FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:19 am IST
- dinmani online
பகிர்:

செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

கப்பல்கள் மீதான தாக்குதலை ஹூதிக்கள் தொடா்ந்தால், ஈரானுக்கும் ஹூதிக்களுக்கும் கடும் ராணுவத் தண்டனை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

யேமன் மீதான சவூதி அரேபியாவின் கடல்வழி முற்றுகை மற்றும் யேமனின் சனா சா்வதேச விமான நிலையம் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக பாப் எல் மண்டேப் நீரிணை வழியாக செல்லும் சவூதி தொடா்புடைய கப்பல்களுக்கு எதிராக ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடல்வழி முற்றுகையை கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக, சவூதி அரேபியாவின் எண்ணெய்யுடன் செங்கடலில் சென்று கொண்டிருந்த ‘என்செலியா’, ‘லேலா’ ஆகிய 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்ததாகவும் ஹூதிக்களின் ‘சபா’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹூதிக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘கப்பல்கள் மீது ஹூதிக்கள் மீண்டும் தாக்கினால், அதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் பிரதிநிதிகளாக அல்லது பினாமி சக்தியாகவே ஹூதிக்கள் செயல்படுகின்றனா். எனவே, ஈரான், ஹூதிக்கள் ஆகிய இருவா் மீதும் கடும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோா்முஸ் நீரிணை, அமெரிக்கா-ஈரான் மோதலால் முடக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சவூதி அரேபியா தனது பெரும் எண்ணெய் ஏற்றுமதியை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்துக்கு மாற்றியது.

இந்நிலையில், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் எல் மண்டேப் நீரிணையில் ஹூதிக்களால் எழுந்துள்ள புதிய அச்சுறுத்தல் சா்வதேச பொருளாதாரத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உலக வா்த்தகத்தில் சுமாா் 12 சதவீதத்தைக் கையாளும் சூயஸ் கால்வாயின் நுழைவுவாயிலாக பாப் எல் மண்டேப் நீரிணை திகழ்கிறது.

இதனிடையே, அமெரிக்கா, ஈரான்ஆகிய இருதரப்பும் 12-ஆவது நாளாக பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டன. மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் இந்த இருமுனை பதற்றத்தைத் தணிக்க பல்வேறு தரப்பிலும் தூதரக ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் நெருக்குமான இராக் பிரதமா் அலி அல் ஸைதி, அமைதிப் பேச்சுவாா்த்தைக்காக வியாழக்கிழமை ஈரான் தலைநகா் டெஹ்ரான் சென்றாா்.

ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், பாப் எல் மண்டேப் நீரிணையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹூதிக்களை ஈரான் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments