ஜென்-ஸீக்கு வலை!
ஜென்-ஸீ இளைஞர்கள் பற்றிய தலையங்கம்....
முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சிகளின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் சூழல் மாறி வருவதை உணர்த்துகின்றன. மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவையும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸையும் 2029-இல் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் முடுக்கிவிட்டுள்ளதற்கு ஜென்-ஸீ இளைஞர்களின் (14 முதல் 29 வயது) அண்மைக்கால போராட்டமும், அவர்களிடையே அதிகரித்துவரும் அரசியல் விழிப்புணர்வுமே காரணம்.
நாட்டில் தற்போதைய மக்கள்தொகையான சுமார் 147 கோடியில் 25 முதல் 28 சதவீதம் பேர் ஜென்-ஸீ இளைஞர்கள். அவர்களில் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எனக் கணக்கிட்டால் மொத்தம் உள்ள சுமார் 96.88 கோடி வாக்காளர்களில் ஜென்-ஸீக்களின் பங்கு சுமார் 30 சதவீதம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அவர்களை நோக்கி வலை வீசக் காரணம். தேர்தல் வெற்றிக்கு இது ஒரு கணிசமான வாக்கு சதவீதம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டாத நிலையே இருந்து வந்தது. உள்ளூர் மற்றும் தேசிய பிரச்னைகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
Advertisement
Advertisement
எப்போதாவது நாட்டின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் தேசிய அல்லது மாநில தலைநகரங்களில் நடைபெறும். அதுவும் அத்துடன் அடங்கிவிடும். இந்த நிலை கடந்த ஜூன் மாதம் முதல் மாறிவிட்டது.
கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி புதுதில்லியில் நடத்திய போராட்டம் மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகச் செய்தது. நாட்டின் கவனத்தை ஈர்த்த அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி இளைஞர்களை அரசியல் பேச வைத்ததுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமும், அதில் பங்கேற்ற ஜென்-ஸீக்களின் பங்கேற்பும் இளைஞர்கள் நாட்டு நடப்பை உற்றுநோக்குவதும், அதன் பின்னணியில் உள்ள அரசியலை அலசுவதும், தாக்கத்தை ஏற்படுத்த முனைந்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அந்த உறுதிப்பாடு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இதுவரையிலான தங்களது வழக்கமான மற்றும் பாரம்பரியமான அரசியல் செயல்பாடுகளைத் தவிர்த்து புதியபாதையில் நடைபோடத் தூண்டியுள்ளது.
தில்லி ஜென்-ஸீக்களின் போராட்டத்தில், சமூக ஊடகம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு இளைஞர்கள் அரசு இயந்திரத்தை திக்குமுக்காடச் செய்தனர். கோபம் கொப்பளிக்க முழக்கங்கள் எதிரொலிக்க, தீவிரமான போராட்டம் என்ற செயல்பாடு மாறி, ஆட்டம்-பாட்டம், கேலி, கொண்டாட்டம் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் ரசனையாக நடைபெற்றதை நாடும் ரசித்தது என்றே சொல்லலாம்.
ஜென்-ஸீக்கள் ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கம், 2029 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அவர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, தான் மட்டுமல்லாது தனது அமைச்சரவை மற்றும் கட்சி சகாக்களை சமூக ஊடகங்களில் அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தீவிரமாக களம் இறங்க பணித்துள்ளதுடன் தானும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கட்சியின் சமூக ஊடக அணியானது, இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளைக் குறிவைத்து களம் இறங்கியுள்ளது.
அண்மையில் ஆசிரியர்கள் தினத்தையொட்டி (செப்.5) தில்லி கல்லூரி ஒன்றில் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். மெட்ரோ ரயிலில் பயணித்து அதில் வந்த இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின், 45 பேர் கொண்ட குழுவை அமைத்து ஜென்-ஸீக்களை கவருவதற்கான செயல்திட்டங்களை வகுக்க அறிவுறுத்தியுள்ளார். இப்படி பல திட்டங்கள் செயல்வடிவம் பெற்று வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கோட்டா, டேராடூன், புணே உள்ளிட்ட நகரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி கட்சிக்கும், ஜென்-ஸீக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தி வருகிறார். எதிர்வரும் நாள்களில் மேலும் 28 நகரங்களில் அத்தகைய கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அவர்களது சகாக்களும் சமூக ஊடகங்களில் தீவிரமாகக் களமாடி வருகின்றனர்.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த ஊதியம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள் புழக்கம், விவசாயிகள் தற்கொலை, காலநிலை மாற்ற பாதிப்புகள் எனத் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம். ஜென்-ஸீக்களின் கோபத்துக்கு இவையெல்லாம்தான் காரணங்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான செயல்திட்டங்கள் இல்லாமல் தேர்தல் வெற்றிக்கான பகட்டு செயல்களால் மட்டும் ஜென்-ஸீக்களை கவர்ந்துவிடலாம் என நினைத்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் தொடர்ந்து நல்லாட்சியை வழங்கிவிட முடியாது என்பதை உணர வேண்டும். அவலை நினைத்து உரலை இடிக்கக் கூடாது!
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த
போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
திருக்குறள் (எண் 637) அதிகாரம்: அமைச்சு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.