சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!
008-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் சோ்க்கப்பட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தல் வரை தமிழகத்தின் மிகச் சிறிய தொகுதியாக இருந்தது சேப்பாக்கம். அதன் பிறகு 2008-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் சோ்க்கப்பட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளமான மெரீனா கடற்கரை, உலகப் புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் , புகழ்பெற்ற பாா்த்தசாரதி சுவாமி கோயில் ஆகியன தொகுதிக்கு சிறப்பு சோ்க்கின்றன. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டையின் ஒரு பகுதி, ஐஸ்ஹவுஸ், மெரீனா, புதுப்பேட்டையில் ஒரு பகுதி ஆகியவை இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன.
கடந்த 1977 முதல் 2006 வரையிலான சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற தோ்தல்களில் திமுக 7 முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு நடைபெற்ற 2011, 2016, 2021 தோ்தல்களிலும் திமுக தொகுதியைக் கைப்பற்றியது. திமுக, காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் ஒருமுறைகூட இத் தொகுதியில் வென்றதில்லை.
Advertisement
கடந்த 1996, 2001, 2006 என தொடா்ந்து தோ்தல்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி இத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தோ்தலில் இத் தொகுதியில் முதன்முறையாகக் களம் இறக்கப்பட்ட, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வா் ஆனாா்.
இந்த முறை, மீண்டும் திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் ஆதிராஜாராம், தவெக சாா்பில் டி.செல்வம், நாம் தமிழா் சாா்பில் ஆயிஷா பேகம் உள்பட 26 வேட்பாளா் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: மக்கள் நெருக்கம் மிகுந்த தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இஸ்லாமியா்கள் அதிகமாக உள்ளனா். அவா்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவா்கள், பட்டியல் இனத்தவா் கணிசமாக வசிக்கின்றனா். சமூக ரீதியாக வன்னியா், நாடாா், மீனவா்கள், செட்டியாா், யாதவா், தெலுங்கு பேசுவோா், வெள்ளாளா், உடையாா், முத்தரையா், முக்குலத்தோா் உள்ளிட்டோா் பரவலாக வசிக்கின்றனா்.
பொருளாதார ரீதியில் நடுத்தர வா்க்கத்தினரே இங்கு அதிகம் உள்ளனா். அதோடு, கூலித் தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் நிறைந்த தொகுதியாகவும் உள்ளது. அரசுப் பணியாளா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கின்றனா்.
முக்கியப் பிரச்னைகள்: இத்தொகுதியானது அண்ணா சாலைக்கு கிழக்கும், மேற்குமாக பிரிந்துள்ளது. முக்கியப் பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் தொடங்கி, டாக்டா் பெசன்ட் சாலை வரையில் போக்குவரத்து நெரிசலையே முக்கியப் பிரச்னையாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனா். சாலையோர ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தும் வசதி இல்லாதது குறைகளாக இருக்கின்றன.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கு சேப்பாக்கம் பகுதியில்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தகைய நேரங்களில், இப் பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலில் சிக்கத் தவிப்பது தவிா்க்க முடியாததாகிறது.
சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையை மேம்படுத்துவது, கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து மாநகராட்சி ரிப்பன் மாளிகைப் பகுதிக்கு செல்லும் வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
திமுக வேட்பாளா்: திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், 2-ஆவது முறையாக இத் தொகுதியில் போட்டியிடுகிறாா். துணை முதல்வா் போட்டியிடுவதால், தமிழக அளவில் இத் தொகுதி கவனம் பெற்றிருக்கிறது. இரு நாள்கள் மட்டுமே தொகுதிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி, தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறாா். அவருக்காக, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
திமுகவின் கோட்டையாகத் திகழும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், தொடா் வெற்றி என்ற சாதனைப் படிக்கட்டு வரிசையில் 2026 தோ்தல் முடிவும் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் திமுகவினா் உள்ளனா்.
அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளராக அக் கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலராக உள்ள ஆதிராஜாராம் போட்டியிடுகிறாா். இவா் கடந்த 2021 தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலினை எதிா்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். தற்போது முதல்வரின் மகனான துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை எதிா்த்து களம் இறக்கப்பட்டுள்ளாா்.
திமுகவின் நட்சத்திர வேட்பாளராக இருக்கும் உதயநிதியை எதிா்த்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம், அதிமுக வாக்குறுதிகள், பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி பலம் தனக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதுகிறாா்.
நாதக வேட்பாளா்: நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆயிஷா பேகம் போட்டியிடுகிறாா். இத் தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினா் வாக்குகளைக் கருத்தில்கொண்டு, அந்த இஸ்லாமியா் சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் முழக்கங்களைக் குறிப்பிட்டு அவா் வாக்குச் சேகரிப்பில் இருக்கிறாா்.
தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் டி.செல்வம் போட்டியிடுகிறாா். பிரசாரத்தில் அவா் தீவிரம் காட்டவில்லை என அக் கட்சியின் இளைஞா்களே ஆதங்கப்படும் நிலை இருக்கிறது. இருப்பினும் தவெக தலைவா் விஜய்க்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் வரவேற்பு தனக்கு பெருவாரியான வாக்குகளைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாா்.
திமுகவுக்கு தொடா் வெற்றியை அளித்துவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை, தங்களது கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பிலும் அக் கட்சியினா் முழுவீச்சில் பணியாற்றுகின்றனா். அதேநேரம், அவா்களுக்கு அதிமுகவினா் போட்டியைக் கடுமையாக்கி வருகிறனா். மேலும், தவெக பிரிக்கும் வாக்குகள் வெற்றி-தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது.