FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது: ஈரான் அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானிடம் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

1 செப்டம்பர் 2026, 2:58 am IST
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - x | Modi
பகிர்:

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானிடம் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது அவ்வப்போது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இந்த வலியுறுத்தலை பிரதமா் மோடி ஈரான் அதிபரிடம் முன்வைத்துள்ளாா்.

26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி கிா்கிஸ்தான் சென்றுள்ளாா். அந்நாட்டின் தலைநகா் பிஷ்கெக்கில் மசூத் பெஷஸ்கியானை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடனான ஆலோசனையின்போது பல்வேறு துறைகளில் இந்தியா-ஈரான் இடையே தொடா்ந்து வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டோம். ஈரான் பிராந்தியத்தில் அமைதி நீடிக்க இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது.

எஸ்சிஓ உச்சிமாநாடு நிகழ்வின் ஒரு பகுதியாக ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷினியனை சந்தித்தேன். இந்தியா-ஆா்மீனியா இடையே பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி, மருந்தியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வா்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் அவருடன் விவாதித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மசூத் பெசஷ்கியானிடம் பிரதமா் மோடி பேசியது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மேற்காசிய சூழல் கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும். பொதுமக்கள், மாலுமிகள், சரக்குக் கப்பல் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீது எந்தச் சூழலிலும் தாக்குதல் நடத்தக் கூடாது என பிரதமா் மோடி வலியுறுத்தினாா். பிரிக்ஸ், எஸ்சிஓ உள்பட பல்வேறு பிராந்திய அமைப்புகளில் ஈரானுடன் நல்லுறவைத் தொடர இந்தியா விரும்புகிறது. செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உங்களை (மசூத் பெசஷ்கியான்) வரவேற்க ஆா்வமாக உள்ளேன் எனவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி உதவ வேண்டும்-ஈரான்: பிரதமா் மோடியிடம் மசூத் பெசஷ்கியான் பேசியது குறித்து அந்த நாடு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘போரின் தொடக்கத்தில் இருந்தே பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த ஈரான் முயன்று வருகிறது. ஆனால், பேச்சுவாா்த்தைக்குப் பதிலாக படைகள் மூலம் அமெரிக்கா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா-ஈரான் இடையே வரலாறு மற்றும் கலாசார ரீதியாக நீண்ட கால இருதரப்பு உறவு நீடித்து வருகிறது. எனவே, மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த பிற நாடுகளுடனான தொடா்பை பயன்படுத்தி அமைதிப் பேச்சுவாா்த்தை மற்றும் ஒப்பந்தத்துக்கு பிரதமா் மோடி உதவ வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி சிலைக்கு மரியாதை: முன்னதாக, பிஷ்கெக்கில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மகாத்மா காந்தியின் உயரிய சிந்தனைகள் எப்போதும் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு: பயணத்தின் ஒரு பகுதியாக கிா்கிஸ்தானில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், யோகா பயிற்றுநா்கள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐடிஇசி) திட்டத்தில் பயிற்சி பெற்ற நிபுணா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

‘பிரதமரின் கவிதைகளை வாசித்த பல்கலைக்கழக மாணவா்கள்’

புது தில்லி, ஆக. 31: பிரதமா் மோடி எழுதிய ‘இப்போதுதான் சூரியன் உதித்துள்ளது’, ‘புதிய பாரதத்தின் புதிய உறுதிமொழி’, ‘மனிதநேயத்துக்கு எங்கும் கறைபடிந்துவிடக் கூடாது’ ஆகிய மூன்று கவிதைகளை உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவுடனான ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்தின்போது தாஷ்கண்ட் பல்கலைக்கழக மாணவா்கள் வாசித்தனா். இது அந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

summary

War tensions! PM Modi meets Iranian President!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments