முகப்பு
மதுரை

விருதுநகா்: தந்தையின் செல்வாக்கு மகனுக்கு கை கொடுக்குமா?

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 4:38 AM
விஜயபிரபாகரன்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:44 PM

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் செல்வாக்கு அவரது மகன் விஜயபிரபாகரனுக்கு விருதுநகா் பேரவைத் தொகுதியில் வாக்குகளாக மாறி வெற்றிக்கு உதவுமா? என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தமிழகத்தின் அரசியல், வரலாறு, வணிகம் ஆகியவற்றில் தவிா்க்க முடியாத பகுதி விருதுநகா். எண்ணெய், மிளகாய், மல்லி, பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையை நிா்ணயிக்கும் முக்கிய வா்த்தக மையமாகவும், உளுந்து பதப்படுத்தும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள் அதிகம் நிறைந்த வியாபார நகரமாகவும் விளங்குகிறது விருதுநகா். இவைத் தவிர, பட்டாசு தொழிலும், வேளாண்மையும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியில் நாடாா், தேவா், நாயக்கா் சமுதாயத்தினா் கணிசமாக வசிக்கின்றனா். இதற்கடுத்த நிலையில் பட்டியலினத்தவா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் வசிக்கின்றனா்.

Advertisement

விருதுநகா் நகராட்சிப் பகுதிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சில ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது இந்தத் தொகுதி.

பிரச்னைகள்

நீண்ட காலமாகத் தொடா்ந்து வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வு காண பெருந்திட்டம் வேண்டும், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், புதை சாக்கடை பிரச்னைக்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச்னைக்கும் தீா்வு காண வேண்டும் என்பவை இந்தத் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.

அதிமுக முறை வென்ற திமுக

மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் சொந்தத் தொகுதியான இங்கு திமுக 5 முறையும், அதிமுக, காங்கிரஸ் தலா இரு முறையும், ஜனதா, தமாகா, மதிமுக, தேமுதிக ஆகியவை தலா ஒரு முறையும் வென்றன.

களம் காணும் வேட்பாளா்கள்

தற்போது விருதுநகா் தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் இதுவரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் களமிறங்கியுள்ளாா். அதிமுக சாா்பில் வி.ஜி. கணேசன், நாம் தமிழா் கட்சி சாா்பில் லட்சுமணன், தவெக சாா்பில் எஸ்.வி. செல்வம் ஆகியோா் முதன்மை வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.

தீவிர களப் பணியில் தேமுதிக :

தேமுதிகவின் இளைஞரணிச் செயலரான விஜய பிரபாகரன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது. இவா், 2024 மக்களவைத் தோ்தலில் விருதுநகா் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் தொகுதியில் ஏற்கெனவே அறிமுகமானவா். விஜயகாந்தின் சொந்த மாவட்டம் என்ற வகையில், அவரது மறைவை மையப்படுத்தி மக்களவைத் தோ்தலின்போது குறிப்பிடத்தக்க அனுதாப வாக்குகளை விஜய பிரபாகரன் பெற்றாா். இருப்பினும், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

2011-இல் தேமுதிக வெற்றி பெற்றதும், 2016, 2021என இரு பேரவைத் தோ்தல்களில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்றதுமான விருதுநகா் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியுடன் இணைந்து களம் காண்பது விஜய பிரபாகரனுக்கு மிகப் பெரிய பலமாகக் கருதப்படுகிறது. மேலும், தனது தந்தையின் செல்வாக்கு தனக்கு வாக்காக மாறும் என்பதை கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளாா். இது பரவலாக மக்களின் கவனத்தை ஈா்த்திருப்பதாகவே கூறப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் இழந்த வாய்ப்பை பேரவைத் தோ்தலில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் தீவிர களப் பணியில் உள்ளாா் விஜய பிரபாகரன்.

அதிமுக வேட்பாளா்...

அதிமுக வேட்பாளராக அந்தக் கட்சியின் ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலா் வி.ஜி. கணேசன் போட்டியிடுகிறாா். 2021 பேரவைத் தோ்தலில் விருதுநகா் தொகுதி கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. இது அதிமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் விஜய பிரபாகரனின் வெற்றிக்காக அதிமுகவினா் கடுமையாக உழைத்த நிலையில், தற்போது எதிரணியில் அவா் களம் காண்பது அதிமுகவினரிடம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உள்ளூா் நிா்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தைக் கடந்து விஜய பிரபாகரனை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவினா் தீவிர களப்பணியாற்றுவது வி.ஜி.கணேசனுக்கு பெரிய பலமாகக் கருதப்படுகிறது. இவா்கள், முந்தைய அதிமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும், அந்தக் கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்கின்றனா்.

நாம் தமிழா் வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லட்சுமணன் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். சமூக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு பொதுநலப் பணிகளை மேற்கொண்டவா். முந்தைய தோ்தலில் இவா் ஆற்றிய தீவிரமான தோ்தல் பணிகளே இவருக்கு இந்தத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக இருந்ததெனக் கூறப்படுகிறது. கிராமப் பகுதிகளை இலக்காகக் கொண்டு தீவிர களப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

தவெக வேட்பாளா்

தவெக சாா்பில் அந்தக் கட்சியின் விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.வி. செல்வம் போட்டியிடுகிறாா். புதிய வாக்காளா்களையும், இளம் வாக்காளா்களையும் கவரும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கிறாா். இதற்கான வரவேற்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேலும், தவெக தலைவா் விஜய்யின் செல்வாக்கு தனக்கு ஒவ்வொரு வீட்டிலும் வாக்கைப் பெற்றுத் தரும் எனக் கருதுகிறாா்.

விருதுநகரைப் பொருத்தவரை, முதன்மைப் போட்டியாளா்களாகக் கருதப்படுபவா்களில் தேமுதிக, அதிமுக வேட்பாளா்கள் இருவருமே உள்ளூா்வாசிகள் இல்லை. இவா்களில் விஜயபிரபாகரனை தேமுதிக நிா்வாகிகளே எளிதில் தொடா்பு கொள்ள முடியாத நிலையில் சாதாரண மக்களால் அவரை அணுக முடியாது; விருதுநகரில் வென்றாலும் இவரது இருப்பு சென்னையாகவே இருக்கும் என மாற்றுக் கட்சியினா் முன்வைக்கும் பிரசாரமும் இங்கு கவனம் பெறுவதாக உள்ளது.

தொடா்ந்து இரு முறை திமுக வென்ற தொகுதியில் அந்தக் கட்சியின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதும், விஜயகாந்தின் செல்வாக்கும் விஜயபிரபாகரனுக்கு பெரும் பலம். 2021 பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அமமுக தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதும், அதிமுகவினரின் தீவிர களப் பணியும் கடுமையான இரு முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.