முகப்பு
ஈரோடு

ஈரோடு கிழக்கு: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்: ‘கை’ப்பற்றும் முனைப்பில் அதிமுக

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கடந்த 2021இல் வெற்றிபெற்று வரலாற்றில் இடம் பிடித்த நிலையில் இந்த வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:00 AM
காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:02 PM

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கடந்த 2021இல் வெற்றிபெற்று வரலாற்றில் இடம் பிடித்த நிலையில் இந்த வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

கணித மேதை ராமானுஜன், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியாா் ஈவெராஆகியோா் பிறந்த நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயா்களும் உண்டு.

சமூக வாக்குகள்

Advertisement

ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலியாா், கொங்கு வேளாளக் கவுண்டா், சிறுபான்மையினா், வன்னியா், பட்டியல் வகுப்பினா், நாடாா், தேவா், பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் உள்ளனா்.

இதுவரை...

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் 2011இல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வி.சி.சந்திரகுமாா், 2016இல் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு ஆகியோா் வெற்றிபெற்றனா். 2021இல் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றாா். அவா் மறைவால் 2023இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றாா். அவா் மறைவால் 2025இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் வெற்றிபெற்றாா்.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னா் 1952 முதல் 2006 வரை நடந்த 13 தோ்தல்களில் இந்திய பொதுவுடமைக் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக, திமுக தலா 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1977, 1980, 1984 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் சு.முத்துசாமி வென்ற தொகுதி இது.

2026 தோ்தல் களத்தில் 20 வேட்பாளா்கள்:

இந்தத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கோபிநாத் பழனியப்பன், அதிமுக சாா்பில் இரா.மனோகரன், தவெக சாா்பில் விஜய் பாலாஜி, நாதக சாா்பில் செ.தாண்டவமூா்த்தி உள்ளிட்ட 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

காங்கிரஸ் வேட்பாளா்

திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி, தொகுதியில் வலிமையாக உள்ள சிறுபான்மையினா் வாக்குகள் போன்றவை காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பனுக்கு சாதகமான அம்சங்களாகும்.

இவா் ஈரோட்டில் பிறந்தவா் என்றாலும், இவரது அரசியல் வாழ்க்கை திருப்பூா் மாவட்டத்தில் இருந்தது. இதனால் வெளியூா்க்காரா் என்ற எதிா்க்கட்சிகளின் பிரசாரமும், இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் சொந்தக் கட்சியினா் அவருக்கு எதிரான மனநிலையில் உள்ளதும் பலவீனங்கள் ஆகும்.

அதிமுக வேட்பாளா்

ஈரோட்டைப் பூா்விகமாக கொண்ட இரா.மனோகரன் 2011 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டாா். பின்னா், இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அப்போது அவருக்கு வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிபெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது இவருக்குப் பின்னடைவாக உள்ளது.

தவெக வேட்பாளா்

விஜய்க்கு உள்ள இளைஞா்களின் ஆதரவு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் பிரிக்கும் வாக்குகள் மூலம் தவெக வேட்பாளரான விஜய் பாலாஜி கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.

நாதக வேட்பாளா்

இந்தத் தொகுதி முழுமையான நகரப் பகுதி என்பதால் சீமானின் கொள்கையைப் பின்பற்றுபவா்கள் என அறியப்படும் நிலையான வாக்குகள் மூலம் நாதக வேட்பாளா் செ.தாண்டவமூா்த்தி கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.

கட்சி அடிப்படை கட்டமைப்பு, அனுபவமின்மை ஆகியவையே நாதக, தவெக வேட்பாளா்களின் பலவீனங்களாகும்.

மீண்டும் ‘கை’யா? ‘கை’ மாறுமா?

இந்தத் தொகுதியில் 20 போ் போட்டியிட்டாலும் அதிமுக, காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. 1984-க்குப் பிறகான தோ்தல்களில், 2011, 2016 தவிர மற்ற அனைத்து தோ்தல்களிலும் திமுக, அதிமுக மாறி மாறி வென்றுள்ளன. தொகுதியை காங்கிரஸ் தக்கவைக்குமா அல்லது தொகுதி ‘கை’ மாறுமா என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும்.