அடுத்து என்ன? சட்டம் படிக்க வாருங்கள்!
பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இப்போது ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறக்கூடிய முக்கிய விவாதம் உயர் கல்வி பற்றியதே.
பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இப்போது ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறக்கூடிய முக்கிய விவாதம் உயர் கல்வி பற்றியதே. தங்கள் மகன் அல்லது மகள் மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகவேண்டும் என்பதே பெற்றோரின் முதல் எதிர்பார்ப்பு. பத்தாம் வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பில் சேரும்போதே மருத்துவர் (அ) பொறியாளர் படிப்பு சாத்தியமா என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிடுகிறது.
மதிப்பெண் பட்டியல் கிடைத்த பிறகு மருத்துவம், பொறியியல் தவிர்த்து மற்றது என்ன என்ற தேடல் தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகளில் வேலை அல்லது ஆசிரியப் பணி என்று தேடல் பட்டியல் நீள்கிறது. படித்த பெற்றோர் கூட தங்கள் குழந்தைகளுக்கு சட்டப் படிப்பைப் பரிந்துரைப்பதில்லை. சட்டத்துறையில் உள்ள பெற்றோர் மட்டுமே - தங்கள் குழந்தைகள் விரும்பினால் - ஊக்குவிக்கிறார்கள்.
அறிவாளி மாணவர்கள் படிக்கவேண்டிய உயர் கல்விப் பட்டியலில் சட்டப் படிப்பைச் சேர்ப்பதில்லை. வேறு எதுவும் கிடைக்காவிட்டால் சட்டம் படிக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அறிவில் சிறந்தவர்களுக்குச் சவாலான துறைதான் சட்டம். சுமாராக படிப்பவர்கள் கூட தன்னம்பிக்கை, துணிச்சல் இருந்தால் சட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம்.
Advertisement
சட்டம் படித்தால் வழக்கறிஞராகத் தொழில் செய்யலாம். நீதித்துறையில் நிர்வாகப் பணியில் சேரலாம். குற்றவியல் நடுவர்கள், உரிமையியல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் போன்ற பணிகளுக்கு எழுத்துத் தேர்வு முறையில் பணியில் அமரலாம். மத்திய, மாநில அரசுகளின் சட்டத்துறை, பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத்துறை, ஹிந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறலாம்.
சட்டம் பற்றிய அறிவு அதற்கென்றே உள்ள பட்டப் படிப்பை படிக்கும்போதுதான் கிடைக்கிறது. பள்ளிக்கூடங்களிலேயே அடிப்படை சட்டங்கள் பற்றிய பாடங்களைச் சேர்த்தால் இந்த நிலை மாறும். சட்டங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்துவிட்டால் மாணவர்கள் உயர் கல்வியில் சேரும்போது சட்டப்படிப்பைத் தேர்வு செய்யத் தயக்கமோ அச்சமோ இருக்காது. கல்வியாளர்கள் இனியாவது இதில் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிக்கூட காலத்திலிருந்தே செய்தித்தாள்கள், பருவ இதழ்களை வாசிக்கும் பழக்கமும் நாட்டு நடப்பில் அக்கறையும் உள்ளவர்களாக இருந்தால் சட்டம் படிக்க உகந்தவர்களாகிவிடுவார்கள். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் கூட படிக்கக்கூடிய தொழில்சார்ந்த படிப்பு சட்டம் மட்டுமே. சாதாரண பட்டப்படிப்புக்காகும் கட்டணத்தைவிட சட்டம் பயில கட்டணம் குறைவு.
வழக்கறிஞர்களுக்கு போதிய வருமானம் இருக்காது என்ற தவறான கருத்து நிலவுகிறது. வழக்கறிஞர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தொழில் நடத்தினாலேயே நல்ல வருமானமும் பெயரும் புகழும் பெற்று சமூகத்தில் நல்ல மதிப்பையும் பெற முடியும். சுய தொழில் செய்ய சட்டத்துறை உகந்த துறை என்பதால் மாணவர்கள் இதில் சேர முன்வர வேண்டும்.