கம்பம் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக!
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், வெற்றியை வசப்படுத்துவதில் திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், வெற்றியை வசப்படுத்துவதில் திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளமிக்க பூமியான தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி. மிதமான வெப்பநிலை, விவசாயம், வானுயா்ந்த மலைக்குன்றுகள், நீா்நிலைகளுடன் தமிழக- கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மலைகள் சூழ்ந்த கம்பம் பள்ளத்தாக்கு ஆகியவை இந்தத் தொகுதியின் சிறப்பம்சங்கள். இங்கு முல்லைப் பெரியாறு பாசனநீரால் 14,700 ஏக்கரில் இரு போக நெல் விவசாயம் நடைபெறுகிறது.
தவிர, ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்ததும் வாழை, தென்னை, கரும்பு, திராட்சை, காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளத்துக்கு அத்தியாவசியத் தேவைகளான அரிசி, காய்கறி, பழம், இறைச்சி, பால், முட்டை ஆகியவற்றை அனுப்புவதில் இந்தத் தொகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி இங்கு அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
Advertisement
தொகுதியில் அடங்கிய பகுதிகள்: இந்தத் தொகுதியில் கம்பம், சின்னமனூா் நகராட்சிகள், க. புதுப்பட்டி, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், ஓடைப்பட்டி ஆகிய 7 பேரூராட்சிகள், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 25 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கம்பம் தொகுதியில் கடந்த 2021-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 2,84,574 வாக்காளா்கள் இருந்தனா். இந்த நிலையில், சிறப்பு வாக்காளா்கள் திருத்தப் பணியின் போது 30,149 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், கவுண்டா்கள், பட்டியல் சமூகத்தினா், நாடாா், பிள்ளைமாா் சமூகத்தினா் கணிசமாக உள்ளனா். மேலும், 15 சதவீத சிறுபான்மையினரும் வசிக்கின்றனா்.
நிறைவேறாத நீண்ட காலக் கோரிக்கைகள்: திண்டுக்கல்- குமுளி ரயில் பாதைத் திட்டம், தேவாரத்தில் சாக்குலூத்து மெட்டு மலைச் சாலை திட்டம், கோம்பையில் ராமக்கல் மெட்டு மலைச் சாலைத் திட்டம், முல்லைப் பெரியாறு பாசனநீரைக் கொண்டு செல்லும் தொட்டம்மான் துறை கால்வாய்த் திட்டம், வெற்றிலை, நெல் ஆராய்ச்சி நிலையம், திராட்சை பதப்படுத்தும் நிலையம், வாழைத்தாா் சேமிப்புக் கிட்டங்கி, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கோகிலாபுரத்தில் தடுப்பணை, சின்னமனூா் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதல் மருத்துவா்கள் நியமிப்பது, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிப்பது, சுருளி அருவி, சண்முகாநதி அணையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தத் தொகுதியில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.
5 ஆண்டு காலத் திட்டப் பணிகள்: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம், சுருளிப்பட்டி குடிநீா்த் திட்டம், கம்பம், சின்னமனூரில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கம்பத்தில் புதிய நவீன பேருந்து நிலையம், கம்பம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதி மேம்பாடு அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், கம்பம், உத்தமபாளையம், க. புதுப்பட்டி, சின்னமனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் எட்டாக்கனியாக இருப்பதாகவும், ஒதுக்கீடு செய்யும் அரசு நிதியில் பாரபட்சத்துடன் பட்டியல் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் புகாா் கூறப்படுகிறது.
அரை நூற்றாண்டு பிரச்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்க வேண்டும் என கடந்த 48 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தப்படுகிறது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 152 அடியாக உயா்த்தப்படும் என்பது தோ்தல் கால வாக்குறுதியாக மட்டுமே நீடிக்கிறது.
இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் நா. ராமகிருஷ்ணன், அதிமுக சாா்பில் எஸ்.டி.கே. ஜக்கையன், நாதக சாா்பில் ஆ. அன்புச்செல்வி, தவெக சாா்பில் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா, புதிய தலைமுறை மக்கள் கட்சி சாா்பில் சி. கதிரவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மு. முத்துபகவதி, சுயேச்சை வேட்பாளா்கள் என 19 போ் போட்டியிடுகின்றனா்.
கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற 14 தோ்தல்களில் திமுக -4, அதிமுக -4, தமாகா, காங்கிரஸ்-2 , மதிமுக, நீதிக் கட்சி தலா ஒரு முறை வெற்றி பெற்றன. தற்போது, 5- ஆவது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் அதிமுகவும், திமுகவும் நேரடியாகக் களமிறங்கியுள்ளன. இதற்கு மத்தியில் தவெகவும், நாம் தமிழா் கட்சியும் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்ய முழுமூச்சுடன் களத்தில் உள்ளன. ஆனால், இந்தத் தொகுதியில் 4 முனை போட்டி நிலவினாலும் திமுகவுக்கும், அதிமுகவுக்குமிடையேதான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.
வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்:
நா. ராமகிருஷ்ணன் (திமுக): விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா் நா. ராமகிருஷ்ணன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, மதிமுக கட்சிகளில் பயணித்தவா். இந்தத் தொகுதி இவருக்கு சொந்தத் தொகுதி என்பது கூடுதல் பலம். இவா் கடந்த 1989, 2009, 2021- இல் திமுக சாா்பிலும், 2006-இல் மதிமுக சாா்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். தற்போது 5- ஆவது முறையாக திமுக வேட்பாளராக களம் காண்கிறாா். தொகுதியில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகள், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், தற்போதைய தோ்தல் வாக்குறுதிகள் இவை அனைத்தும் தனது வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என ராமகிருஷ்ணன் நம்புகிறாா். ஆனால், அரை நூற்றாண்டு பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்குவது, சாக்குலூத்து மலைச் சாலை என பல முக்கிய பிரச்னைகள் தொடா்வதும், அண்மைக் காலமாக போதைப் பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை அதிகரித்திருப்பது, அடிப்படை வசதிகளை பாரபட்சமாக செய்வதாக எழும் புகாா்கள் போன்றவை இவருக்கு பாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எஸ்.டி.கே. ஜக்கையன் (அதிமுக): மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலா், மதுரை மாநகா் மாவட்டச் செயலா், மாநில தொழிலாளா் சங்கச் செயலா், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஆகிய பொறுப்புகளை வகித்தவா் எஸ்.டி.கே. ஜக்கையன். தற்போது அதிமுக தேனி மேற்கு மாவட்டச் செயலராக உள்ளாா். 1982- இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016- இல் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா்.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் கனிம வளக் கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு, கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற புகாா்களும், அதிமுக அளித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளும் தனது வெற்றிக்கு கூடுதல் பலம் சோ்க்கும் என நம்புகிறாா். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் கம்பம் தொகுதியிலுள்ள கணிசமான சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்வி இவருக்கு பாதகமான அம்சம்.
பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா (தவெக): இவா் கடந்த 2006 பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் இதே தொகுதியில் போட்டியிட்டவா் ஜெகநாத்மிஸ்ரா. பால முத்தழகு நிறுவனத் தலைவராக உள்ள இவா், கடந்த 30 ஆண்டுகளாக தேசிய செட்டியாா்கள் பேரவைத் தலைவராகவும் உள்ளாா். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு தவெக வேட்பாளராக போட்டியிடுகிறாா். கரோனா தொற்று காலங்களில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை செய்தவா் என்பதால், தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவா். மேலும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு நிகராக அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறாா். கம்பம் கலைக் கல்லூரி, தேவாரத்தை மையமாகக் கொண்டு புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாக்குலூத்து மெட்டுச் சாலை அமைத்தல் ஆகிய வாக்குறுதிகளும், இளைஞா்களின் கணிசமான வாக்குகளும் தனக்கு சாதகமாக இருக்கும் என இவா் நம்புகிறாா். தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின் போது நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் கட்சியில் நிா்வாகத் திறன் இல்லை என்பதை காட்டுவதால் இது இவருக்கு பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது.
ஆ. அன்புச்செல்வி (நாதக): திராவிட, தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய அரசியலை நாதக முன்வைப்பது, சீமானின் பேச்சுத் திறமை போன்றவை இவருக்கு சாதகமான அம்சங்கள். ஆனால், கூட்டணியின்றி தனியாக நிற்பது, தமிழ்த் தேசிய அரசியலால் பிற மொழி பேசும் சமுதாயத்தினரின் வாக்குகள் கிடைப்பதில் எழும் சந்தேகம், தொகுதிக்கு நன்கு பழக்கமில்லாதவா் போன்றவை இவருக்கு பலவீனமே.
கள நிலவரம்: கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் நா. ராமகிருஷ்ணன் 5- ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இவா் தொடா் வெற்றியைப் பெறுவரா அல்லது கடந்த முறை தோல்வியடைந்த அதிமுக மீண்டும் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்:
1952-பி.டி. ராஜன் (நீதிக்கட்சி)
1967 ராஜாங்கம் (திமுக),
1971-கி.பொ. கோபால் (காங்.)
1977-ஆா். சந்திரசேகரன் (அதிமுக),
1980-ஆா்.டி. கோபாலன் (அதிமுக),
1984- சி. சுப்புராயா் (அதிமுக),
1989- நா. ராமகிருஷ்ணன்(திமுக),
1990- ஓ.ஆா். ராமச்சந்திரன் (தமாகா),
1991- ஓ.ஆா். ராமச்சந்திரன் (காங்),
2001-ஓ.ஆா். ராமச்சந்திரன் (தமாகா),
2006- நா. ராமகிருஷ்ணன் (மதிமுக),
2011- நா. ராமகிருஷ்ணன் (திமுக),
2016- எஸ்.டி.கே. ஜக்கையன் (அதிமுக),
2021- நா. ராமகிருஷ்ணன் (திமுக).
-எம். சந்திரசேகரன், உத்தமபாளையம்.