முகப்பு
இந்தியா

திமுக இல்லை! இந்தியா கூட்டணியில் யார் யார்?

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பற்றி...

Updated On : 8 ஜூன் 2026, 4:36 pm IST
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் - PTI
பகிர்:

இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் புறக்கணித்த நிலையில், 25 கட்சிகள் பங்கேற்றதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி, எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் முக்கிய கட்சிகளாக அங்கம்வகித்த திமுகவும், ஆம் ஆத்மி கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்தாண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியே களம் கண்ட நிலையில், அப்போதே இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது.

இதனிடையே, தமிழ்நாடு பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக கடுமையாக சாடியது.

காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது.

இதனிடையே, நேற்று தில்லியின் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவர முயற்சித்தார். இருப்பினும், அவரின் முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆலோசனையில் 25 கட்சிகள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

யார்யார் பங்கேற்பு?

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவரும் பிகார் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டோஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மூத்த நிர்வாகி சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவும், ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோர் இணையவழியாக கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ எம்.எல்., கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ராஷ்ட்ரிய லோக்தாந்திரிக் கட்சி (ஆர்.எல்.பி.), பாரத ஆதிவாசி கட்சி (பிஏபி), லோக் தளம், ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிசக் கட்சி (ஆர்.எஸ்.பி.), விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி (பி.டபள்யூ.பி.) ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

summary

No DMK - Who is in the INDIA alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.