முதல்வர் விஜய், விதி எண் 110-ன் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!
முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஆக 19) சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஆக 19) சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்வு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் புதன்கிழமை பேசியதாவது:
உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலைத் தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவைத் தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில், ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்கத் தோன்றுகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து, 800 பால் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 3 லட்சத்து, 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள்தோறும் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதரச்சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும், ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து, பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை.
உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள்
"ஒரு உயிரின் மதிப்பை, அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது".வசதிப்படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது, அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை, எளிதாக கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.
"மருத்துவம் என்பது சலுகை அல்ல; ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை". ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிக கொடியது, மருத்துவத்தைத் தேடிவரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை–பணக்காரர், கிராமம்–நகரம் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்கச் செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.
பெரம்பூரில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.
வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான "பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை" அமைக்கப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பி.எஸ்சி செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், "முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்"
(Chief Minister’s Cancer Care Mission) 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதற்கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூபாய் 84 கோடியில் ஜி+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை, Linear Accelerator (LINAC)கதிர்வீச்சு, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும்.
மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் ரூ. 2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும். மேலும், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ. 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எச்பிவி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மொத்தம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில், புற்றுநோய் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கம் வாகன உதவி
கடந்த 12.8.2026 ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, பல எம்.எல்.ஏ.-க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக் கொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கோரிக்கைகளும் வரப்பெற்றது.
மக்களாட்சியின் மிக முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்குபவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பண பலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
29.3.2026 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மக்கள் பணி செய்து, ஊழலற்ற, லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை மேற்கொள்வது என அனைத்து வேட்பாளர்களும் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப, அதே பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
"மக்களுக்கான நிர்வாகம் – நேர்மையின் பாதையில்!" என்ற அடிப்படையில் லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதைக் கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பொருளாதார பலமில்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களின் பயணத் தேவைகளுக்காக பிறரைச் சார்ந்து இருப்பதைத் தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும். அதோடு மட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.
எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என கூறினார்.
CM Assembly 110 Statement Increase in milk procurement price, Vehicle and Assistant facilities to MLAs Health Dept Announcements
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.