முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 07-06-2026

இரவு 10 மணிக்கு மேல் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எங்களது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, அடையாற்றில் உள்ள ஒரு முக்கியமான அரசியல் தலைவரை சந்திக்கச் சென்றிருந்தேன்.

Updated On : 7 ஜூன் 2026, 5:06 pm IST
பகிர்:

இரவு 10 மணிக்கு மேல் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எங்களது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, அடையாற்றில் உள்ள ஒரு முக்கியமான அரசியல் தலைவரை சந்திக்கச் சென்றிருந்தேன். திரும்பும்போது நள்ளிரவு கடந்து விட்டிருந்தது. ராதாகிருஷ்ணன் சாலை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பழ. கருப்பையா இருக்கிறாரா என்று பார்ப்போம் என்று தோன்றியது. வாகனத்தை அவ்வை சண்முகம் சாலையை நோக்கித் திருப்பச் சொன்னேன்.

முன்பு சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகம் இருந்த, அவ்வை சண்முகம் சாலையின் கிளைச்சாலையான பெசன்ட் சாலையில் இருக்கிறது பழ. கருப்பையாவின் வீடு. நடுநிசி நேரம் கடந்து, அந்த வழியாகப் பயணிப்பதாக இருந்தால் ஒரு எட்டு அவரைச் சந்திப்பது வழக்கம்.

நடுநிசி தாண்டியும் விளக்கு எரிகிறது என்றால் ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் அவர். சில நாள்கள் நான் அங்கிருந்து கிளம்பும்போது மணி மூன்றைக் கடந்துவிடுவதும் உண்டு.

Advertisement

Advertisement

நான் எதிர்பார்த்தது போலவே, ஏதோ படித்துக் கொண்டிருந்தார். அரசியல், இலக்கியம், சினிமா என்று பல்வேறு செய்திகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், விவாதித்தோம். அன்றும் அப்படித்தான். எங்கள் பேச்சு காரைக்குடி குறித்தும், கம்பன் கழகம் குறித்தும் திரும்பியது. அதன் நீட்சியாக 'கம்பன் அடிப்பொடி' சா. கணேசனார் குறித்தும்.

1927-இல் அண்ணல் காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபோது, அவரது உரையைக் கேட்டு விடுதலை வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டார் கம்பன் அடிப்பொடி. 1941 தனிநபர் சத்தியாகிரகத்தின்போது, காரைக்குடியில் இருந்து தில்லிக்கு நடைப்பயணம் தொடங்கியவர் அவர். 66-ஆவது நாள் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.

மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் சுதந்திரா கட்சி உருவானபோது, காங்கிரஸிலிருந்து விலகி அதில் தன்னை இணைத்துக் கொண்டார் சா.க. அவர் தேர்தலில் நின்றபோது அவருக்காக காரைக்குடிக்குப் பிரசாரத்துக்கு வந்தார் 'பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவர். 1962-இல் சட்டப்பேரவைக்கும், 1968-இல் சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சா.கணேசன் கடைசிவரையில் சட்டை அணியாமல், மேல் துண்டுடன்தான் இருந்தார் என்பது அவரது தனித்துவம்.

அண்ணாவின் 'தீ பரவட்டும்' என்கிற அறைகூவலுடன் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தினரால் ஆங்காங்கே தீக்கிரையாக்கப்பட்டபோது, கம்பனின் தமிழ் சாம்பலாகிவிடாமல் காப்பாற்ற 'கம்பன் அடிப்பொடி' சா. கணேசனாரால் தொடங்கப்பட்டதுதான் கம்பன் அறநிலை. 1939 முதல் இன்றுவரையில் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடர்ந்து ஆண்டு

தோறும் கம்பன் விழா நடத்தி, கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்க்கிறது. 'தீ பரவட்டும்' என்று முழங்கிய பலர் பின்னாளில் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொள்வதும், ஆங்காங்கே கம்பன் கழகத்துக்குத் தலைமை வகிப்பதும், சா.கணேசனுக்குக் கிடைத்த வெற்றியல்லாமல் வேறென்ன?

சா. கணேசன் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தியைச் சொன்னார் பழ. கருப்பையா. ஒரு முறை அவரைச் சந்திக்க பழ. கருப்பையா சென்றபோது, தனது பேரனிடம் வெள்ளை நிற தேங்காய்ப்பூ துண்டு (டர்க்கி டவல்) ஒன்று வாங்கப் பணித்தாராம் சா.க. ''வெள்ளை அழுக்காகி விடும் , வண்ணத் துண்டு வாங்கலாமே'' என்று பேரன் சொன்னபோது, ''அதனால்தானே வெள்ளை வாங்கச் சொன்னேன். இதில் அழுக்கானால் தெரியும். உடனே துவைத்துச்

சுத்தமாக்குவோம். வண்ணத் துண்டில் அழுக்கு தெரியாது. அதனால் அழுக்குத் துண்டைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம்'' என்றாராம்.

பழ. கருப்பையாவை நான் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரிடமிருந்து ஏதாவது புதியதொரு செய்தியைத் தெரிந்து கொள்கிறேன். அதனால்தான் நடுநிசி கடந்த நேரமானாலும், அவரைச் சந்திக்கச் செல்கிறேன்.

ஜூன் 6 சா.கணேசனாரின் பிறந்த நாள்.

அரவக்குறிச்சியில் ஆறுமுகம் கல்வியகத்தின் 30-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதன்கிழமை கலந்து கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களது கல்வி நிலையத்துக்கு வரும்படி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் அழைத்து வந்தார். இந்த முறை தவிர்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.

எல்லோரும் தங்கள் பெயரில், தங்களது பெற்றோர் பெயரில், மனைவி பெயரில், குழந்தைகள் பெயரில் கல்வி நிலையம், நிறுவனம் தொடங்குவார்கள். ஆனால், மேனாள் துணைவேந்தர் தனது பள்ளி ஆசிரியராக இருந்த பெருமகனார் பெயரில் கல்விச் சாலையை நிறுவி, 30 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபுவும், கோவை விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் அண்ணாச்சியும், கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் க. செங்குட்டுவனும் கலந்து கொண்டனர். எனக்கு நினைவுப் பரிசாக முனைவர் ப. சிவ

குமார் எழுதித் தொகுத்திருக்கும் 'கோவை மாவட்ட வரலாறு' புத்தகம் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு யாரும் ஆய்வு செய்யாதவற்றைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட நூல் என்கிற வேலாயுதம் அண்ணாச்சியின் அணிந்துரை, உடனடியாக அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது.

கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட மலைகளால் சூழப்பட்ட கொங்கு நாட்டுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ நாடுகளின் ஓரத்தில் அல்லது கங்கில் அமைந்ததால்தான் 'கங்கு' திரிந்து 'கொங்கு' எனப் பெயர் பெற்றது என்று ஆசிரியர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

முதல் இந்திய சுதந்திரப்போர் என்று வர்ணிக்கப்படும் 1806 வேலூர் புரட்சிக்கும், 1857 சிப்பாய் கலகத்துக்கும் முன்னதாகவே 1800-இல் கோவையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் தீரன் சின்னமலை தலைமையில் பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்தான் உண்மையான முதல் விடுதலை எழுச்சி. அது கொங்கு நாட்டில்தான் தொடங்கியது.

கொங்கு மண்டலம் குறித்து என்னென்ன விவரங்கள் உண்டோ, என்னென்ன சந்தேகங்கள் உண்டோ, கொங்கு மண்டலத்துக்கு என்னென்ன பெருமைகள் உண்டோ அவை அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் பெட்டகம் 'கோவை மாவட்ட வரலாறு'.

அரும்பாவூர் இ. தாஹிர் பாட்சாவின் முதல் ஹைக்கூ தொகுப்பு 'நினைவுகள் நிரம்பிய வீடு'. கடந்த மே 17-ஆம் தேதி புதுக்கோட்டையில் நடந்த ஐந்தாவது உலக ஹைக்கூ மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு பருக்கை.

குத்தகையில் விளைநிலம்

வாடகை வீட்டில்

மாடித் தோட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.