முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

இன்றைய அரசியல் சூழலில் யார் தலைவர் என்றால் மேய்ப்பவர், தலைவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

Updated On : 4 மே, 2026 at 6:00 AM
மகளிர் - பிடிஐ
பகிர்:

பண்டித நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை காந்திகிராமம் வந்துள்ளார். இரண்டு முறையும் அங்கு உரையாற்றியுள்ளார். நான் காந்திகிராமத்தில் இணைந்ததற்குப் பிறகு இந்த நாட்டை உருவாக்கிய ஆளுமைகள் யார் யாரெல்லாம் அங்கு வந்தார்களோ, அவர்களின் உரைகளையெல்லாம் எழுத்து வடிவத்தில் இருந்தவை அனைத்தையும் தேடிப்பிடித்து பலமுறை படித்து உள்வாங்கினேன். அந்த உரைகளில் பண்டித நேருவின் இரண்டு உரைகளை முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக நான் உணர்ந்தேன்.

இரண்டாவது முறை ஆற்றிய உரை ஆகச்சிறந்தது என்று கூறுவேன். அந்த உரையை காந்திகிராம நிர்வாக அறங்காவலராக இருந்த பத்மநாபன் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த உரை 1964}ஆம் ஆண்டு தன் இறுதிக் காலத்தில் நிகழ்த்தியது. அந்த உரையில் அவர் ஒரு கருத்தை மையப்படுத்தி இருந்தார். எனக்கு இன்று நம்பிக்கை ஒளி ஊட்டுவது சிறிய சிறிய அமைப்புகளும், நிறுவனங்களும்தான். காந்திகிராமம் செய்திருக்கிற பணிகள் எனக்கு நம்பிக்கை தருகின்றன. மாற்றங்களை மக்களோடு இணைந்து செயல்படுவது சிறிய அமைப்புகள்தான். சிறிய அமைப்புகள்தான் காத்திரமாக

மக்களோடு பணி செய்ய முடியும். அந்த வகையில், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாய் காந்திகிராமம் நிற்பதைப் பார்க்கும்போது "சிறியது சாதிக்கும்' என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

Advertisement

இந்தக் கருத்தை இங்கு பதிவிடுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இந்தத் தேர்தல் நேரத்தில் இந்தக் கட்சி போய்விட வேண்டும், அந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று இன்று பலர் விவாதிப்பதை நாம் பார்க்கிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கட்சித் தலைவர்களும், கட்சிக்காரர்களின் வாழ்க்கை மேம்பட்டதேயன்றி சாதாரண மக்களின் வாழ்க்கை செழுமை அடையவில்லை. சாதாண மக்களுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய இயலாததன் விளைவுதான் நேரடிப் பணப்பட்டுவாடா.

இந்தச் சூழலில் இன்று எனக்கு ஒரு நம்பிக்கை சிறிய சிறிய அமைப்புகள்}நிறுவனங்கள் பெரு நம்பிக்கையைத் தருகின்றன. இந்த அமைப்புகளின் வழிகாட்டும் தலைவர்கள் மக்களுடன் தன் முகத்தை மறைத்துக் கொண்டு முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்கள்தான் மக்களுடன் இருக்கிறார்கள். அவர்கள்தான் மக்களை மேம்படுத்துகிறார்கள்.

அண்மையில் "பெண்' என்ற அமைப்பின் ஆண்டு விழாவுக்குச் சென்னை சென்றபோது, அவர்கள் பேசும் "பெண் அரசியல்' என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இன்று கட்சி அரசியல் பிரதானமாக்கப்பட்டு அதுதான் அரசியல் என்று பொதுப்புத்தியில் நுழைத்ததற்குப் பிறகு, பெண் அரசியல் அமைப்பு எது என்று பேசுகிறது என அந்த அமைப்பைப் படித்தேன், அதன் வழிகாட்டி நூல்களைப் படித்தேன். அதன் பிறகு, அவர்களின் மாநாட்டிலும் கலந்து கொண்டு அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தேன்.

இன்றைய பிரிவினையாக, வன்முறை நிறைந்த, ஊழல் கறைபடிந்த அரசியலுக்கு மாற்று ஒன்று அவர்களிடம் எழுவதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பெண் அமைப்பு, தங்கள் அரசியல் என்பது சமூகத்தை நம்பியது, சமூகத்தின் மீது அக்கறை கொண்டது. அந்த அரசியல் பெண்மையை பின்புலத்தில் கொள்வது. அது அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தியது அல்ல. மக்களின் ஒற்றுமையை மக்களின் அறிவார்ந்த செயல்பாடுகளை மையப்படுத்தியது.

இன்றைய அரசியல் சந்தையை நோக்கியதாக நடைபெறும் தீவிரமான சந்தை அரசியல். இதற்கு மாற்றாகப் பெண் அரசியலை முன்னெடுக்கிறது இந்த அமைப்பு. இது ஒரு சிறிய பெண்கள் கூட்டமாக உருவாகி, பெரிய இயக்கமாக அமைதியாக ஓசையற்று மலர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது. அதில் என்னைப் பேச அழைத்திருந்தனர். அந்த அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் முனைந்தபோது, அது ஒரு பக்குவமான அரசியலை முன்னெடுப்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

அதில் வீர வசனங்கள் கிடையாது. அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலில் அபத்தமாக அலங்கோலமாக விளங்குகின்றன. ஒருவரையொருவர் திட்டித் தீர்ப்பதுதான் அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது. உண்மை எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டது. அந்த வன்முறை கொண்ட, வெறுப்பு அரசியலிலிருந்து அறிவியல்பூர்வமான அரசியல் எது என்று மக்களுக்குக் காட்ட பெண்களின் அமைப்பு "பெண்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

ஒரு பக்குவமான பெண் அரசியலை முன்னெடுக்க நேர்மறைக் கருத்துகளைப் பெண்கள் மத்தியில் உருவாக்கி, ஆண்களை எதிரிகளாகப் பார்க்காமல் தோழமையுடன் ஒரு பக்குவமான சமத்துவமான குடும்ப வாழ்க்கையை உள்வாங்கிக் கொள்ளத் தேவையான ஒரு கருத்தியலை உருவாக்கி பெண்களுக்கு வழிகாட்டி செயல்பட்டு வருவது இந்த அமைப்பின் புதுமை. முரண்பாட்டை உடன்பாடாக்கும் முறையைக் கற்றுக்கொண்டு குடும்பத்துடன், பணியுடன் சமூகக் கண்ணோட்டம் கொண்டு பெண்களுக்கான உரிமையைப் பெற்று மரியாதையுடைய வாழ்வைக் கட்டமைத்துக் கொள்ள வழிகாட்டிச் செயல்படுவது ஒரு காத்திரமான செயலாகப்பட்டது.

அந்த நிகழ்வில் அவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்தி என் உரையை நிறைவு செய்து கொண்டேன். எல்லையில்லாப் பிரிவுகளுடன் அடிமை வாழ்வை வாழ்ந்த இந்தியர்கள் நாம் அனைவரும் இந்தியர்களாக இணைந்ததால் நாம் அன்று விடுதலை அடைந்தோம். அன்று வேற்றுமை களைந்து ஒற்றுமை கண்டோம்; ஒருங்கிணைந்தோம்; ஒருமைப்பாடு கண்டோம். எனவே விடுதலை நமக்குச் சாத்தியமானது.

அதற்கு நம் தலைவர்கள் தங்களின் தியாக வாழ்வின்மூலம் வழிகாட்டினார்கள். மக்கள் அவர்கள் மேல் எல்லையற்ற நம்பிக்கை வைத்துச் செயல்பட்டனர். இன்று நாம் இந்தியர்களாக வாழ நம்மை நம் அரசியல் கட்சிகள் விடவில்லை. நாம் குடிமக்களாக எப்படி வாழ வேண்டும், நமது அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று வழிகாட்டியது நம் அரசமைப்புச் சாசனம். அதை நாம் புறந்தள்ளி அது நீதிமன்றத்துக்கான சாசனம், மக்களுக்கான சமூக சாசனம் என்றோ, அரசுக்கான அரசியல் சாசனம் என்றோ எவரும் பாவிக்காமல் இங்கு நடைபெறும் ஓர் அரசியல், குழப்பத்தில் பிறந்த நம் நாட்டை குழப்பத்திலேயே வைத்துள்ளது நம் கட்சி அரசியல்.

அரசியல் கட்சிகள் வளர்ந்தன; கட்சிக்காரர்கள் சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள். நாம் மக்களுக்காக என்று முழங்குவோர் மன்னர் வாழ்க்கை வாழ்கின்றனர். மக்களோ சுதந்திர நாட்டில் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அடிமைகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களாட்சியில் இதையும் சகிப்பது ஓர் அபத்தம்.

அரசமைப்புச் சாசனத்தில் ஒரு வார்த்தை நம் மக்களை எப்படி சுதந்திர நாட்டுக்கானவர்களாக தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் மாண்புமிகு மக்கள். அது என்ன மாண்புமிகு மக்கள்? மக்கள் தங்களின் ஆளுமையில், பண்புகளில், கண்ணோட்டத்தில், குணங்களில், செயல்களில் உயர்தல்.

எப்படி உயர்தல், அதற்கு அரசு என்ன செய்ய வேண்டும்? குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் மரியாதையுடைய மானுட வாழ்வை நடத்தத் தேவையான வாழ்விடம், வசிப்பிடம், குடிநீர், வாழ்வாதாரம், சுத்தம், சுகாதாரம், கல்வி, மருத்துவம் என அடிப்படை வசதிகளைச் செய்து மக்களை உயர்வுடன் நடத்தும் சூழலை அரசு உருவாக்கித் தரவேண்டும். சுதந்திர நாட்டில் அவர்களை அகதிகள் போல் வாழ அரசு அனுமதிக்கக் கூடாது. அந்த வாழ்க்கை மரியாதையற்ற வாழ்க்கை. அதேபோல் குடிமக்கள், தங்கள் நாட்டுக்கான, சமூகத்துக்கான பங்களிப்பை நேர்மையாக, நியாயமாக, நியதியுடன் நடந்து பக்குவமான மனித வாழ்க்கையை நடத்த வேண்டும். அப்படி நடத்துவதன் மூலம் நாம் நம் மாண்பை உயர்த்திக் கொள்கிறோம்.

நாம் வறுமையில் வாழலாம், ஆனால் முறையற்று வாழ்வது அவமானம் என்ற உளவியல் கொண்டு உழைத்து வாழ்ந்து மனிதருக்கான மாண்பைக் கூட்ட வேண்டும்.

எனக்கொரு வாக்கு இந்த ஜனநாயகம், தந்திருக்கிறது. அதை நான் என் நாட்டுக்காக, என் சமூகத்துக்காக, நான் நியதியுடன், நேர்மையுடன், மக்கள் கருத்துக்கு செவி சாய்க்கும் ஒரு ஒழுக்கமுள்ள பண்புள்ள மனிதராகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வைப் பெற்று செயல்பட்டால் நான் என் மாண்பைக் கூட்டுகிறேன் என்று பொருள்.

அதை விட்டு எனக்குக் கிடைத்த உரிமையை விலைக்கு விற்க முனைந்தேன் என்றால் நான் என் மரியாதையை மானத்தை விற்பதாகத்தான் பொருள். அந்த நிலையில் சமூகக் கண்ணோட்டம் கொண்டு இந்தப் பெண் சமூகத்துக்கு பக்குவமான வழிகாட்டலைத் தந்து கொண்டு செயல்படும் இந்தப் பெண் அமைப்பு பாராட்டத்தக்கது. இன்றைய அரசியல் சூழலில் யார் தலைவர் என்றால் மேய்ப்பவர், தலைவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

சமூகத்துக்குப் பக்குவமான வழிகாட்டுதலைத் தருபவர், சமூக மாற்றத்துக்கான வழிமுறை கண்டு தன்னை இழந்து பக்குவமான வழிகாட்டுத் தலைமையை தற்போது தலைமையாக யாரும் பார்ப்பதில்லை. இது இந்த சமூகத்தின் பெருங்கேடு. இந்த நிலையில் இந்த பெண் அமைப்பில் ஒரு வழிகாட்டும் தலைமையில் இந்த அமைப்பு வளர்வது, அவர்களுக்கான அரசியலை கற்றுக் கொடுப்பது அனைத்தும் புதுமை.

இந்த அமைப்பு மாற்றுப் பாதை தேடுவதும், மாற்றுத் தலைமை தேடுவதும் ஒரு வித்தியாசம்தான். தங்களின் செயல்களாலே இவர்கள் அறியப்படுவது, இவர்கள் பாராட்டப்படுவது, புது நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் புதுமைகள் வளர வேண்டும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.