FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது

பொருளாதார, அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் நடந்தேறும் சமூக தளத்தைப் பற்றி யாராவது, ஏதாவது பேசுகிறோமா?

16 மே 2026, 6:47 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.

ஆனால் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் நடந்தேறும் சமூக தளத்தைப் பற்றி யாராவது, ஏதாவது பேசுகிறோமா என்று பாருங்கள். எடுத்துக்காட்டாக, தமிழ்ச் சமூகம் குடிநோயால், போதைப் பொருள்களால் எப்படி பாதிக்கப்படுகிறது என்று அண்மைக்காலத்தில் யாராவது ஓர் அரசியல் தலைவரோ, மதகுருவோ, கலாசார பண்பாட்டு ஆளுமையோ பேசிக் கேட்டிருக்கிறீர்களா?

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாக இருக்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுமாம். அதேபோல, நாமும் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நடித்துக் கொண்டிருக்கிறோம்.

Advertisement

Advertisement

குடிநோயைவிட, போதைக் கலாசாரத்தைவிட இன்னும் அடிப்படையான ஒரு பிரச்னை நமது சமூகத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. அது சமூக-பொருளாதார-அரசியல் கட்டுமானத்தின் அடிப்படையான குடும்பம் என்கிற நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக, அன்றாடம் தினசரி பத்திரிகைகளில் செய்திகளை வாசிக்கும்போது, கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள். பெரும்பாலான குற்றச் செய்திகளில் கணவனும், மனைவியும் கருத்து வேறுபாடுகளால் கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்திருக்கிறார்கள் என்கிற அம்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக, பெண்களே திருமணப் பந்தத்தை விட்டு விலகிச் சென்றிருப்பதாகத்தான் அறிய முடிகிறது.

பொதுவாக, தம்பதியிடையே பிளவும்-பிரிவும் ஏற்பட மூன்றாவது நபர் ஒருவரின் தலையீடுதான் முக்கியக் காரணமாக இருக்கும். கணவன் அல்லது மனைவியின் திருமணம் கடந்த உறவும், அதனால் எழும் நம்பிக்கைத் துரோக உணர்வும் தம்பதியர் உறவைத் தகர்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல, போதைக் கலாசாரம் இன்னொரு முக்கியமான காரணமாக அமைகிறது. பெரும்பான்மையான ஆண்கள் குடிகாரர்களாக மாறி, குடும்பப் பொறுப்புகளை முற்றிலும் துறந்து, தானுண்டு, தன் குடிப்பழக்கம் உண்டு என்று வாழ்கிறார்கள். சொற்ப குடும்ப வருமானத்தையும் நாசம் செய்யும் கணவர் தன்னுடைய அதிகாரத்தை, மரியாதையை இழந்து விடுகிறார். சமூக அந்தஸ்தையும் இழந்து விடும் கணவர் ஒரு பெருமைமிக்க குடும்பத் தலைவராக இல்லாமல், குடும்பத்தினருக்கு ஓர் இழிபிறவியாக, சுமையாகவே தோற்றமளிக்கிறார்.

பொருளாதாரப் பங்களிப்பு எதுவும் செய்யாமல், குடும்பத்துக்கான கடமையில் தவறுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட ஈர்ப்பையும் மதுப்பழக்கம் கொண்ட ஆண்கள் இழந்து விடுகிறார்கள். ஆண்களின் போதைப் பழக்கமும், கண்ணியமின்மையும், பொறுப்பற்ற தன்மையும் பெண்களை வெறுக்கச் செய்கின்றன.

குடும்பங்கள் சிதைவதில் ஆண்களின் பங்கே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பவன் தன்னிலையிலிருந்து தாழும்போது, இல்லாள் "இவன் வேண்டாம்' என்று முடிவெடுக்கிறார்.

ஆண்களிடையே நிலவும் எதிர்மறை விஷயங்கள் குடும்பத் தகர்வுக்குக் காரணங்களாக அமைந்தாலும், பெண்களிடையே உருவாகியிருக்கும் நேர்மறை விஷயங்களும் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன.

பெரும்பாலான பெண்கள் படித்தவர்களாக, பட்டதாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவதொரு திறமை பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தக் கல்வியின் மற்றும் பயிற்சியின் மூலம் தங்களுக்கென ஒரு நீடித்த நிலைத்த வருமானத்தை உருவாக்கிக் கொள்ளும் தகுதி உடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

ஒற்றைக் குடும்பம் தனிலே- பொருள்

ஓங்க வளர்ப்பவன் தந்தை

மற்றைக் கருமங்கள் செய்தே- மனை

வாழ்ந்திடச் செய்பவள் அன்னை

என்கிற பாரம்பரிய ஆண்-பெண் கடமைகள் இன்று பெருமளவு மாறிவிட்டிருக்கின்றன. கணவர் மட்டுமே பொருள் ஈட்டுபவராக இருந்தபோது, மனைவி அவரை அனுசரித்துப் போக வேண்டிய தேவை இருந்தது. வீட்டை விட்டு வெளியேறினால் வாழ்வாதாரம் பாதிக்கும். சமூகப் பாதுகாப்பு பெரும் பிரச்னையாக உருவெடுத்துவிடும். அந்தப் பெண்ணின் ஒழுக்கம் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, அந்தப் பெண் சமூக மரியாதையை இழக்கும் அபாயம் இருந்தது. அனைத்து விஷயங்களும் ஆணாதிக்கத்துக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதகமாகவே அமைந்திருந்தன.

கணவன்-மனைவி உறவு குறித்து

திருக்குறள் கூறுவதாவது:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை.

ஒரு மனைவி தெய்வத்தைவிட உயர்ந்த இடத்தில் தன் கணவரை வைத்து தொழுதாள் என்றால், அந்தக் கணவர் எவ்வளவு உயர்ந்தவனாக, அசாத்தியமானவனாக இருந்திருக்க வேண்டும்?

ஆனால், இன்றைய நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. கணவர் இல்லாமலே மனைவி பொருளீட்ட முடியும். அவர்கள் வேலையின்றி, ஊதியமின்றிப் பட்டினி கிடக்க வேண்டிய நிலை எழுவதில்லை. பெண்களுக்கு ஓரளவு சமூகப் பாதுகாப்பும் இருக்கிறது; அதற்கான பல சட்டங்களும், திட்டங்களும் இன்று அமலில் இருக்கின்றன.

பிரச்னை என்னவென்றால், அடிமைத்தனம் என்கிற வலது துருவத்திலிருந்து, தகர்ப்பு என்ற இடது துருவத்துக்கு வந்துவிடுவோமோ என்பதுதான். பிளவுபட்டு நிற்கும் ஆண்-பெண் உறவு, பிரிந்துபோன குடும்பங்கள், குடும்ப நீதிமன்றங்களில் குவியும் விவாகரத்து வழக்குகள் போன்ற விஷயங்களைக் கண்ணுறும்போது, நாம் ஒரு மோசமான காலகட்டத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அனைத்துக்கும் மேலாக, கணவன்-மனைவி பிரிவு என்பது இயல்பானதுதான்; குடும்பங்கள் சிதைவது என்பது ஒரு பெரும் பிரச்னையே அல்ல என ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வந்துவிட்டோம்.

இந்த ஆபத்தான போக்குக்கு எதிராக யாரும் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. இதற்குத் தீர்வு தேடும் பொறுப்பும், கடமையும் கொண்ட அரசியல்வாதிகள், மதகுருமார்கள் பெரும்பாலும் பாராமுகமாகவே இருக்கிறார்கள். காரணம், அவர்களில் பெரும்பாலானோர் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்; ஆண்-பெண் உறவு குறித்துப் பேசும் அல்லது அறிவுரைக்கும் தகுதியை இழந்துவிட்டவர்கள் அவர்கள்.

இவ்விரு துருவ நிலைகளுக்கும் இடையேயான ஒரு மையப்புள்ளியைத் தேர்ந்து சமூகத்தின் அடிப்படையான குடும்பம் என்ற நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்று நாம் அனைவரும் உடனடியாகச் சிந்தித்தாக வேண்டும். ஒருபக்கச் சார்பேதுமின்றி ஆண்-பெண் இரு பாலரையும் பொறுப்பானவர்களாக மாற்றுவது எங்ஙனம்?

கற்பு, ஒழுக்கம் போன்றவற்றிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும். "கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்' என்றார் மகாகவி பாரதியார். புதுமைப் பெண் குறித்துப் பாடிய அந்த பெருங்

கவிஞன் கணவன்-மனைவி உறவு குறித்து சொல்வதைக் கேளுங்கள்:

காதலொருவனைக் கைப்பிடித்தே அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

காதலொருத்தியைக் கைப்பிடித்தே அவள் காரியம் யாவினும் கணவரும் கைகொடுக்க வேண்டும் என்பதுவும்தான் மகாகவி பாரதியாரின் வேண்டுகோளின் உள்கிடக்கை.

ஆணாதிக்கமோ, பெண்ணாதிக்கமோ இல்லாத, இருபாலருக்கும் சமத்துவமும், முக்கியத்துவமும், தனிப்பட்ட வெளியும், தகைமையும் உருவாக்கித் தரும் ஒரு நவீன குடும்பத்தைக் கட்டமைப்பது எப்படி? என்று நாம் அனைவரும் சிந்தித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். ஆண்களின் உடல்நலன் மற்றும் மனநலன் குறித்த பிரச்னைகள் பற்றிய பரந்துபட்ட விவாதம் நடந்தாக வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆதரவு அமைப்புகள், திட்டங்கள், நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டாக வேண்டும். ஆண்-பெண் உறவு மற்றும் கணவன்-மனைவி உறவு பற்றிய பொது விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குடும்பங்களில் கணவன்-மனைவிக்கும், பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களை அவதானித்து, செம்மைப்படுத்துவது அடுத்த முக்கியமான நடவடிக்கை. இன்றைய நிலையில் குடும்பத்தார் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் அவரவர் கைப்பேசிகளுடன் முடங்கிக் கிடப்பதைத்தான் பார்க்கிறோம். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து பேசிச் சிரித்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து ஒருவேளை உணவைக்கூட உண்பதில்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம். உணவு உண்ணும் வேளை ஆயாசமான வேளை என்பதால், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் நல்லவற்றை, அல்லவற்றைப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

ஒன்றாய் உண்பதும், உரையாடுவதும், உறங்குவதும் குடும்பத்தில் உண்மையும், நேர்மையுமான ஒரு கருத்துப் பரிமாற்ற ஈடுபடல் நடக்கிறது என்பதை உறுதி செய்வதற்குத்தான். அதற்குத் தேவையான திறந்தவெளித்தன்மை, செவிமடுக்கும் திறன், பொறுமை, ஜனநாயக கலாசாரம் போன்றவை குடும்பங்களில் ஊன்றி, உரமிட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பணியிடங்கள், பொதுவெளிகள் எங்கும் இதற்கான முயற்சிகளும், பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்:

தலைமைப் பணியாளர்,

பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments