ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!
இடைத்தேர்தல்கள் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த தொகுதி ஆர்.கே.நகர்.
இடைத்தேர்தல்கள் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த தொகுதி ஆர்.கே.நகர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் அமைந்துள்ள இத்தொகுதி பலமுறை மறுசீரமைப்புக்கு உள்படுத்தப்பட்டபோதும் தொகுதி பெயரில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், நேதாஜி நகர், பழைய வண்ணாரப்பேட்டையின் ஒரு பகுதி, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மூலம் மீன்பிடித் தொழில், படகு கட்டும் தொழில், பனிக்கட்டி உற்பத்தி ஆலைகள், தின்பண்டங்கள், பிஸ்கட், மிட்டாய் தயாரிப்பு, 200-க்கும் மேற்பட்ட பருப்பு ஆலைகள், பாத்திரங்கள் தயாரிப்பு தொழில், மாத்திரை தொழிற்சாலை, பீடி சுற்றும் தொழில், இரும்பு பட்டறைகள் சிறு, குறுந்தொழில்கள் அதிக அளவில் உள்ளன. தண்டையார்பேட்டை ரயில்வே பணிமனை இத்தொகுதியில் அமைந்துள்ளது.
Advertisement
கடந்த 1977-ஆம் ஆண்டுமுதல் இத்தொகுதியில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் 7 முறை அதிமுக, 3 முறை திமுக, 2 முறை காங்கிரஸ் கட்சி, ஒரு முறை அமமுக வெற்றி பெற்றுள்ளன.
பரபரப்புக்கு வித்திட்ட இடைத்தேர்தல்கள்: கடந்த 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்வரான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இதனால் பதவியை இழக்க நேரிட்டது. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இதன்பிறகு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவருக்காக, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பி.வெற்றிவேல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து 2015-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 1,60,432 வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016- பேரவைத் தேர்தலிலும் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் மறைந்ததையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுக பிளவுபட்டு இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திலும், இ.மதுசூதனனும் இரட்டை மின்விளக்குச் சின்னத்திலும் போட்டியிட்டனர். வாக்களிக்க பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். மீண்டும் 2017 டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி.தினகரன் 89,013 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவ்வாறு 2 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் பரபரப்பை எதிர்கொண்ட தொகுதி இது.
இந்தமுறை, திமுக சார்பில் ஜே.ஜே.எபினேசர், அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், நாதக சார்பில் வெண்ணிலா தாயுமாணவன் , தவெக சார்பில் என்.மரிய வில்சன் உள்பட 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சமூக நிலவரம்: மீனவர், ஆதி ஆந்திரர், பட்டியலினத்தவர், வன்னியர், நாடார், செட்டியார், நாயுடு, முக்குலத்தோர், பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோர் என பல்வேறு சமூகத்தினரும் கலந்து வாழும் இத்தொகுதியில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களும் கணிசமாக வாழ்கின்றனர். சென்னை மாநகரில் நெரிசலான கட்டமைப்புகள் கொண்ட இத்தொகுதியில் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.
முக்கிய பிரச்னைகள்: இத்தொகுதி மக்களின் அரை நூற்றாண்டு கால கோரிக்கையான கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் இதுவரை அமைக்கப்படவில்லை. துறைமுகத்தில் இருந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் பெட்ரோலிய எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகளால் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் பாழாகிவிட்டது. தற்போது புதிய குழாய்கள் அமைத்த பிறகும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காசிமேடு துறைமுகத்தில் அடிப்படை வசதிகள், புதை சாக்கடை குழாய்களில் பழுது ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு இத்தொகுதிக்கு தீராத தலைவலியாக இருக்கிறது. இக்கிடங்கை நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திமுக வேட்பாளர்: திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான ஜே.ஜே. எபினேசர் மீண்டும் போட்டியிடுகிறார். மத சிறுபான்மையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பெரும்பாலான வாக்குகள் திமுகவுக்கு பலமாக உள்ளன. மேலும் தொகுதி முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள், திமுக அரசின் இலவச திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள்
அவருக்கு சாதகமாக உள்ளன. கடந்த முறை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், அதே அளவு வாக்குகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ் கட்சியின் மாவட்டச் செயலர். கடந்த 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொகுதியில் பல்வேறு பணிகளைச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார்.
இடைத்தேர்தல்களின்போது அளித்த வாக்குறுதிகளை முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றியதையும், தொகுதியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அதிமுகதான் என்பதையும் பிரசாரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்ற அனுதாபமும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் மற்றும் தனிப்பட்ட ஆதரவும் கட்சியினரை சுறுசுறுப்பாக வேலை செய்ய வைத்துள்ளது. அதோடு, பாஜக, அமமுக ஆதரவு கூடுதல் பலமாக உள்ளது.
நாதக வேட்பாளர்: வெண்ணிலா தாயுமானவன் முதல்முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். முதுநிலை பட்டதாரியான இவர், இப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க தொடர்ந்து போராடி வருகிறார் என்பதால் மாற்றத்தை விரும்பும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. சீமானின் நேரடி பிரசாரம், வெண்ணிலாவின் அதிரடி பேச்சு உள்ளிட்டவை வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற நிலை உள்ளதைப் பார்க்க முடிகிறது.
தவெக வேட்பாளர்: என்.மரிய வில்சன் தொகுதிக்கு அறிமுக இல்லாதவர் என்பது இவரது பலவீனம். மேலும் கட்சியின் கட்டமைப்பும் போதுமானதாக இல்லை. தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் கட்சி தலைவர் விஜய்க்கு இருக்கும் இளைஞர்கள், பெண்களின் அபரிதமான வாக்கு நிச்சயம் கிடைக்கும் என தவெகவினர் உறுதியாக நம்புகின்றனர்.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் திமுக, அதிமுக இடையேதான் போட்டி கடுமையாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுகவும், தங்கள் வசம் உள்ள தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முû னப்பில் திமுகவும் "தேர்தல் ஓட்டப்பந்தயத்தில்' ஒருவரையொருவர் முந்திச் சென்று கொண்டிருக்கின்றனர். வெற்றிக் கோப்பை யாருக்கு என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.