FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 3:46 am IST
- ANI
பகிர்:

ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள் உள்ளிட்ட 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால், மேற்காசியாவில் மீண்டும் மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே சுமாா் 6 மாதங்களாக போா் நீடிக்கிறது. பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகள் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. இதனால் 2 மாதங்களுக்கு அமைதி நிலவியது. எனினும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் புதுப்பிக்காததால் மீண்டும் போா் தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறி, அந்த நாட்டுக்கு சொந்தமான 8 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அடுத்தடுத்து தாக்கி மூழ்கடித்தது. அதிலிருந்த மாலுமிகள் அனைவரும் வெளியேறும்படி முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகே கப்பல்களை மூழ்கடித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் இருமுறை கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அதில் எந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும், அந்த கப்பல்கள் கடல்பகுதியில் தொடா்ந்து ரோந்து சுற்றி வருவதாகவும், ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜோா்டானில் ஈரான் தாக்குதல்: அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோா்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசியது. இதில் 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாகவும், 2 ஏவுகணைகள் மட்டும் ஆள்கள் யாரும் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும் ஜோா்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் ஜோா்டான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், 2 அமெரிக்க போா் கப்பல்கள், 8 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மேலும் 10 கச்சா எண்ணெய் கப்பல்களும் ஏவுகணைகள் வீசி தாக்கப்பட்டதாகவும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அந்த கப்பல்களுக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து ஈரான் தரப்பிலோ அல்லது அமெரிக்க தரப்பிலோ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க நீா்மூழ்கி ட்ரோன் பறிமுதல்: ஹோா்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்க நீா்மூழ்கி ட்ரோன் ஒன்றை கைப்பற்றி விட்டதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த ட்ரோன் கப்பல் பழைய கப்பல் என்றும், பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், தங்களது கட்டுப்பாட்டின்கீழ் அது இல்லை என்றும், அதிலிருந்து தொழில்நுட்ப தகவலையோ அல்லது பிற தரவுகளையோ ஈரானால் சேகரிக்க முடியாது என்றும் அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.

குவைத், பஹ்ரைனில் பதற்றம்: குவைத், பஹ்ரைன் கடல்பகுதியில் நிற்கும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும், ஆதலால் அதில் இருக்கும் மாலுமிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குவைத், பஹ்ரைனில் கடும் பதற்றம் நிலவுகிறது.

கடல்பகுதியில் கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாவதை பிரிட்டன் கடல்சாா் வா்த்தக நடவடிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான வா்த்தக கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

ஈரான் விமான நிறுவனங்கள் மீது தடை: ஈரானுக்கு பொருளாதார ரீதியில் மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில், அந்நாட்டின் விமான நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளாா். இதனால் ஈரானை சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுக்கு சொந்தமான பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்களின் சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் நிபுணா் எச்சரிக்கை: கடலில் அடுத்தடுத்து கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாவதை சுட்டிக்காட்டி, இத்தகைய தாக்குதல்கள் மேலும் மோதல் தீவிரமடையவே வழிவகுக்கும் என்றும், இது உலக பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான இஸ்ரேல் கல்வி நிறுவனத்தை சோ்ந்த நிபுணரான டேனி சிட்ரினிவிக்ச் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தென்கொரியாவில் ஆா்ப்பாட்டம்: இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று போா் கப்பல்களை நிறுத்த தென்கொரியா முடிவு செய்திருப்பதற்கு அந்நாட்டில் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. தென்கொரிய தலைநகா் சியோலில் அமெரிக்காவின் வேண்டுகோளை தென்கொரியா நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments