முகப்பு
தலையங்கம்

உளவியல் ஆலோசனை அவசியம்!

இந்தியாவிலேயே கணவனை இழந்த, மண முறிவு ஏற்பட்ட, திருமணமாகாத அல்லது பிரிந்து தனித்து வாழும் மகளிரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் மிக அதிகமாக இருக்கிறது.

Updated On : 26 ஜூன் 2026, 7:22 am IST
பகிர்:

இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய முதன்மை மாநிலமாகத் தமிழகம் உயர்ந்திருக்கிறது என்கிற கருத்து உண்மையல்ல என்பதைப் பல குறியீடுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சிசு மரணங்கள் குறைந்திருக்கின்றன என்பதையும், ஊட்டச் சத்தில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதையும் நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். அதே நேரத்தில், அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையும், குறைந்து வரும் இளைஞர்களும் வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவிலேயே கணவனை இழந்த, மண முறிவு ஏற்பட்ட, திருமணமாகாத அல்லது பிரிந்து தனித்து வாழும் மகளிரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் மிக அதிகமாக இருக்கிறது. தேசிய அளவிலான சராசரி 3.6% என்றால், தமிழகத்தில் "சிங்கிள் உமன்' எனப்படும் தனித்து வாழும் மகளிர் விகிதம் 6.8%.

நகரமயமாதலும், ஆயுள் நீட்டிப்பும் காரணமாக தனித்து வாழும் மகளிரின் முதுமைக் காலம் மிகப் பெரிய சவால்களை சந்திக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தனிமையும், சமூகத்தால் ஒதுக்கப்படுதலும் தனித்து வாழும் மகளிர் முதுமையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்ûனைகள். அவர்கள் முதுமையை நோக்கி நகர நகரப் பல உளவியல் ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisement

Advertisement

தனித்து வாழும் மகளிர் மட்டுமல்ல, குடும்பத் தலைவியாக வாழும் பெண்களும் தமிழகத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று அண்மையில் வெளியாகியிருக்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2024}ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத் தலைவிகளில் 13% தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, நாளொன்றுக்கு சராசரியாகத் தமிழகத்தில் திருமணமான ஏழு குடும்பத் தலைவிகள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. 2024}இல் மொத்தம் 2,821 பெண்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.

தேசிய அளவிலும் தற்கொலையால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களில் 48.9% குடும்பத் தலைவிகள். அதாவது, 45, 245 தற்கொலைகளில் 22,113 குடும்பத் தலைவிகள். கணவர், குழந்தைகள், சொந்த பந்தம் என்று இருந்தும், பெரும்பாலும் குடும்ப உறவுகள் துண்டிக்கப்படாத இந்திய சூழலிலும் குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, குடும்பப் பிரச்னைகள்தான் குடும்பத் தலைவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கத் தூண்டுகின்றன என்று தெரிகிறது. தேசிய அளவில் குடும்பப் பிரச்னைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத் தலைவிகளின் விகிதம் 33.5% என்றால், தமிழகத்தில் அந்த விகிதம் 38.8%; நம்மைவிடக் கல்வியிலும், வாழ்க்கைத் தரத்திலும், பொருளாதாரத்திலும் குறைந்த நிலையில் இருக்கும் மாநிலங்களில்கூட இந்த அளவுக்கு குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை.

தேசிய அளவில் உடல்நலக் குறைவு காரணமாக, வேதனையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத் தலைவியரின் விகிதம் 18% மட்டுமே. ஆனால், அதிக அளவில் மருத்துவ வசதியும், சமூகப் பாதுகாப்பும் உள்ள தமிழ்நாட்டில் இந்த விகிதம் 29.3% என்று காணப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மகளிர் பெரும்பாலும் குறைந்தது இடைநிலைக் கல்வி பெற்றிருந்தாலும்கூட இந்த நிலைமை காணப்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது.

நான்காண்டுகளாக, 2021 (3,221), 2022 (3,093), 2023 (3,080), 2024 (2,821) என்று இந்த எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது என்பது ஆறுதலான செய்தி. அடுத்த இரண்டு ஆண்டுகளும் குறைந்திருக்கும் என்று எதிர்பார்ப்போம். ஆனாலும்கூட, தேசிய அளவில் இல்லத்தரசிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பது மிகப் பெரிய பின்னடைவு.

முன்புபோல, வரதட்சிணைக் கொடுமையால் மகளிர் உயிரை மாய்த்துக் கொள்வது குறைந்திருக்கிறது. ஆனால், கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனித்த குடும்பமாக இருந்தாலும் இல்லத்தரசிகள் தங்களது உணர்வுகளையும், மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது தற்கொலை உணர்வைத் தூண்டுகின்றன என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கணவரின் மது அருந்தும் பழக்கம், அளவுக்கதிகமாக ஆடம்பரப் பொருள்களை வாங்குவதால் ஏற்படும் தவணைத் தொகை தொந்தரவு, தொலைக்காட்சித் தொடர்கள் ஏற்படுத்தும் எதிர்மறை சிந்தனை உள்ளிட்டவையும்கூடக் காரணிகள் என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. தங்களது குடும்பப் பங்களிப்புக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதும், கல்வி கற்றிருந்தாலும் கணவன் உள்ளிட்ட பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயமும் ஒரு சிலரின் மன அழுத்தத்துக்கான காரணிகள் என்று தெரிகிறது.

அதிக அளவில் மகளிருக்கான உளவியல் ஆலோசனை மையங்கள் திறக்கப்படுவதும், "சிநேகா' போன்ற அமைப்புகளின் பரவலான சமூகப் பணியும்தான் இந்தப் போக்குக்கான தீர்வாக இருக்கும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து தன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

திருக்குறள் (எண் 422) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments