மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பூமியின் புற வெப்பநிலையானது அதிகரித்துள்ளதைப் பற்றி...
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான். வெப்பத்தைத் தவிர்ப்பது என்பது மனித வாழ்வில் இயலாத ஒன்று. ஆனால், அதற்கு அளவு உள்ளது. நமது பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லை.
புவி வெப்பமடைதலைப் பொருத்தவரையில், அதை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. பூமிக்குள் உள்நுழையும் வெப்ப ஆற்றல், பூமியிலிருந்து கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றல். இந்த இருவகை வெப்பப் பரிமாற்றங்களின் சமநிலையே பூமியின் வெப்ப ஆற்றல் பட்ஜெட் என்கிறது அறிவியல். இந்த ஆற்றல் சமநிலையில் பெரும் மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளதை சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பூமியின் புற வெப்பநிலையானது அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், 2015 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலம் அதிக வெப்பநிலை நிலவியது என அறிய முடிகிறது. அத்துடன் கடந்த 65 ஆண்டுகள் பூமியின் வெப்ப ஆற்றல் சமநிலையில்லாமல் உள்ளதையும் அது தெளிவுபடுத்தியது. 2025-ஆம் ஆண்டை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் பதிவான வெப்பநிலை வரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகபட்ச வெப்பம் நிலவிய காலமாக இருந்துள்ளது. மேலும், அத்தகைய வெப்பநிலை என்பது 1850-க்கும் 1900-ஆம் ஆண்டுக்கும் இடையே நிலவிய சராசரி வெப்பநிலையைவிட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றால் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியும்.
Advertisement
Advertisement
'உலக காலநிலை அபாய நிலையில் உள்ளது. பூமிப் பந்து அதன் எல்லைகள் கடந்து விடப்பட்டுள்ளன. அனைத்து காலநிலை காரணிகளும் அபாயத்தையே வெளிப்படுத்துகின்றன' என ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார். நிலைமையின் தீவிரம் கருதி நிகழாண்டு ஜெனிவாவில் நடைபெற்ற உலக வானிலை தினத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் புவி வெப்ப ஆற்றல் சமநிலையின்மை குறித்த அறிவிப்புகள் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளன. பூமியின் வெப்பநிலை உயர்வால் அதிகம் பாதிப்புக்குள்ளவது ஆழ்கடல்களே. இதனால், துருவப் பகுதிகளின் பனி உருகுவதும், அதைத் தொடர்ந்து கடல் மட்டத்தின் அளவு அதிகரிப்பதும் மனித குலத்தின் மிகப் பெரிய சவாலாகும்.
ஆர்டிக் பனிக்கடலின் பரப்பு வெகுவாகக் குறைந்துள்ளன. கடந்த 1979 தரவுகளுடன் ஒப்பிடுகையில் 2025-இல் ஒரு ச.கி.மீட்டருக்கு 14.19 மில்லியன் என்ற அளவுக்கு அதன் பனிப்பரப்பு குறைந்துள்ளது. இதை ஓர் அபாய சமிக்ஞையாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1993-ஆம் ஆண்டு கடல் மட்டத்துடன் ஒப்பிடுகையில் 2014-இல் சராசரி உலக கடல் அளவு 11 செ.மீ. உயர்ந்துள்ளது. இதனால், கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்புகள் கடலரிப்புக்கு உள்ளாகின்றன. மேலும், கடல் வளங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. அதன் பாதிப்புகள் அத்துடன் நில்லாது நிலத்தடி நீரில் உவர்ப்புத் தன்மையையும் அதிகப்படுத்துகின்றன.
இன்னும் சில பத்தாண்டுகளில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் நன்னீரற்ற பகுதிகளாக மாறினாலும் வியப்பில்லை. ஆழ்கடல்களின் அமிலத் தன்மை பூமி வெப்பமாதலில் மற்றொரு பிரச்னை. கடந்த 41 ஆண்டுகளில் ஆழ்கடல்களின் அமிலத் தன்மை அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு ஆழ்கடல்களின் அதிகப்படுத்தப்பட்ட கரியமில வாயு கலப்பே காரணம். 2015 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆழ்கடல்களில் காணப்பட்ட கரியமில வாயுவில் 29 சதவீதம் மனிதச் செயல்களே காரணம். இதனால், கடல் சூழல் மாறுபடுவதுடன் கடல் உயிரிகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. வெப்பநிலை மாறுபாட்டால் நிகழும் காலநிலை மாற்றத்தின் மற்றொரு தவிர்க்க இயலாத விளைவு சுகாதாரப் பாதிப்பு.
வெப்பநிலையால் உயிர் கோளத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம், அதனால் விளையும் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களுக்கு வழிகோலுகிறது. இதனால், ஏற்படும் நீர் மூலம் பரவும் நோய்கள் மனித குலத்துக்கு மற்றொரு சவால். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கைகள் நீர் மூலம் பரவும் நோய்களுக்கும் இந்த வெப்பநிலை மாறுபாடு மறைமுகக் காரணமாக உள்ளதை உணர முடிகிறது. மேலும், அதனால் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்த தகவலையும் உலக சுகாதார அமைப்பு பதிவு செய்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் காலநிலைக்கும் பங்கு உண்டு. இதை நிர்ணயிப்பதில் பூமி வெப்பமாதலுக்கான பங்கைத் தவிர்க்க முடியாது. பொய்த்துப் போன மழை அல்லது முன்கூட்டியே பெய்த மழையும் ஒரு நாட்டின் வேளாண்மையைப் பாதிக்கிறது. இத்தகைய நிலையில் வேளாண்மை அந்த நாட்டின் பொருளாதாரத்தை துளைத்து விடுகிறது.
வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தம் உள்ளிட்டவற்றால் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வேளாண்மை மற்றும் தொழில் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சார்ந்த தொழில்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
மனிதன் வாழும் போதும், அவனின் இறப்புக்குப் பின்னும் இடமளிக்கும் இந்த பூமிக்காக உயிர் கொடுக்கும் உன்னதச் செயல்களைச் செய்ய வேண்டும் என சபதம் ஏற்க வேண்டும். அப்போதுதான் நம் பூமியின் தீராத தாகம் தணியும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.