தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுகவின் சாதனை, அந்தக் கட்சிக்கு மீண்டும் சாத்தியமாகுமா? அல்லது சவாலாகுமா?
2021 பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுகவின் சாதனை, அந்தக் கட்சிக்கு மீண்டும் சாத்தியமாகுமா? அல்லது சவாலாகுமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆத்தூர் பேரவைத் தொகுதி. நெல், தென்னை, பந்தல் காய், காபி, மிளகு உற்பத்தி இங்கு சிறப்பு பெற்றுள்ளது. சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலை உற்பத்தி இந்தத் தொகுதிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 47 ஊராட்சிகள், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் ஆகிய 7 பேரூராட்சிப் பகுதிகள் இந்தத் தொகுதிக்குள்பட்டவை.
Advertisement
சமூக நிலவரம்: ஒக்கலிக கவுடர், பட்டியலினத்தோர், முக்குலத்தோர், வெள்ளாளர், மூப்பனார், செட்டியார், 24 மனை தெலுங்கு செட்டியார், வன்னியர், கிறிஸ்தவ வன்னியர், நாயக்கர், யாதவர், அருந்ததியர், வலையர் சமுதாய மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். சித்தையன்கோட்டை, ஆத்தூர், ஸ்ரீராமபுரம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
பிரச்னைகள்: கீழ்பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதியின் முதன்மைத் தொழிலாக உள்ள விவசாயம், தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்தத் தொகுதியின் முதன்மை நீராதாரமான கொடகனாற்றின் பாசனம், ஆத்தூரை அடுத்த அனுமந்தராயன்கோட்டை கிராமத்தின் வடபகுதிக்கு கிடைப்பதில்லை. இதனால், இந்தப் பகுதியின் வேளாண்மை மழையை நம்பியே உள்ளது.
இதேபோல, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் இந்தத் தொகுதி மக்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. மேலும், மண் கடத்தல் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாதனை படைத்த திமுக: இந்தத் தொகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. 1962 முதல் 2021 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் திமுக 9 முறையும் , அதிமுக 5 முறையும் வென்றுள்ளன. இந்தத் தொகுதியில் கடந்த 2021 பேரவைத் தேர்தலில் அமைச்சர் இ. பெரியசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரைவிட 1.35 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்: நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் இ. பெரியசாமி, அதிமுக சார்பில் ஆ. விசுவநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் சைமன் ஜஸ்டின், தவெக சார்பில் கலைச்செல்வி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தொடர் வெற்றியில் இ. பெரியசாமி: இந்தத் தொகுதியில் 1989 முதல் 2021 வரை நடைபெற்ற 8 பேரவைத் தேர்தல்களில் களம் கண்ட அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான இ. பெரியசாமி, இதுவரை 6 முறை வென்றுள்ளார். இதில் கடந்த 2006 முதல் 2021 வரை நடைபெற்ற 4 தேர்தல்களிலும் இவர் தொடர்ந்து வென்றுள்ளார். தற்போது, 9} ஆவது முறையாக இந்தத் தொகுதியில் இ. பெரியசாமி களம் காண்கிறார்.
தொகுதி மக்களிடம் குடும்ப உறுப்பினரைப் போன்று பழகக்கூடியவர் என்பது இவருக்கு மிகப் பெரிய பலம். இதுவே இவரது தொடர் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. இருப்பினும், 2 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டதைத் தவிர, எதிர்காலத் தேவைக்கான தொலைநோக்குத் திட்டங்களுக்கு, வளர்ச்சிக்கு இ. பெரியசாமி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற ஆதங்கம் பரவலாக உள்ளது.
முதல் முறை களம் காணும் அதிமுக வேட்பாளர்: இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் அந்தக் கட்சியின் மாவட்டப் பிரதிநிதியான ஆ. விசுவநாதன். உணவகத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், தற்போது முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு, கட்சி நிர்வாகிகளின் களப் பணி தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என நம்புகிறார் விசுவநாதன்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அந்தக் கட்சியின் ஒருங்கிணைந்த மண்டலப் பொறுப்பாளரான சைமன் ஜஸ்டின் களமிறங்கியுள்ளார். இவர், கடந்த 2021 பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 17,168 வாக்குகளைப் பெற்றார். மக்கள் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுத்த வகையில், தொகுதியில் பரவலாக அறிமுகம் பெற்றவர். பல மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரசாரம், அந்தக் கட்சி நிர்வாகிகளின் தேர்தல் பணி ஆகியவற்றை பலமாகக் கருதுகிறார்.
தவெக வேட்பாளர்: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அந்தக் கட்சியின் மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி போட்டியிடுகிறார். இவர், திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். தவெக தலைவர் விஜய்க்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு தனக்கு வெற்றியைத் தரும் என நம்புகிறார் கலைச்செல்வி.
ஆத்தூர் தொகுதியைப் பொருத்தவரை இ. பெரியசாமிக்கு உள்ள அறிமுகம், களத்தில் உள்ள மற்ற எந்த வேட்பாளருக்கும் கிடையாது.
அதேநேரத்தில், இவர் பலமுறை இந்தத் தொகுதியில் வென்றிருந்தாலும், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பெருந்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் பரப்புரையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்தத் தொகுதியில் கடந்த முறை திமுக, பாமக இடையே போட்டியிருந்தது. ஆனால், தற்போது, திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது, திமுகவின் சாதனை வெற்றியைத் தொடர அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. மேலும், வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி, புதிதாகக் களம் காணும் தவெக ஆகியவற்றின் வாக்குகள் ஏற்படுத்தும் தாக்கம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.