அக்னிப் பசி!
இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90%, தீப்பெட்டித் தயாரிப்பில் 80% விருதுநகர் மாவட்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.
பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பதும், அதைத் தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன. இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இந்தத் துயரம் தொடர்கிறது எனும்போது, நாம் அது குறித்துக் கவலைப்படாமல் கடந்து போகிறோம் என்பதும், மனிதாபிமானமே இல்லாத சமூகமாக மாறிவிட்டிருக்கிறோம் என்பதும்தான் அதற்குப் பொருள்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் பண்டிகையின் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகளுக்காக வெடிகள் தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த விபத்தில் சுமார் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். திருச்சூர் மாவட்டத்தின் முண்டத்திக்கோடு என்கிற இடத்தில், வயல்வெளியை ஒட்டிய, ஆள் நடமாட்டம் இல்லாத ஐந்து ஏக்கர் இடத்தில்தான், பூரம் வாணவேடிக்கைக்கான வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல பூரம் வாண வேடிக்கைக்காக வெடிகள் தயாரித்தபோது விபத்து நேர்ந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு, கொல்லம் மாவட்டம் பறவூர் புற்றிங்கல் கோயில் வெடி விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் மட்டும் 51 வெடி விபத்துகளில் 474 உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கின்றன.
Advertisement
கடந்த ஞாயிறன்று (ஏப்.19) விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 21 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பிற்பகல் 3.30 மணியளவில் சரவெடி தயாரித்துக் கொண்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிமருந்து உராய்வு காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அறை மட்டுமல்லாமல், அருகிலிருந்த மேலும் மூன்று அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டாகி விட்டன.
100 சதுர அடி அளவில் நான்கு பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. 16 பேர் மட்டுமே பணியாற்ற வேண்டிய அங்கிருந்த நான்கு அறைகளில் 50}க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்திருக்கிறார்கள். மத்தாப்பு போன்ற வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிமுறையை மீறி அங்கே ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரித்தனர் என்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
அரசியல் கட்சிகளின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் கேட்பு (டிமாண்ட்) வந்திருக்கிறது. அதை எதிர்கொள்ள விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமையிலும் விடுமுறை வழங்காமல் ரகசியமாக வேலை நடைபெற்றது தெரியவந்திருக்கிறது. பட்டாசுத் தயாரிப்பின் மூலப்பொருள்களில் ஒன்றான "சல்ஃபருக்கு' மேற்காசியப் போரால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து "குளோரைடு' பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்குக் காரணமாகி இருக்கக்கூடும்.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,200 பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றில் சுமார் மூன்றரை லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் 3 லட்சம் பேர் பெண்கள்.
இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90%, தீப்பெட்டித் தயாரிப்பில் 80% இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
விருதுநகர் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் வழக்கம்போல பல விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. கோடை காலங்களில் பட்டாசுத் தயாரிப்பு முற்பகல் 11 மணிக்கு முன்பு முடிவடைய வேண்டும். வெடிமருந்துச் சட்டம் 2008-இன் படி, வெடிமருந்து கலக்கும் அறையில் இரண்டு ஊழியர்களுக்குமேல் இருக்கக் கூடாது. அந்த அறை, பட்டாசுத் தயாரிப்பு அறை, தயாரித்த பட்டாசுகளை சேமித்து வைக்கும் கிடங்கு ஆகியவை மூன்றும் குறிப்பட்ட இடைவெளி தொலைவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை எதுவுமே பின்பற்றப்படவில்லை.2012 செப்டம்பர் 5-ஆம் தேதி முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு, சில கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டதால் அடுத்த பத்தாண்டுகள் பெரும் விபத்து எதுவும் நிகழவில்லை. 2021 பிப்ரவரி 12-இல் அச்சன்குளம் மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் விபத்தில் 27 பேர்; 2023 அக்டோபர் 17-இல் ரங்கபாளையம் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் விபத்தில் 13 பேர்; 2024 பிப்ரவரி 17 ராமுதேவன்பட்டி ஃபயர் ஒர்க்ஸ் விபத்தில் 11 பேர்; 2024 மே 9-ஆம் தேதி செங்கமலம்பட்டி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் 12 பேர் என்று தொடர்ந்து, இப்போது ஞாயிறன்று நிகழ்ந்த விபத்தில் மீண்டும் 25 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோல நான்கு பட்டாசு விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி; ஆந்திர மாநிலம் காக்கிநாடா, தமிழ்நாட்டில் விருதுநகர், கேரளத்தில் திருச்சூர் என்று வெடிவிபத்துகளில் பலர் தீக்கிரையானது அதிர்ச்சி அளிக்கிறது.
தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதனாலேயே பாதுகாப்பான தொழிலாக அது மாற வேண்டிய கட்டாயம் உண்டு. எந்தவொரு பட்டாசு விபத்திலும் முறையாகக் கண்காணிக்காத அரசு அதிகாரிகள் பணியில் இருந்து அகற்றப்படுவதோ, தண்டிக்கப்படுவதோ இல்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
தேர்தலில் இந்தப் பட்டாசு விபத்துகள் பேசுபொருளாகக்கூட மாறவில்லை என்பதில் இருந்து நமது அரசியல்வாதிகளுக்கு மனித உயிர்களின் மீதுள்ள அக்கறை வெளிப்பட்டிருக்கிறது. எப்போதுதான் மாறப் போகிறது இவர்களின் பாராமுகம்? எப்போதுதான் தீரப்போகிறது இந்த அக்னிப் பசி?