முகப்பு
தலையங்கம்

சோளத்துக்கு மாறலாமே!

சோளம் குறைந்த அளவு பாசன வசதியுடன், எல்லாப் பருவத்திலும் விளைச்சலைத் தருகிறது.

Updated On : 3 ஜூலை 2026, 6:30 am IST
இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் சோளம்.
பகிர்:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண் துறை மிகப் பெரிய மாற்றம் (ஏற்றம்) அடைந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.68% அளவை எட்டி இருக்கிறது. விவசாயிகளின் வருமானம் ஏனைய துறையினரைவிட அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எல்லா விவசாயிகளும் ஒரேபோல வருவாய் ஈட்டாமல் இருப்பதையும், வேளாண் துறையின் வளர்ச்சி சந்தை விலையால் அதிகரித்திருக்கிறதே தவிர, உற்பத்தி காரணமாக அதிகரிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு தோட்டப் பயிர்கள், கால்நடை மற்றும் கோழி, மீன், இறால் வளர்ப்பு உள்ளிட்டவை காரணிகள். அதே நேரத்தில் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சி மிதமாகவும், மந்தமாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியில் பாசனப் பயிர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது ஆரோக்கியமான போக்கல்ல. ஏனென்றால், மொத்த வேளாண் பரப்பில் 85% பாசனப் பயிர்கள். அது மட்டுமல்லாமல், வேளாண்மையில் ஈடுபட்டிருப்போரில் பெரும் பகுதியினர் பாசனப் பயிர்களைப் பயிரிடுவோர்.

Advertisement

Advertisement

பாசனப் பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு அவற்றின் மகசூல் அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படாமல் இருப்பதே முக்கியமான காரணம். குறிப்பாக, பிரதான பாசனப் பயிர்களாகக் கருதப்படும் சோயாபீன்ஸ், பருத்தி உள்ளிட்டவை கடந்த சில ஆண்டுகளாக தேக்க நிலையில் அல்லது வளர்ச்சிக் குறைவை எதிர்கொள்கின்றன.இந்தப் பின்னணியில் விதிவிலக்காக இருப்பது சோளம்.

இந்தியாவின் பாசனப் பயிர்களில் மிக அதிகமான வளர்ச்சியைக் காண்பதுடன், குறிப்பிடத்தக்க உற்பத்தி வளர்ச்சியையும் சோளம் எட்டி இருக்கிறது. 2015}16இல் 2.26 கோடி டன் அளவில் இருந்து, 2025}26இல் 5.5 கோடி டன்னாக 9.3% ஆண்டு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது இந்தியாவின் சோள உற்பத்தி.

சோள உற்பத்தியின் மகசூல் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், பயிரிடப்படும் நிலப்பரப்பும் அதிகரித்திருப்பது முக்கியமான காரணம். தானியங்கள், பருப்பு வகைகளைவிட சோள உற்பத்தி இரட்டிப்பு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கோதுமையைவிட மூன்று மடங்கும், நெற்பயிரைவிட இரண்டு மடங்கும் அதிகரித்த வளர்சியை எட்டி இருக்கிறது இந்தியாவின் சோள உற்பத்தி.

சர்வதேச அளவில் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சோள உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை சோள உற்பத்தி மிக மந்தமாகத்தான் தொடங்கியது. 2007}08இல் திருப்புமுனை ஏற்பட்டு, சோளத்தின் உற்பத்தி 22% அதிகரித்தது என்றால், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 25% அதிகரித்த உற்பத்தியை எட்டியது. அதிலிருந்து சோளம் இந்தியாவின் முக்கியமான வேளாண் பயிரில் ஒன்றாக மாறியிருப்பது மட்டுமல்லாமல், ஹெக்டேருக்கு 4 டன் உற்பத்தி அளவைத் தொட்டிருக்கிறது.

சோள உற்பத்தியின் மிக முக்கியமான வெற்றி, நெற்பயிருக்கும் கோதுமைக்கும் வழங்கப்படுவதுபோல எந்தவிதமான ஊக்கமும் பெறுவதில்லை என்பது. அப்படி இருந்தும் அவை இரண்டையும்விட அதிகமாகவும், வேகமாகவும் உற்பத்தி வளர்ச்சி கண்டிருக்கிறது சோளம். அதற்கு நவீன புதுவகை சோள வித்துகள் முக்கியமான காரணம்.

ஏனைய பாசனப் பயிர்களைப்போல் அல்லாமல், இந்தியாவின் எல்லா வேளாண் பகுதிகளிலும் சோளம் வெற்றிகரமாகப் பயிரிடப்படுகிறது. காரீஃப், ராபி, கோடை என்று அனைத்துப் பருவங்களிலும் பயிரிட முடிகிறது. புவியியல் மற்றும் பருவங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் சோளத்தின் தன்மை அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

சோளப் பயிரின் விளைச்சல் இரட்டிப்பாகி இருக்கிறது என்றால், ஒட்டுமொத்த உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

அப்படி இருந்தும் நாம் இன்னும் சர்வதேச அளவிலான விளைச்சலை எட்டவில்லை. அதிக மகசூல் தரும் வித்துகளை அறிமுகப்படுத்துவதன்மூலம் இந்தியாவின் சோள உற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்து ஹெக்டேருக்கு 8 டன் அளவை எட்ட முடியும் என்று இந்திய வேளாண் அறிவியல் மையம் கருதுகிறது.

மேற்கு வங்கம் ஹெக்டேருக்கு 7 டன் விளைச்சலை எட்டி இருக்கிறது என்றால், ஆந்திரம் 6.5 டன், பிகார் 6.1 டன்னைத் தொட்டிருக்கின்றன. தெலங்கானாவும், தமிழ்நாடும் ஏறத்தாழ அதே அளவை எட்டியிருக்கின்றன. இந்த ஐந்து மாநிலங்களும் சேர்ந்து ஒட்டுமொத்த சோளப் பயிர் பரப்பில் 22% பங்கு வகிக்கின்றன. மொத்த உற்பத்தியில் 38% இந்த ஐந்து மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில் அதிக அளவில் சோளம் பயிரிடப்பட்டாலும், விளைச்சல் ஹெக்டேருக்கு 3 டன் அளவில்தான் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் சோளப் பயிர் பரப்பு பாசன வசதி 70% இருந்தும்கூட, உற்பத்தி குறைவாகவே இருக்கிறது; அதற்குக் காரணம் முறையான முனைப்பு இல்லாததுதான்.

நமது தேவைக்கு அதிகமாக இந்தியாவில் அரிசி, கோதுமை பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை இரண்டும் அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதுடன் மண் வளத்தைப் பாதித்து சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன. சோளம் குறைந்த அளவு பாசன வசதியுடன், எல்லாப் பருவத்திலும் விளைச்சலைத் தருகிறது. விவசாயிகளுக்குப் போதுமான வருமானத்தையும் நிரந்தரமான, தொடர்ச்சியான வேலைவாய்ப்பையும் வழங்கும் நிலையில் அதிகமாக தண்ணீர் உறிஞ்சும் நெற்பயிர்கள், கோதுமையிலிருந்து சோளத்துக்கு அவர்களை மாற்றுவது அரசின் முனைப்பாக இருக்க வேண்டும்.

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

இது செய்வதற்கு அருமையானது என்று சோா்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments