முகப்பு
தலையங்கம்

உண்மை தெரிந்தாக வேண்டும்!

’நீதித் துறையில் ஊழல் என்ற களங்கம்' இனிமேலாவது அகல வேண்டும்...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 6:39 AM
நீதிபதி யஷ்வந்த் வா்மா - x
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:28 AM

வீட்டில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் சிக்கிய அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியைக் கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) ராஜிநாமா செய்துள்ளார்.

2031 ஜன. 5-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த அவர், ராஜிநாமா செய்ததன் மூலம் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் உயர் நீதித் துறை நபர் என்ற அவமானத்தில் இருந்து தப்பி உள்ளார்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்தபோது அவருடைய அரசு இல்லத்தில் கடந்த 2025 மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். மேலும், நீதிபதி வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்ததுடன், அவருக்கு நீதித் துறை தொடர்பான பணியை ஒதுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement

துறை ரீதியான விசாரணையில், அவர் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ளதால், ராஜிநாமா செய்யுமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியபோதும், நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே, நீதிபதி வர்மாவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மக்களவை உறுப்பினர்கள் 146 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 62 பேர் என 208 பேர் சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, அது ஏற்கப்பட்டது.

நீதிபதி வர்மா விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அடங்கிய மூவர் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைத்தார். இந்தக் குழுவுக்கு எதிராக நீதிபதி வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆட்சியாளர்களின் அழுத்தத்துக்கு உள்ளாகாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்டம் அவர்களுக்குப் பல சலுகைகளையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 124 (4) அதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்துகிறது. நீதிபதி ஒருவரின் செயல்பாட்டில் களங்கம் உறுதிப்படுத்தப்பட்டாலோ அல்லது அவர் செயல்படத் தகுதியற்றவர் என்று மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்டாலோதான் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.

அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. நீதிபதிகள் (விசாரணை) சட்டப் பிரிவு 3(2)-இன் படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, மூத்த வழக்குரைஞர் அடங்கிய மூன்று பேர் குழுவால் விசாரணை நடத்தப்பட்டு, பதவி நீக்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும். மாநிலங்களவை என்றால் 50 உறுப்பினர்கள், மக்களவை என்றால் 100 உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினால்தான் பதவி நீக்கம் தீர்மானத்துக்கே எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கு முன்பு ஐந்து நீதிபதிகள் மீது பதவி விலகல் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 1991-இல் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் நீதிபதி வி. ராமசாமியின் மீதான தீர்மானம் தோல்வி அடைந்தது. 2011-இல் கொண்டுவந்த உயர்நீதிமன்ற நீதிபதி செüமித்ரா சென் மீதான தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவையில் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்பாக அவர் பதவி விலகி, அவமானத்தில் இருந்து காப்பாற்றிக் கொண்டார்.

அதேபோல, சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.டி. தினகரன் மீது மாநிலங்களவையில் தீர்மானம் எடுத்துக் கொள்வதற்கு முன்பே அவர் பதவி விலகி விட்டார். 2015-இல் இப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் நீதிபதி கே.பி.பார்திவாலாக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனது தீர்ப்பில் இருந்த விவாதத்துக்குட்பட்ட பகுதியை அகற்றி அதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. காஞ்சலே மீதான பதவி நீக்கத் தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது என்றாலும், விசாரணையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்ததால், தீர்மானம் கைவிடப்பட்டது. யஷ்வந்த் வர்மாவும் பதவி விலகியதன் மூலம் மிகப் பெரிய அவமானத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதனாலேயே அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார் என்று கூறிவிட முடியாது. அவரது வீட்டில் கண்டறியப்பட்ட கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தன என்று விசாரணை நடத்த இனிமேல் எந்தவிதத் தடையும் இருக்காது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் அந்தப் பணம் யாருடையது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது யாருடைய பணம் என்பது கண்டறியப்பட்டு, தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ’நீதித் துறையில் ஊழல் என்ற களங்கம்' இனிமேலாவது அகல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.