ஏமா(ற்)றுகிறார்கள்!
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்த, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850-ஆக அதிகரிக்க வழிகோலும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கிறது.
எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்த, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850-ஆக அதிகரிக்க வழிகோலும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் கூட்டணிக்கு எண்ணிக்கை பலம் இல்லை என்பது தெரிந்தும், எதிர்க்கட்சிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காகத்தான் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்கிற விமர்சனம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
எந்தவொரு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவாக இருப்பினும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவும், வாக்கெடுப்பில் பங்குபெறும் உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினரின் ஆதரவும் தேவை. மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இருந்தது என்றாலும், வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் மசோதா தோல்வி அடைந்திருக்கிறது.
மசோதா நிறைவேறினால், எதிர்க்கட்சிகளின் அணியில் பிளவை ஏற்படுத்துவதுடன், மகளிர் மசோதாவை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசு அரசியல் ஆதாயம் அடைய முடியும். அதே நேரத்தில், மசோதா நிறைவேறாமல் போனால், மகளிர் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முனைப்புக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள் என்று அவர்கள் மீது பழிசுமத்தி தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளலாம்.
Advertisement
அந்த வகையில், தோல்வியின் மூலமும் ஆதாயம் அடைந்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீண்டும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அரசியல் சாசன சபை 1946 டிசம்பர் 9-ஆம் தேதி முதல் முறையாகக் கூடியபோதே, மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்த கேள்வி எழுந்தது. அந்த அவையில் வெறும் 15 பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அம்மு சுவாமிநாதன், தாட்சாயணி வேலாயுதன், ராஜ்குமாரி அம்ரித் கெளர், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி, விஜயலட்சுமி பண்டிட் உள்ளிட்ட உறுப்பினர்கள் மகளிருக்கு சரிபாதி இடங்கள் அவையில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
"நாங்கள் எப்போதுமே இடஒதுக்கீட்டை எதிர்பார்ப்பவர்கள் அல்லர். நாங்கள் விழைவது சமூக, பொருளாதார, அரசியல் நீதி'' என்று முழங்கினார் ஹன்சா மேத்தா. "இடஒதுக்கீடு என்பது எங்களது (மகளிரின்) முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், எங்களது புத்திசாலித்தனத்துக்கும் திறமைக்கும் இழுக்காக இருக்கும் '' என்று கூறி இடஒதுக்கீட்டை நிராகரித்தார் ரேணுகா ராய்.
தகுதியுள்ள மகளிருக்கு அவைகளில் போதிய இடங்கள் கிடைக்க வழிகோலப்படும் என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக ஒரு கட்டுரையில் உறுப்பினராக இருந்த பட்டாபி
சீதாராமையா பதிவு செய்திருக்கிறார். ஆனால், முதலாவது மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அமைந்த 489 உறுப்பினர்களில் வெறும் 22 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அன்றைய ராஜீவ் காந்தி அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில்
நிறைவேறவில்லை. அந்தக் குறையை 1992-இல் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு நீக்கியது. இரு அவைகளிலும்
நிறைவேற்றி உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய சாதனை பி.வி. நரசிம்ம ராவுடையது.
1996-இல் தேவெ கெüடா தலைமையிலான அரசின் எட்டாவது அரசியல் சாசனத் திருத்தம் முதல் 2010-இல் மன்மோகன் சிங் அமைச்சரவையின் 108-ஆவது சட்டத்திருத்த மசோதா வரை நிறைவேற்றப்படாமல் காலாவதியானது என்பதுதான் வரலாறு.
2023-இல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களவைத் தேர்தலுக்கும், தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு அமல்படுத்துவதற்கான 33% மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. ஆனால், அதைச் சட்டமாக்குவதற்கான அறிவிக்கை, இப்போது நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு முன்புதான் வெளியாகி இருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்புக்கும் இப்போது கொண்டுவரப்படும் மக்களவை இடங்களை அதிகரிக்கும் முடிவுக்கும் தொடர்பில்லை. மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிப்பதாலும் எந்த
மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடாது. இவையெல்லாம் அல்ல பிரச்னை.தொகுதிகளை அதிகரிக்கும்போது, எப்படிப் பிரிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 543 உறுப்பினர்கள் கொண்ட அவை 850 உறுப்பினர்களாக உயரும்போது, எல்லா உறுப்பினர்களும் விவாதிக்கவும், கருத்துத் தெரிவிக்கவும் எப்படி நேரம் ஒதுக்க முடியும் என்பது குறித்து யோசித்தார்களா எனத் தெரியவில்லை.
மகளிர் மசோதாவை நிறைவேற்றினால் மட்டும் போதுமா? அதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து தெளிவு காணப்படவில்லையே. கானல் நீர்போல, இந்த முறையும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தேர்தல் அரசியலுக்கு உதவியிருக்கிறது.