வீண் விவாதம்!
புலால் மறுத்தல் ஏற்புடையது; அதற்காக சத்துணவில் முட்டை மறுத்தல் என்பது தேவையற்ற சர்ச்சை.
இந்தியா அதிவேகமாக வளர்ச்சி காணும் நாடு என்பதும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 50% வளர்ச்சி அடைந்திருப்பதும் உலகமே பார்த்து வியக்கும் முன்னேற்றம். அதே நேரத்தில் உலகில் உள்ள ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய முரண்.
பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை உழைப்பு. ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் வளரும்போது, அவர்களது உழைக்கும் திறன் குறைவாகத்தான் இருக்க முடியும். அதை உணர்ந்துதான் காமராஜர் முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் இலவசக் கல்வியுடன் மதிய உணவுத் திட்டத்தையும், பின்பு எம்ஜிஆர் தலைமையில் அமைந்த அதிமுக அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் சத்துணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தின.
தமிழகத்தில் அதிகமான பேறுகால மரணங்களும், சிசு மரணங்களும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளும் ஏனைய மாநிலங்களைவிடக் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் சத்துணவுத் திட்ட வெற்றியைத் தொடர்ந்து, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நாடு தழுவிய அளவில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 'பி.எம். போஷான்' என்று அழைக்கப்படும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் உள்ள பள்ளிச் சிறுவர்கள் ஊட்டச் சத்துள்ள உணவு பெறுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசே சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றால், வேறு சில மாநிலங்களில் "இஸ்கான்' அமைப்பு 'அட்சயபாத்ரா' என்ற அமைப்பின் மூலம் சத்துணவை வழங்கி வருகிறது. "அட்சயபாத்ரா' அமைப்பு முற்றிலுமாக தாவர உணவு மட்டுமே வழங்கும் அமைப்பு என்பதால், அவர்களது சத்துணவுத் திட்டத்தில் முட்டை சேர்க்கப்படுவதில்லை. தாவர உணவாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பின் தாவர உணவுக் கொள்கை பல மாநிலங்களில் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
2019-இல் கர்நாடக மாநிலத்தில் "அட்சயா' அமைப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரச்னை முட்டை சேர்ப்பதல்ல; அந்த அமைப்பு வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றையும் தவிர்க்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. இப்போது, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சத்துணவில் முட்டை, அன்றாடம் இடம்பெறும் நிலையில், ஒருசில மாநிலங்களில் முட்டை தேவைதானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
சோயா, காட்டேஜ் சீஸ், பன்னீர், பருப்பு வகைகளில் புரதச் சத்து இருப்பதால், முட்டை தவிர்க்கப்பட வேண்டும் என்பது தாவர உணவாளர்களின் (வெஜிடேரியன்) வாதம். இது ஏதோ முட்டைக்கும், தாவர உணவுக்குமான பிரச்னையோ அல்லது புரதச்சத்து தொடர்பானதோ மட்டுமல்ல. சத்துணவுத் திட்டத்தில் 'புரதம்' இன்றியமையாதது என்பதால், அதில் முட்டை சேர்க்கப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
அதிக அளவு புரதம், ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்பு, அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவை முட்டையில் இருக்கின்றன. இந்தியா முழுவதும் பரவலாகக் கடுமையான புரதக் குறைபாடு காணப்படுகிறது. அதன் காரணமாக, குழந்தைகளில் மட்டுமல்லாமல், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் சராசரிக்கும் குறைவான உடல் ஆரோக்கியம் காணப்படுவதாகப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
தாவர புரதத்துக்குப் பதிலாக முட்டையைப் பரிந்துரைப்பதற்கான காரணம் அவற்றைவிட சத்துணவின் தரத்தையும், அளவையும் சீராக வழங்க முட்டைதான் சரியான தேர்வு என்பதால் அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
முட்டையில் கலப்படம் செய்ய முடியாது; பருப்பு வகைகளைப்போலக் குறைவாகப் பயன்படுத்தி ஏமாற்ற முடியாது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஆங்காங்கே உள்ளூரிலேயே வாங்க முடியும். சுலபமாக வேக வைக்க முடியும்; எடுத்துச் செல்ல முடியும். புரதத்தின் அளவு என்பது முட்டைக்கு முட்டை மாறுபடாது என்பதால், அதன் அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சத்துணவுக் கூடங்களில் சமைப்பதாக இருந்தாலும், ஒரு நகரத்தின் தேவைக்குப் பொதுவான இடத்தில் மொத்தமாக சமைப்பதானாலும், முட்டை அல்லாத தாவர உணவின் புரதச் சத்தின் அளவும், தரமும் வேறுபடுவதைத் தவிர்க்க இயலாது. 2015 கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் பல இடங்களில் குறைந்தபட்ச ஊட்டச்சத்துத் தரம்கூட இல்லாமல் சத்துணவு வழங்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சத்துணவில் முட்டையை இணைப்பது என்பது எல்லா விதத்திலும் தரத்தையும், அளவையும் உறுதிப்படுத்தும். முட்டை சாப்பிடாத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். அதற்காக சத்துணவில் முட்டை தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
சத்துணவு என்பது பள்ளிச் சிறுவர்களின் புரதத் தேவையை ஈடுகட்டி, அவர்கள் திறம்படக் கல்வி கற்பதை உறுதிப்படுத்துவதற்காகவே தவிர, உணவுப் பழக்கம் தொடர்பான சர்ச்சைக்கானதல்ல. புலால் மறுத்தல் ஏற்புடையது; அதற்காக சத்துணவில் முட்டை மறுத்தல் என்பது தேவையற்ற சர்ச்சை!
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்து
தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
திருக்குறள் (எண் 511) அதிகாரம்: தெரிந்து வினையாடல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.