முகப்பு
நேர்காணல்கள்

மதச்சார்பின்மையின் முகம் விஜய் அல்ல, காங்கிரஸ்! முன்னாள் எம்.பி. பெ. விஸ்வநாதன் சிறப்பு நேர்காணல்

முன்னாள் மக்களவை உறுப்பினர் பெ. விஸ்வநாதன் சிறப்பு நேர்காணல்...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:09 AM
பெ. விஸ்வநாதான் - படம்: எக்ஸ்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:56 AM

அகில இந்திய காங்கிரஸ் செயலர், தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் என அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் பெ. விஸ்வநாதன். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரசார பணிகளுக்கிடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

நீங்கள் போட்டியிட மேலூர் தொகுதியைத் தேர்வு செய்தது எதனால்?

இந்தத் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. கட்சித் தலைமை இந்தத் தொகுதியில் போட்டியிட என்னைத் தேர்ந்தெடுத்தது. மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் மீது எனக்கு சிறு வயது முதலே மரியாதையும், ஈர்ப்பும் அதிகம். கக்கன் பிறந்த மேலூரில் இருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது. கக்கன் பிறந்த மேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எனது நீண்டகால விருப்பம். 'காங்கிரஸ் கட்சிக்காக நேர்மையாகப் பாடுபடும் எனக்கு கக்கன் பிறந்த ஊரான மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குரல் பதிவு அனுப்பினேன். அதை அவர் கனிவுடன் பரிசீலித்து, எனக்கு மேலூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கி, என் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

Advertisement

பொதுத் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதை எப்படி கருதுகிறீர்கள்?

'மேலூர் பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைவிட மாற்று சமுதாயத்தினரே அதிகம் என்பதால், பட்டியலினத்தைச் சேர்ந்த எனக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனப் பல கருத்துகள் கட்சியின் தலைமைக்கு பலரால் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற துணிச்சலான முடிவை மேற்கொண்டது ராகுல் காந்திதான். ஏதேனும் ஒரு தனித் தொகுதியில் வாய்ப்பளிக்கப்படுவதைவிட என் மீது நம்பிக்கை கொண்டு பொதுத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்ததை மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

பொதுத் தொகுதியில் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை சிலர் எதிர்க்கிறார்களே...

உள்ளூர் நிர்வாகிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஒவ்வொரு மாநில பேரவைத் தேர்தலின்போதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேரடியாக நியமனம் செய்வது வழக்கமானதுதான். இது என் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

தேர்தல் பிரசார களத்தில் காங்கிரஸின் இருப்பு பெரிய அளவில் இல்லை எனப்படுகிறதே?

தமிழகத்தைப் பொருத்தவரை. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் பிரசாரமே முதன்மை பெற்றிருக்கும். 1967-க்கு பிறகு திமுக, அதிமுக என ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடனே காங்கிரஸ் பயணிக்கிறது. இதிலிருந்து மாறுபட்டு காங்கிரஸ் மாற்று சக்தியாக உருவெடுப்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு சிந்திக்கலாம்.

தமிழகத்தில் பாஜக பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதாகத் தோன்றுகிறதே?

இந்தியாவின் எந்த மாநிலத்தில் காலூன்றினாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது. அதிமுக எனும் முகமூடியை அணிந்துகொண்டு தன்னை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் வெளிக்காட்டிக் கொண்டு தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் தனிப்பெரும் சக்தியாக தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவின் முயற்சிக்கு பலன் கிடைக்காது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து..?

ஆட்சி அதிகாரப் பகிர்வு கேட்டது உண்மைதான். தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பு இதைக் கேட்க உரிமை இருந்தது; கேட்டோம். தமிழகத்தைப் பொருத்தவரை, திமுக அல்லது அதிமுக தனித்து ஆட்சி அமைப்பதே வழக்கமாக உள்ளது. எனவே, இந்தக் கோரிக்கை தமிழகத்தில் எந்தக் காலத்திலும் தேர்தலுக்கு முன்பு சாத்தியமாகாது. ஏதேனும் ஒரு தேர்தல் முடிவு இதைச் சாத்தியமாக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தலில் கிடையாது. 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.

விஜய்யின் தவெக இந்தத் தேர்த லில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?

எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கியபோது நாஞ்சில் மனோகரன், கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி சோம்சுந்தரம் போன்ற அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் அவருடன் இருந்தனர். அது, அவருக்குப் பேருதவியாக இருந்தது. ஆனால், விஜய் அரசியல் அனுபவம் கொண்டவர்களை அரவணைத்துக் கொள்ளாமல் கட்சி நடத்துகிறார். அவருக்கு எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ரசிகர்கள் கூட்டம் வேறு, கொள்கை அடிப்படையில் இணைந்த கூட்டணி வேறு. விஜய் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் பிரிப்பார் எனக் கூறப்படுகிறதே?

சிறுபான்மையினர் நலனுக்காக விஜய் எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். எத்தனை முறை சிறை சென்றார்? அவரால் சிறுபான்மை வாக்குகள் பிரிக்கப்படும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேசிய அளவில் மதச்சார்பின்மையின் முகமாக அறியப்படுவது காங்கிரஸ் கட்சி. இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு குரல் எழுப்பியதில் காங்கிரஸ் கட்சிக்கு ஈடு இணையாக எந்தக் கட்சியும் கிடையாது. இதேபோல. தமிழகத்தில் மதச்சார்பின்மையின் அடையாளம் திமுக. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே சிறுபான்மையினரின் வாக்குகள் உறுதியாகக் கிடைக்கும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் திமுகவினரே நிபுணத்துவம் பெற்றவர்கள். அந்த நிபுணத்துவத்தை அதிமுக தேர்தல் அறிக்கையில் காண முடியாது.

பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை எனக் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

உண்மைதான். பாஜகவை விஜய் விமர்சிப்பதே இல்லை. அவர் நிறைய சிக்கல்களில் உள்ளார். அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காகவே பாஜகவை அவர் விமர்சிப்பதில்லை. இதற்கான உடன்பாடு கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையின்போது ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

எப்படி உள்ளது தேர்தல் களம்?

திமுக அரசு செயல்படுத்திய மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கடுத்து திமுகவின் தற்போதைய தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு. இவையே திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றிக்குப் போதுமானது. இவற்றுக்கெல்லாம் மேலாக திமுகவினரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு இணையான தேர்தல் பணி கூட்டணியின் மகத்தான வெற்றியை உறுதி செய்யும்.

நேர்காணல் : எம். சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.