முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

வரலாறு படைத்த 'சோவெட்டோ' மாணவர் எழுச்சி 1976!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘சோவெட்டோ’ மாணவர்களின் எழுச்சி பற்றி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:39 AM
சோவெட்டோ மாணவர் எழுச்சி
பகிர்:

கிழக்கு பாகிஸ்தானில் 1948 முதல் 1952 வரை மாணவர்கள் முன்னெடுத்த மகத்தான மொழி இயக்கம், உலக நாடுகள் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் (பங்களாதேஷ்) உருவாக வித்திட்டது. அந்நாட்டில், நீண்ட மொழிப் போரின் உக்கிர தினமானது 1952 பிப்ரவரி 21. அறியப்பட்டிருக்கும் புதுயுக வரலாற்றில், தாய்மொழி காப்பதற்கான முதல் களப்பலி அளித்து, வரலாற்றில் மங்காத உன்னதமாகி, உலக தாய்மொழிகள் தினமாகியுள்ளது அந்நாள். பிப்ரவரி 21, பங்களாதேஷின் தியாகிகள் தினமாக, தேசிய விடுமுறை தினமாக நிலைபெற்றுள்ளதை அறிவோம். அதுபோலவே, தமிழ்நாட்டில் 1931 முதல் பல காலமாக இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற மொழிப் போர்களின் உச்சிக் காலமானது 1965. மாணவர்கள் தன்னெழுச்சிகொண்டு உயிர்த்தியாகம் செய்து எழுதியது புதிய வரலாறு! இந்தியா விடுதலையடைந்தது முதல் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் ஏகமாக ஆட்சிபுரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைத் தமிழகத்தில் அறவே வேரறுத்தன, 1965 மொழிப்போர் விளைவுகள். 1967 முதல் இன்று வரை அக்கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவே இயலாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் 1949இல் அறிஞர் அண்ணாவால்  தொடங்கப்பட்ட திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ஆட்சிப் பயணம் தமிழ்நாட்டில் உதயமானதும் வரலாறு. தாய்மொழி காக்க, மொழிப் போரில் இன்னுயிரீந்ந வீர்ர்களின் ஈர நினைவுகள் போற்றும் ‘மொழிப்போர் தியாகிகள் தினம்’ என சனவரி 25, நினைவுப் பதியனாகியிருக்கிறது. 

கிழக்கு பாகிஸ்தானிலும் (1952) தமிழ்நாட்டிலும் (1965) தம் மொழிகாக்க, மாணவர்கள் முன்நின்று நடத்திய மொழிப் போர்களைப் போலவே, நீண்ட காலமாக நிறவெறி அரசுகள் ஆண்டு வந்த தென்னாப்பிரிக்காவில், சோவெட்டோ (Soweto) பகுதியில் 1976, ஜூன்16இல் இளம் பள்ளி மாணவர்கள் (13-16 வயது) அடக்குமுறைக் கல்விக் கொள்கைக்கு எதிராக - தங்கள் தாய்மொழிப் புறக்கணிப்புக்கு எதிராக -  சக்தி வாய்ந்த குழுவாகத் திரண்டெழுந்தனர். இரக்கம் சிறிதுமற்ற ஆட்சியாளர்களது  துப்பாக்கிக் குண்டுகளுக்கு, அமைதியாகப் போராட்டக் களம் நின்ற 13 முதல் 16 வயதுக்குள்ளான பிஞ்சு மாணவர்கள் பலர் பலியாயினர். சோவெட்டோ எழுச்சி நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு காவியப் போராட்டமாக மாறியது. பின்னாள்களில் (1994) நெல்சன் மண்டேலாவின் முதல் கறுப்பினத்தவரது ஆட்சி தோன்றியதற்கும் 1976, ஜூன் 16 சோவெட்டா பள்ளி மாணவர்கள் எழுச்சியும் உயிர்ப்பலியும்தான் ‘ஆதிவிதைகள்’! தற்போது, அந்நாள் (ஜூன் 16) தென்னாப்பிரிக்காவில் இளைஞர் தினமாகும், நிறவெறி அரசாங்கத்தின் பாண்டு கல்வித் (Bantu Education)திட்டத்திற்கு எதிராக நின்ற இளம் மாணவர்கள் காட்டிய ஈடற்ற துணிச்சலை நினைவுகூறும் ஒரு தேசிய விடுமுறை நாள் அது.

தென்னாப்பிரிக்காவில் தொடக்கத்திலிருந்தே அடக்குமுறை, இனவெறி அரசாங்கமே இருந்தபோதிலும், நிறவெறி நிலை-  "தனித்தன்மை"  (Apartheid) - 1948 இல் நாட்டில் அதிகாரப்பூர்வக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும்பான்மை மக்கள் கறுப்பினத்தவர்களே. ஆயினும், நிறவெறி தலைவிரித்தாடிவந்த   தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மாணவர்களுக்குப் பாரபட்சமான, தரமற்ற, வாழ்க்கைக்கு உதவாத, கல்வியாக கற்போரை எடுபிடிக் கூலி வேலைகளுக்குத் தயார்படுத்தும் வகைக் கல்வியே வழங்கப்பட்டு வந்தது. பள்ளிகளில் சரியான கட்டுமான வசதிகள் இல்லை; போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை; பாடநூல்கள், நூலகம் என்பனவும் இல்லை. "ஐரோப்பியர்களுடன் சமத்துவம் கறுப்பினத்தவர்க்கு இல்லை என்பதை உணரப் பூர்வீகக் குடிமக்கள் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படுவார்கள்’’ என நிறவெறியின் சிற்பி என்று அழைக்கப்படும் ஹென்ட்ரிக் வெர்வோர்ட் கூறியது அந்நாளைய நிலைமைகளை எதிரொலிக்கும் சொற்கள். 

1975 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மாணவர்கள் தங்கள் முக்கிய பாடங்களான கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை ஒரு புதிய மொழியில் – ஆஃப்ரிக்கான்ஸில் (Afrikaans) - கற்கத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டது. மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்க்கையைத் துன்பகரமானதாக மாற்றவே இந்த அவசியமற்ற நடவடிக்கை! அதுவரை, ஆரம்பக் கல்வி நிலையில், மக்கள் அவர்களின் (பழங்குடியினரின்) தாய்மொழியிலும் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்திலும்  இப்பாடங்களைக் கற்று வந்தனர். ​​உயர்நிலைப் பள்ளி மாணவர்களாக வரும் காலத்திலிருந்து, தங்களை ஒடுக்குபவர்கள் திணிக்கும் மொழியான ‘ஆஃப்ரிக்கான்ஸில்’ கல்வியைத் தொடங்க வேண்டிய, தேவையில்லாத கட்டாயம் மாணவர்கள்மீது ஏற்றப்பட்டது. தங்கள் தாய்மொழியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து கற்கும் வாய்ப்பு பறிபோவதை மாணவர்கள் தாமாகவே உணரத் தொடங்கினர். போதாக்குறைக்கு முன்குறிப்பிட்ட பாடங்களைப் புது மொழியான ஆஃப்ரிக்கான்ஸில் கற்பிக்கப் போதிய பாட நூல்களும் ஆசிரியர்களும் அங்கில்லை.

தமக்கு வழங்கப்படும் கல்வி முறையில் தொடரும் அநீதிகளுக்கு இனிமேலும் பொறுமையுடன் துணை நிற்க முடியாது என்றும் தாய்மொழியில் தாம் கல்விகற்கும் உரிமையை சிறுபான்மை வெள்ளையினத்தவரின் அடக்குமுறைக்குப் பயந்தோ பணிந்தோ விட்டுத்தரக் கூடாது  என்றும்  மாணவர்கள் தன்னெழுச்சி கொண்டனர். 1976 ஜூன் மாதம் வெடித்த சோவெட்டோ எழுச்சி, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அந்த மூன்று நாள்கள் (1976 ஜூன் 16,17,18)

ஜூன் 16, 1976இல் ஜோகன்னஸ்பர்க் நகரின் சோவெட்டோவின் விடியல் சாதாரண விடியலல்ல. அன்று நிகழவிருக்கும் எந்தச் சம்பவத்தின் அறிகுறிகளும் யாரும் அறியாவண்ணமிருந்தன. யாருமே எதிர்பாராதவைகள் நிகழ்ந்த மிகத் தீரமான, ஆனால், படுசோகமான நாளின் விடியல் அது. 

உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்தான்! ஆனாலும் மிகச் சாதுரியமாக, பரமரகசியமாக, நிறைதிறமையுடன் தாங்கள் நடத்தவிருக்கும் பேரணியைத் திட்டமிட்டிருந்தனர். ஒரே சமயத்தில் பேரணியாகச் சாலையில் திரண்டால் போலீசார் திட்டமிட்ட ஆர்லாண்டோ மேற்கு மைதானத்திற்குத் தங்களைச் செல்லவிடாமல் தடுத்துவிடுவார்கள் எனக் கருதி, வித்தியாசமாகத் திட்டமிட்டனர். 

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவ, மாணவிகள் சிறுசிறு இடைவெளிகள் விட்டு வேறுவேறு நேரங்களில் புறப்பட்டு, வேறுவேறு பாதைகளில், ஆர்லாண்டோ வெஸ்ட் ஜூனியர் மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள மைதானத்தை அடைவது என்பது அவர்களது திட்டம். ஒவ்வொரு பள்ளியின் அணி புறப்படத் தொடங்கிய நேரம், சற்று இடைவெளிவிட்டு அடுத்த பள்ளி மாணவர்கள் கிளம்ப ஏதுவாக - அடுத்தடுத்துத் தொடங்கவேண்டிய பள்ளிகளுக்குக் - கிடைக்குமாறு ஏற்பாடுகள் இருந்தன. இதுபோல ஒவ்வொரு பள்ளிக்கும் செய்திகள் பரிமாற்றம் தொய்வின்றி நடைபெற்றது. 

இம்முறையில் பல பள்ளிகளிலிருந்து, காலை ஏழு மணி முதலே பல பாதைகளில் சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளை விட்டு வெளியேறிப் பதாகைகளை ஏந்தி அமைதியாக அணிவகுத்து ஆர்லாண்டோ மைதானத்தை அடைந்தனர், தங்களை மேம்படுத்த உதவாத கல்வி முறைக்கு எதிராகத்- தங்கள் தாய்மொழியில் கற்கும் உரிமை பறிபோவதற்கு எதிராக- மிக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டப் பதாகைகளைக் கையிலேந்தி முழக்கமிட்டனர். 

ஆர்ப்பாட்டப் பதாகைகள் பெரும்பாலும் கிழிந்த அட்டைப் பெட்டிகள், பெரிய நோட்டுகள் புத்தகங்களின் தடித்த அட்டைகளால் தயாரானவை. அப்பதாகைகளில் தங்கள் உணர்ச்சிகளைத் தங்கள் கைகாளால் தமக்குக் கிடைத்த பல வண்ண மைகளால் எழுதி ஏந்தி நடந்தனர். அவற்றில்,

  • 'ஆஃப்ரிக்கான்ஸ், டவுன் வித் ஆஃப்ரிக்கான்ஸ்' ; (Afrikaans, down with Afrikaans)

  • 'கறுப்பர்கள் குப்பைத் தொட்டிகள் அல்ல - ஆஃப்ரிக்கான்ஸ் துர்நாற்றம் வீசுகிறது' (Blacks are bins, Afrikaans stinks)

  • 'ஆஃப்ரிக்கான்ஸ் மொழி', 'பாண்டு கல்வி - நரகத்திற்குச் செல்லட்டும்!  (To hell with Afrikaans and Bantu Education!)

என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

உண்மையிலேயே அந்நாளில் போலீசார் திணறிப் போய்விட்டனர். முன்கூட்டி எந்தத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் வேறுவேறு வழிகளில் இடைவெளியிட்ட நேரங்களில் தத்தமது பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கிளம்பியதால் மைதானத்தை அடையும்வரை எந்தப்பள்ளி மாணவர்களது அணிவகுப்பையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. பள்ளி மாணவர்களால் தாங்கள் மிக எளிதாக ஏமாற்றப்பட்டதாக மனதுக்குள் குமைந்தனர்; கடுஞ்சினம் கனன்று கொண்டிருந்தது அவர்கள் நெஞ்சத்தில்.

ஜபுலானி காவல் நிலையத்தில் சேகரிக்கப்பட்டிருந்த போலீஸாரின் ஒரு பகுதியினர் – சுமார் 50 போலீசார் - வாகனங்களில் மைதானத்தில் வந்திறங்கினர். அத்தருணத்தில் மிகப் பதட்டமான சூழ்நிலை இருந்தபோதிலும், மாணவ, மாணவியரின் பெரும் கூட்டம் வெகுஅமைதியாகவும் ஒழுங்காகவும் இருந்தது. 

மாணவர்கள் சோதோவில் தேசிய கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தனர்: ""மொரேனா போலோகா செச்சாபா சா ஹெசோ" (‘’கடவுள் எங்கள் தேசத்தை காப்பாற்றுவார்.’’) அச்சமயம் திடீரென்று ஒரு வெள்ளை போலீஸ்காரர், எந்த எச்சரிக்கையும் தராமல், மாணவர் கூட்டத்தின்மீது ஒரு கண்ணீர் புகைக் குண்டை வீசினார். புகையும் திகைப்பும்சூழ ஒருசில கணங்கள் மாணவர் கூட்டம் புகையை விட்டு வெளியேறச் சற்று பின்வாங்கியது, ஆனாலும் போலீசாரை எதிர்கொண்டு, பதாகைகளை அசைத்துப் பாடிக்கொண்டே நின்றனர். கலைந்து சிதறி ஓடவில்லை.

எமன் இறங்கியதுபோல ஒரு வெள்ளைக்கார போலீஸ்காரர் தனது துப்பாக்கியை உறையிலிருந்து வெளியே எடுத்தார். அச்சமயத்தில் போலீசாருக்கு அருகில் நின்ற கறுப்பின பத்திரிகையாளர்கள், "அவரைப் பாருங்கள். அவர் குழந்தைகளைச் சுடப் போகிறார் " என்று கூக்குரலிட்டனர். ஒரு  ஷாட் ஒலித்தது; ஒரு வினாடி மௌனம் நிலவியது; குழந்தைகள் அலறல் ஒலியும் கேட்டது;  குழப்பம் வெடித்தது. மேலும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. குறைந்தது நான்கு இளம் மாணவர்கள் கீழே விழுந்தனர், 13 வயதான ஹெக்டர் பீட்டர்சன் என்ற சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டறியப்பட்டது. போராட்டக் களத்தில் அடையாளங் காணப்பட்ட முதல் பலி அம்மாணவன். ஹெக்டர் பீட்டர்சன் சோவெட்டோவில் நடந்த படுகொலையின் அடையாளமாக மாறினார். மற்றவர்கள் அலறிக்கொண்டே போலீஸ் நிற்கும் திசைக்கே அலையெழுவதுபோல் எழுச்சியுடன்  ஓடிவந்தனர். 

துப்பாக்கிகள் இருந்தபோதும் மாணவர் கூட்டத்தை ஒப்பிடும்போது போலீஸ் எண்ணிக்கை மிகக் குறைவே. மேலும், பதாகைகளுடன் ஆத்திரமாக முன்னேறிக்கொண்டிருந்த மாணவர்களது பின்னாலிருந்து பெரும்பாலும் இளம் பெண்குழந்தைகள், செங்கற்கள், சரளைக்கற்கள், காலிபாட்டில்கள் எனக் கைக்குக் கிடைத்ததை எல்லாம் எடுத்து போலீசார் மீது ஆவேசமாக வீசினர். சில நிமிடங்களுக்குள்ளாகவே நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மாணவர் ஆர்ப்பாட்டம் ஒரு கலவரமாக மாறியது. 

துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது, மேலும் குழந்தைகள் விழுந்தனர். ஆனால், கூட்டம் போலீஸை முன்னோக்கியே சென்றது,. கற்களும் காலிபாட்டில்களும் ஆவேசமாகப் போலீஸ் மீது தொடர்ந்து வீசப்பட்டன. ஆயுதங்கள் இருந்தபோதிலும், போலீசார் ஆர்லாண்டோ கிழக்கை நோக்கிப் பின்வாங்கினர், சமாளிக்க முடியாமல்.

இச்சமயத்தில் மாணவர்கள் இறந்தவர்களின் உடல்களைச் சேகரித்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டனர். அருகிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கறுப்பின பத்திரிகையாளர்கள் காயமடைந்தவர்களை அருகிலிருந்த பரக்வநாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மாணவர்களுக்கு உதவினர்.

இதற்கிடையில் ஆர்லாண்டோவின் கிழக்குப் பகுதிக்குப் பின்வாங்கிய போலீஸ் ஆயுதம் ஏந்திய மற்றவர்களுடன் வாகனங்களில் திரும்பி வரும் செய்தியறிந்த மாணவர்கள், போலீஸ் வருகையைத் தடுக்க சாலைகளை மறிக்கத் தொடங்கினர். சாலைகளின் குறுக்கே பலவகைத் தடுப்புகள் வீசப்பட்டன. ஆர்லாண்டோ மேற்கில் ஏராளமான மாணவர்கள் இன்னும் வந்து கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. மாணவர்கள் குச்சிகள், பலவிதமான உலோகக் கம்பிகள், மரத் துண்டுகளுடன் தயாராக நின்று போலீஸ் தாக்குதலுக்காகக் காத்திருந்தனர்.

துப்பாக்கிச்சூட்டின்போது மைதானத்திற்கு வெளியே சிதறிய ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கு ராண்ட் நிர்வாக வாரியத்திற்கு (WRAB) சொந்தமான வாகனங்கள் சாலைகளில் கவிழ்க்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு வெள்ளை அதிகாரி, கோபமடைந்த கூட்டத்தால் அவரது காரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் வெறுக்கப்பட்ட டவுன்ஷிப் நிர்வாக அலுவலகங்களுக்கும் தீ வைத்ததால், சோவெட்டோவின் அருகிலுள்ள பகுதிகளில் எல்லாம் புகை உயரத் தொடங்கி, நகருக்கும் அப்பாலும் சோவெட்டாவின் துயரை அறிவித்தது.

அமைதியாக ஆர்லாண்டோ மைதானத்தில் பரவிநின்ற இளவயது மாணவர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிக் குண்டுகளைச் சரஞ்சரமாக வெடித்த வெள்ளையர்களது நிறவெறி ஆட்சிமீது பரவியது மாணவர்களது அடங்கா ஆத்திரம். அரசின் அனைத்து நிர்வாக அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள், பீர்ஹால்கள், பாட்டில் கடைகள் அழிக்கப்பட்டன. வெள்ளையரது கார்கள், வேன்கள், அரசுப் பேருந்துகள் மாணவர்களால் தாக்கப்பட்டன. "வெள்ளையர்களின் கார்களைத் தேடித்தேடித் தாக்கினர். அவ்வாகனங்களின் ஓட்டுநர்கள் வாகனங்களில் இருந்து வெளியே இழுக்கப்பட்டனர், அவர்கள் எதிர்க்காவிட்டால் அவர்களுக்குக் காயம் ஏதுமில்லை. நகரில் வெள்ளையர்களது அனைத்து வணிக வாகனங்களும் சாம்பலாகின. போலீசார் கறுப்பினக் குழந்தைகளைச் சுட்டுக் கொன்றதால், கலவரத்தில் ஈடுபட்ட குழந்தைகள் தங்கள் கோபத்தை எங்கு செலுத்துவது என்பதில் மிகவும் தெளிவு இருந்தற்கு முன் குறிப்பிட்ட அழிவுகள் சாட்சி.  பிற்பகல் 1.30 மணிக்கு, இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆர்லாண்டோ மேற்கில் உள்ள மைதானத்தில் மீதமிருந்த மாணவர்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசத் தொடங்கின.

மாணவர்கள், தமக்கான பாடத்திட்டத்தில் எளிதாகத் தமது தாய்மொழியில் கல்வி கற்பதைத் தடுத்து - எந்த அறிவு சார்ந்த அவசியமுமில்லாமல் - புதியமொழியை (ஆqப்பிரிக்கான்ஸ்) புகுத்தியதை அமைதியாக எதிர்த்து நின்றது பள்ளிப்பிள்ளைகள்தானே, பதின்மவயது மாணவ மாணவியர்தானே எனக் கடுகளவும் கருணையில்லை ஆட்சியாளர்களுக்கு. 

உண்மையில் துப்பாக்கிச் சூடுகளால் இறப்புகள் எண்ணற்றதாகவே இருந்தாலும், அரசுத் தகவல்கள் 174 கறுப்பின மாணவர்களும் 2 வெள்ளைப் போலீசாரும் இறந்தனரெனத் தெரிவித்தன. இது தொடர்பாக ’சிலி விசாரணைக் கமிஷன்’ அமைத்து அரசு ஆணையிட்டது. கர்னல் ஸ்வான்போல், என்ற வெள்ளை அதிகாரி, பிறகு நடைபெற்ற சிலி விசாரணைக் கமிஷனில் ‘’மைதானத்தில் ஐந்து "கிளர்ச்சியாளர்களை" தனிப்பட்ட முறையில் தாம் கொன்றதாகப் கூறியது அப்போதைய அதிகாரிகளின் கொடுமனதிற்குச் சான்று. 

இளம் மாணவர்களைப் பெருங்கலவரக்காரர்களாக மாற்றியது ஆட்சியாளர்களது நிறவெறி அணுகுமுறைகளும்  இரக்கமற்ற அடக்குமுறை நடவடிக்கைகளும்தான். 

ஜூன் 16, மாலையில் வேலையிலிருந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் அன்றைய நிகழ்வின் கொடூரங்களை அறிந்தனர். ஆத்திரத்தோடும், கவலைகளோடும் தங்கள் பிள்ளைகளைத்தேடிப் பெருமளவில் மைதானத்திற்கு விரைந்தனர். அவர்கள் மீதும் வரும் வழிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. பலர் சாலைகளில் மடிந்தனர். 

மாலை 5 மணி முதல் 8 மணிக்கு இடையில், 20-க்கு மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக போலீசாருக்குத் தகவல்கள் வந்தன. கலவரபூமியானது நகர். ஆங்காங்கு தீவைக்கப்பட்ட அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பாண்டு கல்வி அலுவலகங்கள், வெள்ளையரின் தொழிற்சாலைகள், கடைகள், வீடுகள் பற்றியெரிந்தன. நிலைமை படுமோசமாகி அடுத்த இரண்டு நாள்களிலும் (ஜூன்17,18) தொடர்ந்தது. இருளும் புகையும் எண்ணற்ற மரணங்களும் சோவெட்டாவைச் சூழ்ந்து கவ்வியது.

1976 ஜூன் 16இல் பள்ளி மாணவர்களது தாய்மொழிக் கல்வி உரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, ஈவிரக்கமற்ற துப்பாக்கிச் சூடுகளால் எண்ணற்ற கறுப்பின மாணவர்கள் உயிரிழப்புகள் நிகழ்ந்து, தொழிலாளர்களும் மக்களும் போராட்டத்தில் இணைந்து, நாடு முழுவதும்  சுமார் 160 ஆப்பிரிக்க சமூகங்கள் இந்த எதிர்ப்பைப் பரவச் செய்து, அடுத்த நான்கு மாதங்களில் தினசரி நிகழ்வுகளில் ஒன்றானது போராட்டங்கள். 

ஜூன் முதல் இரண்டு வாரங்களுக்குள்ளேயே சுமார் 600 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்தனர் என்றாலும், இந்த எழுச்சி பல மாதங்களாக நீடித்தது. சோவெட்டில் பற்றிய தீ பரவியது தென்ஆப்பிரிக்கா முழுவதும், அணையாமல்.

இத்தகைய, இரண்டு தசாப்த காலத் தொடர்ச்சியான போராட்டங்கள் அனைத்தின் குவி விளைவாக, இடையில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கம் (ANC) விடாது தொடர்ந்த முன்னெடுப்புகள், கறுப்பின மக்களின் தன்னெழுச்சி போன்றவற்றின் இணைந்த ஆற்றலால், 1990களின் முற்பகுதியில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தது. நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகத் தேர்தல் மூலம் நெல்சன் மண்டேலா 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தப் புதிய வரலாறு விளைய 1976 ஜூன் 16இல் சோவெட்டோ, ஆர்லாண்டோ மைதானத்தில் துப்பாக்கிக் குண்டுகளால் வீழ்ந்து மடிந்த இளம் மாணவர்களே மூல விதைகள்.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள்:

  • பரூச் ஹிர்சன், ‘நெருப்பு ஆண்டு, சாம்பல் ஆண்டு’ - சோவெட்டோ கிளர்ச்சி: ஒரு புரட்சியின் வேர்கள். ஜெட் பிரஸ், லண்டன், ஜூன் 1979 

  • ஜெர்மி பிரிக்ஹில், ‘புயலுக்கு முன் சூறாவளியானது’ தெற்கு ஆப்பிரிக்காவுக்கான சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவி நிதி, லண்டன் 1980

  • தென்னாப்பிரிக்க மாணவர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி (SASM): 1968-1976, Nozipho J. Diseko [ தெற்கு ஆப்பிரிக்க ஆய்வுகளின் இதழ், தொகுதி 18, எண் 1, சிறப்பு வெளியீடு: (மார்ச், 1992).

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

Soweto student protest and massacre 1976

முழு கட்டுரையைப் படிக்க →