FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் விஜய் அறிவித்த 3 முக்கிய அறிவிப்புகளின் முழு விவரம்!

சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 3 முக்கிய அறிவிப்புகளின் முழு விவரம் குறித்து...

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசும் முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் திட்டத்தை கைவிடுதல், மகளிருக்கான கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டம் என மூன்று திட்டங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

1. மகளிருக்கான கட்டணமில்லா வெற்றி பயணம்

ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது.

Advertisement

Advertisement

மகளிரின் பயணச் சுதந்திரம், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள்

மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இந்த அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

2. ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்

நமது அரசால், பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, இதுவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாகக் கொண்டு வெற்றித் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது.

அந்தத் திட்ட ஆவணத்தின் அடிப்படையில், இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பினமாக, பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து இந்த அரசு நிறைவேற்றும்.

கடந்த நான்கு மாதங்களாக வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொதுமக்கள் தங்களது வருவாயிலிருந்து கூடுதலான தொகையினைச் செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு நிதிநெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையினைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்காகச் செலவழிக்கப்பட்டுவரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், முதற்கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த திட்டப் பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, சிலிண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பட்டியல் பெற்று, சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம்

ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள். இந்த திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படும்

சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் (ஏஏஐ) இயக்கப்படுகிறது. தற்போது, இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பயணிகளின் வசதிகளைக் கருத்திற் கொண்டும், தொழில் வளர்ச்சியினைக் கருத்திற் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசு விவசாயிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நான் 20.1.2025 அன்று அந்த பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.

சென்னை பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கும் மேலாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களைப் பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர், 2024-ல் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது, இந்தத் திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தேன்.

மக்கள் மத்தியிலே, நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.

ஏற்கனவே, நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும்.

துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.

இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய முனையம்-5 என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து, அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் முனையம்-3 பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிவுற்றபின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும். மேலும், புதிய முனையம்-5 பயணிகள் முனையம் செயலாக்கத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இந்த விமானநிலையம் இருக்கும். இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

summary

CM Assembly 110 Statements-3 LPG Cylinders,Parandur Airport and Vetri Payanam Scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments