FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 12-07-2026

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழன்' நாளிதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்திருந்தார்கள்.

Updated On : 12 ஜூலை 2026, 10:42 pm IST
பகிர்:

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழன்' நாளிதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்திருந்தார்கள். அதன் ஆசிரியர், நண்பர் சிவராஜாவின் அன்புக் கட்டளையைத் தட்ட முடியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த ஊடகக் குழுமத்தின் அதிபர் திரு.திலித் ஜயவீரவின் அழைப்பும்கூட எனும்போது தவிர்க்க முடியுமா என்ன?

லிபர்டி பப்ளிஷர்ஸ்' என்பது இன்று இலங்கையில் மிகவும் முக்கியமான, பிரபலமான ஊடகக் குழுமம். காட்சி, அச்சு, இணையம் என்று அனைத்து ஊடகங்களிலும் முன்னணி வகிக்கும் நிறுவனம். அதன் நிறுவனரான திரு. திலித் ஜயவீர, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும்கூட. அரசியலில் தனித்து இயங்கும் சக்தியாக வலம் வரும் திரு.திலித் ஜயவீரவின் தனித்துவம் என்னவென்றால், தனது எளிமையான தொடக்கத்தைப் பெருமையாக நினைக்கும் பண்பு.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உடன் படித்த தனது நண்பர்களான திருமதி. வருணி பெர்ணான்டோ அமுனுகம, சர்வா அமரசேகர ஆகியோரையும் இணைத்துக் கொண்டு அவரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட விளம்பர நிறுவனம்தான் ட்ரியாட்'. இன்று இலங்கையின் முதன்மை விளம்பர நிறுவனமாக மட்டுமல்லாமல், விளம்பரத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரிவுகளிலும் அது விரிவடைந்திருக்கிறது.

Advertisement

Advertisement

அந்த நிறுவனத்தின் தரண' தொலைக்காட்சி மிகப்பெரிய வியாபார வெற்றியையும், அரசியல் புகழையும் அடைந்த நிலையிலும் தனது எளிமையான தொடக்கத்தை மறந்திடாத திரு.திலித்தின் பண்புதான் அவரது வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.

அவர்களது அலுவலகத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறிய விளம்பர நிறுவனத்தைத் தொடங்கும்போது திரு.திலித் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் (மொபெட்) காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

எளிய நிலையில் இருந்து உழைப்பு, நேர்மை, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகிய ஐந்தும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதைத் தனது நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு உணர்த்துவதாக அவர் அதைக் காட்சிப் பொருளாக்கி இருந்திருப்பாரோ என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

தன்னுடன் பல்கலைக்கழகத்தில் வேறு பிரிவுகளில் படித்த நண்பர்களான திரு. மாதவ மடவள, திரு.விஜித் சந்திரசேன ஆகியோரையும் இணைத்துக் கொண்டிருக்கும் திரு.திலித் ஜயவீரவின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றிருப்பவர் தமிழன்' ஆசிரியர் சிவராஜா.

தமிழன்' நாளிதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவில் தொழிலதிபர் என்.எஸ்.வாசு, பேராசிரியர் கலாநிதி பரீனா ருஸைக், மூத்த ஊடகவியலாளர் நடேச பிள்ளை வித்தியாதரன், திருமதி. ஷர்மிளா தர்மராசா, எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன், கலாநிதி ஷாமினி இராமநாதன் ஆகியோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அந்த விழாவில் இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதை

தமிழுக்கும், தமிழனுக்கும் தரப்படும் கௌரவமாகத்தான் நான் பார்த்தேன்.

இலங்கையின் ஒற்றுமைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுடனான நட்புறவுக்கும் இணைப்புப் பாலமாக தமிழன்' நாளிதழ் திகழ வேண்டும் என்று விரும்பும் திரு.திலித் ஜயவீரவின் பரந்து விரிந்த பார்வைக்கும், சமூக நல்லிணக்கம் பேணும் பண்புக்கும் தலைவணங்கத் தோன்றுகிறது. மூன்று நாள் இலங்கைப் பயணம் நிறைவைத் தந்தது மட்டுமல்ல, புதிய நம்பிக்கையையும் என்னுள் எழுப்பி இருக்கிறது.

பல்வேறு அறிஞர்கள் பல்வேறு காலகட்டத்தில் எழுதிய கட்டுரைகள், கதைகள், உரைகள் ஆகியவற்றை எல்லாம் தேடிப்பிடித்து பதிப்பித்த பதிப்புலக முன்னோடிகளில் ஒருவரான முல்லை முத்தையா அரை நூற்றாண்டுக்கு முன்பு வெளியிட்ட தொகுப்புதான் திருமணக் களஞ்சியம்'. அந்த நூல், மேலும் சில குறிப்புகளையும் கட்டுரைகளையும் சேர்த்து இப்போது புது வடிவில், புதுப் பொலிவில் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.

திருமணத்தின்போது, மணமக்களுக்குப் பரிசளிப்பதற்காகவே முல்லை முத்தையாவால் தொகுக்கப்பட்ட நூல் திருமணக் களஞ்சியம்'. பண்டைய நூல்களில்

திருமணம், வாழ்க்கை குறித்த செய்திகள், நம் நாட்டு அறிஞர்களின் கட்டுரைகள், பிற நாட்டு அறிஞர்களின் கட்டுரைகள், பிற நாட்டு அறிஞர்களின் மண வாழ்க்கை குறித்துப் பதிவு செய்திருக்கும் நுண்ணிய ஆராய்ச்சிகள் - இவை எல்லாமும் மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தொகுத்திருப்பதாகத் தனது முன்னுரையில் முல்லை முத்தையா தெரிவித்திருக்கிறார்.

ராஜாஜி, பெரியார் ஈவெரா, பேராசிரியர் கல்கி, பெர்னாட் ஷா ஆகியோரின் கட்டுரைகளை நான் ரசித்துப் படித்தேன். மற்ற கட்டுரைகளை? படித்து ரசித்தேன்.

முல்லை முத்தையாவின் நோக்கம் நிறைவேற வேண்டும்.

இந்தப் புத்தகம் திருமணங்களில் பரிசாக வழங்கப்பட வேண்டும். ஏனென்று கேட்கிறீர்களா? இந்தத் தலைமுறை மணமக்களுக்கு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான்!

மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும், பழனியைச் சேர்ந்த ஜி. சிவக்குமார் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது துதிக்கைத் துழாவல்' தொகுப்பில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை-

டேய், அப்பா கையைப் புடிச்சுக்கடா

கூட்டமா இருக்கு

பிடித்துக் கொண்டேன்

அப்பா, எங் கையைப் புடிச்சுக்குங்க

கூட்டமா இருக்கு

பிடித்துக் கொண்டேன்

திருவிழாக்கள்

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments