பரந்தூரையும் இழந்தால் நம் தொழில் வளர்ச்சி எங்கே போகும்..? - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
அரசியல் காரணங்களுக்காக பரந்தூரையும் இழந்தால் நம் தொழில் வளர்ச்சி எங்கே போகும்? என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...
அரசியல் காரணங்களுக்காக பரந்தூரைக் கைவிட்டுள்ளனர். ஓசூருமில்லை, பரந்தூரையும் இழந்தால் நம் தொழில் வளர்ச்சி எங்கே போகும்? என திமுக முன்னாள் அமைச்சரும் பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக அரசு பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிட்டது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, திமுக சார்பில் விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை ஏற்கனவே பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தோம். பல நாள்களாக திமுக கொறடா வேலு, எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் வலியுறுத்தியதற்குப் பிறகும், "இன்று எடுத்துக்கொள்கிறோம், நாளை எடுத்துக்கொள்கிறோம்" என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போய், இறுதியாக எங்களிடம் திங்கள்கிழமை உங்களுடைய கவன ஈர்ப்பை சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார்கள்.
Advertisement
Advertisement
எங்களுடைய சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக, திமுக மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுமே இந்தப் பரந்தூர் விமான நிலையத்தைப் பற்றியும், அதன் அவசியத் தேவைகளைப் பற்றியும், தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும், விமானப் போக்குவரத்தில் நாம் எப்படி மற்ற மாநிலங்களோடு, குறிப்பாக அண்டை மாநிலங்களோடு போட்டியிட முடியாமல் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு இந்த வாய்ப்பு தேவை என்பதை வலியுறுத்தி, இந்தக் கவன ஈர்ப்பில் உரையாற்றுவதற்காக இருந்தோம்.
ஆனால், அவை கூடியவுடன் முதல்வர், விதி எண் 110-ன் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதற்கு மேலே, விதியின்படி அதில் பேசுவதற்கு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளுடைய குரலைக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக இந்த மிக முக்கியமான பிரச்னையில் இருக்கக்கூடிய நியாயங்களை, நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை, நாம் எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரத் தேக்க நிலையை, இந்த விமான நிலையம் வரவில்லை என்றால் எத்தகைய சூழ்நிலை உருவாகும் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்வதற்கான வாய்ப்பினை முற்றிலுமாக மறுத்து, நிராகரித்து, அந்த வாய்ப்பைக் கொடுக்க முடியாத அளவில் அவர்கள் திட்டமிட்டே விதி எண் 110-ல் ஓர் அறிக்கையைப் படித்து, அதற்கு மேலே விவாதம் இல்லை என்று பேரவைத் தலைவர் இன்றைக்கு தெரிவித்து, ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சியினுடைய குரல்வளையை நெரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறார்.
மீண்டும் எழுந்து, நாங்கள் 110-ல் அந்த விதியின் கீழ் இந்த விவாதத்தை வைக்க விரும்பவில்லை. ஆனால், ஏற்கனவே நாங்கள் விதி எண் 55-ன் கீழ் இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கிறோம். சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பலமுறை நீங்கள் உறுதியளித்த பிறகும், இன்றைக்கு இப்படி 110-ன் கீழ் படித்து, இதன் மீது விவாதத்தை நீங்கள் திட்டமிட்டு தவிர்த்திருக்கிறீர்கள்.
எனவே, எங்களுக்கு விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்பில் இதை வழங்க வேண்டும் என்று நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக கொறடாவும் அதை வலியுறுத்தினார்கள். அதை வலியுறுத்தித் தொடர்ந்து கேட்டும் இந்த அரசு செவி சாய்க்காத காரணத்தால், எதிர்க்கட்சிகளுடைய அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து, அவர்கள் குரல்வளையை நெறித்து, கருத்துகளைப் பேசுவதற்கு இடம் தராத இந்தப் பேரவைத் தலைவரின் நடவடிக்கையைக் கண்டித்து, நாங்கள் இன்றைக்கு முழுமையாக வெளிநடப்பு செய்து வந்திருக்கிறோம்.
வெளிநடப்பு செய்தாலும் கூட, இதில் இருக்கக்கூடிய உண்மை நிலைமைகளை உங்களிடத்தில் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்று கருதுகிறோம்.
நம் எல்லோருக்கும் தெரியும். விமான நிலையம் என்பது எவ்வளவு பெரிய முக்கியமான ஒன்று. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு சென்னையில் அமையக்கூடிய இந்த விமான நிலையம் என்பது தமிழ்நாட்டினுடைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு எவ்வளவு அத்தியாவசியமான ஒன்று, இன்றியமையாத ஒன்று என்பது நமக்குத் தெரியும். பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவையாக விமான நிலையம் அமைந்திருக்கிறது என்பதை நாம் நன்றாக அறிவோம்.
அந்த அடிப்படையில்தான், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு சென்னையில் அமைந்திருக்கக்கூடிய இந்த விமான நிலையம் ஒரு காலத்தில் சிறப்பான ஒரு விமான நிலையமாக இருந்தது. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால், ஒரு காலத்தில், 2008-ல் நம்முடைய சென்னை விமான நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்தது.
அன்றைக்கு பெங்களூரு விமான நிலையம் பயணிகளுடைய போக்குவரத்தின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. ஏறத்தாழ நாலரை கோடி பயணிகளுடைய எண்ணிக்கையின் அடிப்படையில் பெங்களூரு இன்றைக்கு மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. வெறும் 2.3 கோடி, அதாவது 2 கோடியே 30 லட்சம் பயணிகளை கொண்டு, நம்முடைய சென்னை விமான நிலையம் இன்றைக்கு ஐந்தாவது இடத்திற்குப் பின்தங்கியிருக்கிறது.
அதுபோல, சரக்குகளைக் கையாளக்கூடிய திறனும் மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியில் சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் மிக முக்கியமானது. அதில் பார்த்தீர்கள் என்றால், பெங்களூரு விமான நிலையம் இன்றைக்கு ஏறத்தாழ 5.5 லட்சம் டன் சரக்குகளைக் கையாளக்கூடிய வகையில் மிக முன்னேறி, ஐரோப்பிய நாடுகளோடு வர்த்தக ரீதியில் மிகப் பலமான ஒரு இணைப்பைப் பெற்றிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில், சென்னையில் நமக்கு ஒரு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் வரவேண்டும். இந்த கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் வந்தால்தான் சென்னையினுடைய தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
சென்னையைச் சுற்றி இன்றைக்கு ஏராளமான தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய தொழிற்சாலைகள் காரணமாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற்று, முதலிடத்தில் இருக்கிறது என்று சொன்னால், அங்கே அமைந்திருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பட்டிருக்கக்கூடிய தொழில் வளர்ச்சிக்கு, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் ஒரு பெரிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணமாக இருந்தது.
இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், முதல்வராக வருகிறபோது, தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவோம் என்று ஒரு இலக்கை நிர்ணயித்தார்கள்.
அந்த இலக்கினுடைய அடிப்படையில்தான், அதற்கு மிக முக்கியமான ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த விமான நிலையத் திட்டத்தை நாம் அன்றைக்கு ஆரம்பித்தோம்.
ஒரு விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்கிறபோது, பல முக்கியமான காரணிகளை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒன்று, அதற்கான நிலம் போதுமான அளவில் இருக்க வேண்டும். இன்னொன்று, குறைந்த அளவிலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில், குடியிருப்புகள் குறைவாக இருக்க வேண்டும். மற்றொன்று, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியக்கூறு இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய இடங்களில் விமான நிலையம் அமைக்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பப் பிரச்னைகள் எதுவும் இருக்கக்கூடாது.
எனவே, எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, சென்னையினுடைய புவியியல் அமைப்பு நமக்கு நன்றாகத் தெரியும்.
சென்னையினுடைய கிழக்குப் பகுதி முழுக்க வங்கக்கடல். கிழக்குப் பகுதியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ள முடியாது.
வடபகுதியில் என்ன இருக்கிறது என்று கேட்டால், வடசென்னையிலிருந்து தொடங்கி எண்ணூர் வரை தொடர்ச்சியாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்தத் தொழிற்சாலைகளையும் தாண்டிப் பார்த்தீர்கள் என்றால், பழவேற்காடு, புலிக்காட் ஏரி போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. அதற்கடுத்து உடனடியாக ஆந்திர எல்லை வந்துவிடுகிறது. எனவே, இந்தப் பகுதியிலும் வடபகுதியிலும் நாம் செல்ல முடியாது.
தென்பகுதியில் இடங்களைப் பார்த்தோம். அப்போதைய முதல்வர் ஸ்டாலின் பரந்தூர் விமான நிலையத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக, பல இடங்களில் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டோம்.
ஏனென்றால், விமான நிலையத்தைத் தேர்வு செய்கிறபோது நம்முடைய தேர்வு மட்டுமல்ல; ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மற்றும் மத்திய அரசின் பல்வேறு அனுமதிகளும் தேவைப்படுகின்றன.
சென்னையினுடைய தென்பகுதிக்குச் சென்றால் என்ன இருக்கிறது? நம்முடைய தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் இருக்கிறது. அதனுடைய ஏர் ஸ்பேஸ் அங்கு இருக்கிறது. அதைத் தாண்டி தெற்கே சென்றால், திருப்போரூர் பகுதி வருகிறது. அங்கும் தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனுடைய வான்வெளி தொடர்பான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே சென்று பார்த்தால், படாளம் பகுதியில் கல்பாக்கம் அணுமின் நிலையம் வருகிறது. இன்னொரு பக்கத்தில் நம்முடைய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இருக்கிறது.
எனவே, தென்பகுதியிலும் நாம் செல்ல முடியாது. ஆக, விமான நிலையம் அமையக்கூடிய இடம் என்பது நமக்கு மேற்கு பகுதியில்தான் வருகிறது.
மேற்கு பகுதியிலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, எந்த இடத்தில் நிலம் கிடைக்கிறது, நிலத்தின் விலை என்ன, எத்தனை பேரை வெளியேற்றக்கூடிய நிலைமை உருவாகும், அங்கு உயர் மின்னழுத்த மின் கம்பிகள் போன்ற தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருக்கிறதா, ஒரு ஓடுபாதை அல்லது இரண்டு ஓடுபாதைகள் அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதையெல்லாம் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பிறகுதான் பரந்தூரைத் தேர்ந்தெடுத்தோம்.
இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? பரந்தூர் திட்டம் கைவிடப்படும் என்று இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதுவரை அவர்கள் ஏற்கனவே அறிவித்த முதல்வர் அறிவிப்பைப் பற்றி, மத்திய அரசின் அமைச்சர் கூட, நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் கேட்கிறபோது, “இதுவரை எங்களுக்கு எந்தவிதமான கோரிக்கையும் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை” என்று தெரிவித்தார்.
அது ஒருபுறம் இருக்க, இன்றைக்கு முதல்வர் அந்தத் திட்டத்தை கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் வாயிலாக வரவேண்டிய மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் இன்றைக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன.
காரணம், நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அந்தப் பகுதியில் வரக்கூடிய இந்த வாய்ப்பினால்தான் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளும், சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளும் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
இப்போது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நிலம் கையகப்படுத்துவதற்குச் சென்றிருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நீங்கள் நிலத்தைக் கையகப்படுத்துகிறீர்கள். இந்தப் பரந்தூர் பகுதியில் கூட பார்த்தீர்கள் என்றால், ஏறத்தாழ 5,746 ஏக்கர் நிலத்தை நாம் கையகப்படுத்துகிறோம். இதில் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கும் மேலான நிலத்தை நாம் ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறோம்.
இந்த இடத்தைத் தேர்வு செய்து, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறபோது, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக ஏ.வேலு தலைமையில் அவரும், நானும், முன்னாள் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஒரு குழுவாக அமைக்கப்பட்டு, வேலு பலமுறை அங்கிருக்கக்கூடிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு பலரும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள்.
இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, எந்த நோக்கத்திற்காக நீங்கள் இதை எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த நோக்கத்திற்குத்தான் அதை பயன்படுத்த முடியும்.
அந்த நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது அங்கே விமான நிலையம் வேண்டாம் என்று கைவிட்டுவிட்டீர்கள் என்று சொன்னால், அந்த நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? அங்கே இருக்கக்கூடியவர்கள் ஏற்கனவே இழப்பீடு வாங்கிவிட்டார்கள் என்று சொன்னால், அவர்களுக்கான பதில் என்ன?
வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? சரி, இங்கே விமான நிலையம் வரவில்லை; வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அந்தத் திட்டம் வருகிறபோது அங்கே இருக்கக்கூடிய நீரியல் சூழ்நிலைகள், சூழலியல் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? அங்கே இருக்கக்கூடிய விவசாயிகளுடைய பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?
அது எப்போது வரும்? இன்றைக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த இடத்திலிருந்து வேறு ஒரு இடத்தைப் பார்ப்போம்; அது குறித்து ஆய்வு எடுத்துக்கொள்வோம் என்று சொல்கிறீர்கள்.
அது எப்போது வரும்? அங்கே இருக்கக்கூடியவர்களில் எத்தனை பேரை நீங்கள் வெளியேற்றக்கூடிய சூழ்நிலை வரும்? அங்கு என்ன உள்கட்டமைப்பு இருக்கிறது?
எதிர்காலத்தில் இந்த மெட்ரோ திட்டத்தின் நிலைமை என்ன?சரி, பரந்தூரில்தான் இந்த விமான நிலையம் வரும் என்ற வகையில், அங்கு ஒரு மெட்ரோ திட்டத்தை இப்போது கிளாம்பாக்கம் வரை கொண்டு சென்று, அங்கிருந்து நீட்டிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இந்த மெட்ரோ திட்டத்தின் நிலைமை என்ன?
அந்த உள்கட்டமைப்பு எப்படி இருக்கும்? இங்கே நீங்கள் கொண்டு போகும் இடத்தில், இப்போது பெங்களூரு-சென்னை புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தச் சாலையின் வழித்தடத்தில் பரந்தூர் இருந்தது. இனி வரக்கூடிய இடங்களில் அந்த உள்கட்டமைப்பு எப்படி இருக்கும்? அந்த இடத்தில் எந்த வகையில் நீங்கள் செய்யப் போகிறீர்கள்?
நான் ஏற்கனவே சொன்னதைப் போல, சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய பல்வேறு இடங்களிலும் மிகப்பெரிய அளவில் இந்தப் பிரச்னைகள் உங்களுக்கு இருக்கும்.
அரசியல் காரணங்களுக்காக மாற்றுகிறீர்கள்
நான் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பரந்தூரிலே நீங்கள் இந்த விமான நிலையத்தை அமைப்பதுதான் மிகச் சரியானதாக அமைந்திருக்கும். ஆனால், இதை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றுகிறீர்கள்.
நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும்
ஒரு திட்டம் மாநிலத்திற்கு வருகிறபோது அதில் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று சொன்னால், அது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான திட்டம் இதற்காக நிறுத்தப்பட்டு, மீண்டும் திமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டது.
இப்படி பல்வேறு சூழ்நிலைகளில் அரசியல் காரணங்களுக்காக திட்டங்களை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று சொன்னால், அது ஒட்டுமொத்த நாட்டினுடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
எனவேதான் நான் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், அரசு அரசியல் நோக்கங்களைத் தாண்டி, திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் எல்லாம் கூட 90 சதவீதத்திற்கும் மேலாக முடிந்துவிட்ட நிலையில், இதை வேண்டுமென்றே நாம் வேண்டாம் என சொல்லிவிட்டோம்; நாம் தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டோம்; நாம் விக்கிரவாண்டியில் சொல்லிவிட்டோம் என்ற காரணங்களைக் காட்டி இந்தத் திட்டத்தை நிராகரிப்பது என்பது உள்ளபடியே அங்கு இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
ஸ்ரீபெரும்புதூர் மட்டுமல்ல, நம்முடைய பகுதியில் பார்த்தீர்கள் என்றால், பல தொழில்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் இன்று ஆந்திராவை நோக்கிப் போகக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் உருவாகியிருக்கின்றன.
ஓசூர் விமான நிலையத்தை நாம் இழந்திருக்கிறோம்
ஆந்திர அரசு ஏற்கனவே அங்கே ஒரு விமான நிலையம் அமைக்கக்கூடிய கருத்தைக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஓசூர் விமான நிலையத்தை நாம் இழந்திருக்கிறோம். பெங்களூரில் இப்போது இரண்டாவது விமான நிலையத்திற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. குப்பத்தில் ஆந்திராவில் ஒரு விமான நிலையம் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுற்றியிருக்கக்கூடிய பகுதிகள் எல்லாம் இன்றைக்கு விமான நிலையங்கள் வருகிறபோது, ஓசூரில் நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு அந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம்.
நாட்டினுடைய தொழில் வளர்ச்சி எங்கே போகும்? இப்போது மீண்டும் பரந்தூரையும் இழந்தால், இந்த நாட்டினுடைய தொழில் வளர்ச்சி எங்கே போகும்? பொருளாதார இலக்கு எங்கே போகும்? தி.மு.க. அரசு சொல்லியிருக்கக்கூடிய 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை இந்த அரசு எப்படி நிறைவேற்றப் போகிறது? இதற்கான ரோட்மேப் என்ன?
ஆக, இந்தத் திட்டங்களை எல்லாம் அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்தக்கூடிய போக்கே ஒழிய, உள்ளபடியே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கும், அதன் முன்னேற்றத்திற்கும் இந்த அரசு துணை இல்லை என்று தங்கம் தென்னரசு கூறினார்.
If we lose Parandur as well, where will our industrial growth go?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.