முகப்பு
நேர்காணல்கள்

தேசியக் கட்சிகளுக்கு இங்கே இடமில்லை! அமைச்சர் இ. பெரியசாமி சிறப்பு நேர்காணல்!

தமிழகத்தைப் பொருத்தவரை, தேசியக் கட்சிகள் இனி எந்தக் காலத்திலும் தனித்து வெற்றி பெற வாய்ப்பில்லை என அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.

Updated On : 22 மார்ச், 2026 at 10:49 PM
அமைச்சர் இ. பெரியசாமி
பகிர்:

தமிழகத்தைப் பொருத்தவரை, தேசியக் கட்சிகள் இனி எந்தக் காலத்திலும் தனித்து வெற்றி பெற வாய்ப்பில்லை என திமுக துணைப் பொதுச் செயலரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ. பெரியசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் சதுரங்கம் பரபரப்பாகியுள்ள நிலையில் தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தவெக போன்ற கட்சிகளால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோரிக்கை வலுத்திருக்கிறதே?

ஆரம்பம் முதலே, 1957 முதல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்ற தத்துவத்தை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை. மாநிலத்தில் வலிமையான அரசு அமைந்தால் மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் சார்ந்த முடிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்ற புரிதல் தமிழக மக்களிடம் உள்ளது. எனவே, கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

30 வயதுக்குள்பட்ட இளைஞர்களின் ஆதரவு தவெகவுக்கே இருப்பதாகக் கூறப்படுவது தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதில் எந்தவித உண்மையும் இல்லை. திமுகவின் இளைஞரணி முதல்வர் மு.க. ஸ்டாலினால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. தற்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார். எனவே, ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவும் தவெகவுக்குதான் என்பது சிலரால் உருவாக்கப்படும் மாயை. இளைஞர்களின் வாக்குகள் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரியும் என்பதே உண்மை. அதேநேரத்தில், ஆட்சி அதிகாரத்தை மட்டுமல்ல; தமிழகத்தின் ஒரு தொகுதியைக்கூட தவெகவால் கைப்பற்ற முடியாது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களின் வருகை திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதா?

திமுகவை பொருத்தவரை தலைமை மேற்கொள்ளும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதே வழக்கம்.

திமுகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் இருந்த தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை திமுக தன் தோழமைக் கட்சிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து...?

இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துவிட்டன. கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், பாலியல் வன்முறைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தும் பரப்புரையை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

இந்தியாவிலேயே அமைதியான ஒரே மாநிலம் தமிழகம்தான். சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் எந்தவித பாரபட்சங்களுக்கும் இடமளிக்காத வகையில் காவல் துறையை முதல்வர் நிர்வகிக்கிறார். பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலமாக உள்ளது தமிழகம்.

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் மீது தேசியக் கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறதே?

தமிழகத்தைப் பொருத்தவரை, தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும் தேர்தலை தனித்துச் சந்திக்க வாய்ப்பில்லை. தேசியக் கட்சிகளுக்கு இங்கே இடமில்லை. மாநிலக் கட்சிகளின் மீது அதிகாரம் செலுத்தும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது. பாஜகவின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. மாநிலக் கட்சிகளின் அதிகாரத்தைப் பறித்து அந்தக் கட்சிகளை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே பாஜகவின் முக்கியப் பணி.

திமுகவில் வாரிசு அரசியல் நிலவுகிறது என்கிற குற்றச்சாட்டு குறித்த உங்கள் கருத்து என்ன?

என்னுடைய குடும்பத்திலேயேகூட நான் எப்போதுமே குடும்ப அரசியலை விரும்பியவனல்ல. அதனால்தான் எனது இளைய மகன் அரசியலில் இல்லை. மூத்த மகன் செந்தில்குமாரும் வழக்குரைஞராக வேண்டும் என்றுதான் விரும்பினேன். அவர் திமுக இளைஞர் அணியில் சேர்ந்ததும், கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியதும் அவரது சொந்த விருப்பம்தானே தவிர, எனது விருப்பத்தாலோ, வழிகாட்டுதலாலோ அல்ல.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்ற முறையில் உங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் கிராமப்புறச் சாலைகள் திட்டம் மூலம் சுமார் 22,000 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. ஒரு கி.மீட்டருக்கு குறைவாக உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் இடமில்லை. இருப்பினும், மக்களின் நலன் கருதி ஒரு கி.மீட்டர் தொலைவுக்கும் குறைவாக இருந்த மண் சாலைகளும் தார் சாலைகளாக மேம்படுத்தப்பட்டன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டது. மேலும், 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலிருந்த பட்டியலின மக்களின் வீடுகள் ரூ. 2,000 கோடி செலவில் சீரமைக்கப்பட்டன. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 39 கோடி வேலை நாள்கள் பணி வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் மூலம் ரூ.13,000 கோடியில் பல்வேறுத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்பட்ட மனநிறைவு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.