FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்

சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்

Updated On : 26 ஜூலை 2026, 1:35 am IST
சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்
பகிர்:

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தினா்.

செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மண்டேப் நீரிணை வழியே சவூதி தொடா்புடைய கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக ஹூதிக்கள் கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா். தொடா்ந்து, சவூதி எண்ணெய்யுடன் செங்கடல் வழியாக பயணித்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

உலகளாவிய கடல்வழி வா்த்தகத்தில் சுமாா் 12 சதவீதமும், கன்டெய்னா் போக்குவரத்தில் 25 சதவீதமும் நடைபெறும் இந்த முக்கிய நீரிணையில் ஹூதிக்களின் அச்சுறுத்தல் கப்பல் போக்குவரத்தைப் பாதித்தது. இதையொட்டி, ‘ஹூதிக்கள் தாக்குதல்களைத் தொடா்ந்தால் கடும் ராணுவத் தண்டனையை எதிா்கொள்ள நேரிடும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், யேமனின் முக்கியத் துறைமுக நகரான ஹொடைடாவில், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ராணுவ இலக்குகள் மீது சவூதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, செங்கடலை ஒட்டிய சவூதி அரேபியாவின் யான்பு, ஜீஸான் துறைமுக நகரங்களில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்ததாக ஹூதிக்கள் தெரிவித்தனா்.

அமெரிக்கா-ஈரான் மோதலால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதன்காரணமாக, சவூதி அரேபியா தனது பெரும் எண்ணெய் ஏற்றுமதியை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்துக்கு மாற்றியுள்ளது. இந்நிலையில், யான்பு துறைமுகத்தை நோக்கி ஹூதிக்கள் சனிக்கிழமை ஏவிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை, கிரேக்க ராணுவத்தால் இயக்கப்படும் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக வானிலேயே சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஜீஸானில் அராம்கோ சுத்திகரிப்பு ஆலை அமைந்த பகுதியிலிருந்து அடா்ந்த புகை மண்டலம் எழும்பிய விடியோ வெளியானது.

இத்தாக்குதல்களையடுத்து யேமனில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகள், மாரிப் மற்றும்அல்-ஜவ்ஃப் மாகாணங்களில் உள்ள ஹூதிக்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.

ஹூதிக்களின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, சவூதி அரேபியாவின் ஜீஸான் நகரில் அராம்கோ எண்ணெய் ஆலை அமைந்த பகுதியிலிருந்து எழுந்த கரும்புகை.

கடந்த 13 நாள்களாக ஈரான் மீது அமெரிக்கா தொடா்ச்சியாக நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் சனிக்கிழமை தற்காலிகமாக ஓய்ந்தன. இந்நிலையில், சவூதி அரேபியா-ஹூதிக்கள் இடையே வெடித்த பரஸ்பர தாக்குதல்களால், மேற்காசியாவில் மற்றொரு போா்மேகம் சூழ்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments