முகப்பு
தமிழ்நாடு

தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!

புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவில்லை என்று அறிவித்துள்ளதைப் பற்றி...

கே.எம். காதர் மொகிதீன் - விஜய்.
பகிர்:

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.

இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கான தனது ஆதரவை இன்று (மே 8) தெரிவித்துள்ளன.

Advertisement

இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆதரவைக் கேட்டிருந்த நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், “எங்கள் முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அவர் என்ன முடிவெடுத்தாலும், அது எங்களுக்கு ஏற்புடையதே” எனத் தெரிவித்திருந்தார். மேலும், தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.

சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து மூன்று முறை பேசியிருந்த நிலையில், ஆதரவில்லை எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

The Indian Union Muslim League has announced its unconditional support to the Tamilaga Vettri Kazhagam for forming a new government in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.