியஸ்தா்கள் மூலம் பேச்சுவாா்த்தைக்கான முயற்சியையும் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.