FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

4 ஆண்டுகளுக்குப் பின் பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆவின் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ. 38 லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்ததைப் பற்றி...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 10:51 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய்
பகிர்:

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் இன்று (ஆக. 19) அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், 110-வது விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

முதல்வர் விஜய் பேசுகையில், “உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவை தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு.

Advertisement

Advertisement

இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய், 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாள்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை.

உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் இருந்துள்ளது. கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ரூ. 1 உயர்த்தவும், மேலும் அரசு ஊக்க தொகை ரூ. 3-லிருந்து ரூ. 5 ஆக உயர்த்தவும் ஆக, மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ. 38-லிருந்து ரூ. 41 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூ. 30 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூ. 360 கோடியும் செலவாகும்” என்றார் முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments